search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.யால் வரி வருவாய் உயர்ந்தது - நாராயணசாமி தகவல்
    X

    ஜி.எஸ்.டி.யால் வரி வருவாய் உயர்ந்தது - நாராயணசாமி தகவல்

    ஜி.எஸ்.டி. அமலுக்கு முன்பு ரூ.1565 கோடியாக இருந்த வரி வருவாய், ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பிறகு ரூ.1861 கோடியாக உயர்ந்துள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    அன்பழகன்:- புதுவையில் ஜி.எஸ்.டி. வரி எப்போது கொண்டுவரப்பட்டது? வரி விதிப்பிற்கு முன், வரி விதிப்பிற்கு பின் நமக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு? ஜி.எஸ்.டி. வரியை முறையாக செயல்படுத்த விற்பனை வரித்துறையில் போதிய பணியாளர்கள் உள்ளனரா?

    முதல்-அமைச்சர் நாராயணசாமி: 1.7.2017 முதல் புதுவை மாநிலத்தில் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது.

    2017-18-ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்னர் உள்ள மாதங்களில் வாட் மற்றும் ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டிய 4 மாத வரி ரூ.609 கோடியே 36 லட்சம்.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பின்னர் 1718-ம் நிதியாண்டில் ஆகஸ்டு முதல் மார்ச் வரை வாட், சிஎஸ்டி, ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டிய வருவாய் ரூ.1252 கோடியே 23 லட்சம். ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பின்னர் ஏற்கனவே உள்ள 49 பணியிடங்களுடன் கூடுதலாக 13 பணியிடங்களை உருவாக்கி உள்ளோம்.

    புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களையும் சேர்த்து காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    அன்பழகன்:- ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியதால் வருவாய் அதிகரித்துள்ளதா? இல்லையா? மத்திய அரசு வரி இழப்பு ஏற்பட்டால் தருவதாக கூறினார்களே?

    நாராயணசாமி:- ஜி.எஸ்.டி. அமலுக்கு முன்பு ரூ.1565 கோடி வரி வருவாய் இருந்தது. ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பிறகு ரூ.1861 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஜி.எஸ்.டி.யால் வரி வருவாய் உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. அமல்படுத்திய இடைப்பட்ட 3 மாத காலத்தில் ஏற்பட்ட வரி இழப்பு ரூ.333 கோடி. இதை மத்திய அரசு தருவதாக உறுதியளித்துள்ளது.

    அன்பழகன்:- வணிக வரித்துறையில் 30 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் முறையாக வரியை வசூலிக்க முடியவில்லை. நகை கடையில் மதிப்பீட்டு ரசீது மட்டுமே தருகின்றனர். இதை கண்காணிக்க போதிய ஆட்கள் இல்லை. இதனால்தான் வரி குறைகிறது. ரெடிமேடு துணி கடைகளில் 50 சதவீத வரியை பில்லில் காட்டுவதே கிடையாது.

    நாராயணசாமி:- வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்தது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. துணை வணிக வரி அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம்.

    இதுதொடர்பாக ஒருவர் கோர்ட்டிற்கு சென்றுள்ளார். இதனால் உடனடியாக நியமிக்க முடியாமல் தடை ஏற்பட்டது. உதவி வணிக வரி அதிகாரியை நியமிக்க உள்ளோம். ஓட்டல்கள், துணி கடைகள், நகை கடைகளில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

    வணிகர்கள் முழுமையாக வரியை கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளேன். சோதனைக்கு சென்றால் வணிகர்கள் புகார் செய்கின்றனர்.

    சிவா:- வரி ஏய்ப்பு சோதனைக்கு அதிகாரிகள் சில குறிப்பிட்ட கடைகளுக்கே மீண்டும், மீண்டும் செல்கின்றனர்.

    ரூ.பல கோடி வரியை ஏப்பம் விட்டவர்கள் யார்? என்பது அதிகாரிகளுக்கு தெரியும். அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் சிறியளவில் வியாபாரம் செய்பவர்களுக்கே தொல்லை தருகின்றனர்.

    ரூ.ஒரு லட்சம் லாபம் பெறும் கடைக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கின்றனர். பெட்ரோல் பங்கில் ரூ.பலகோடி வரி பாக்கியை வசூலிக்காமல் விடுகின்றனர்.

    நாராயணசாமி:- பெட் ரோல், டீசல் வரியை கட்டாத பல நிறுவனங்களுக்கு 200 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.

    தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாநிலங்களில் சமாதான திட்டம் என்ற பெயரில் வரியை வசூலிக்கின்றனர். அதேபோல வரியை வசூலிப்பது தொடர்பாக பரிசீலனை செய்ய உள்ளோம்.

    வரி ஏய்ப்பு என்ற பெயரில் திட்டமிட்டு சில கடைக்கு செல்வதாக எங்களுக்கும் புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளோம். வணிகர்கள் தாமாகவே முன்வந்து உரிய வரியை செலுத்த வேண்டும் என மீண்டும் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×