search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prevent Robbery"

    புதுவையில் தொடரும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் சிவா பூஜ்ய நேரத்தில் பேசியதாவது:-

    புதுவையில் தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் கடந்த 3 மாதங்களாக அதிகளவில் அரங்கேறியுள்ளது. கோடை விடுமுறையில் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தவர்களின் வீடுகளை நோட்டமிட்டு குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது.

    முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை என நகர பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்தது. புதுவையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டினர். இதே நேரத்தில் கோவில் உண்டியல்களை ஒரு கும்பல் உடைத்து திருடிச்சென்றது.

    தேங்காய்திட்டில் அடுத்தடுத்து கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இதுபோல 15-க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் திருட்டு சம்பவங்கள் நடந்தது. நகர பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் தாலி செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடந்தது.

    பகல் நேரத்திலேயே அலுவலகத்திற்கு பணிக்கு செல்லும் பெண்களிடம் இருந்தும், வீடு திரும்பும் பெண்களிடமும் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டினர். இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. பத்திரிகைகளிலும் இதுதொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. இதுபோன்ற சம்பவங்கள் தற்போதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை.

    வழிப்பறி, கொள்ளை, திருட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்கவில்லை. அரசு இதுபோன்ற செயல்களில் செயல்படும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கடந்த காலத்தை போல இரவு முழுவதும் நகரை சுற்றி வர காவல் ரோந்து வாகனம்(100) மீண்டும் இயக்க வேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் ஜெயமூர்த்தி பேசும்போது, அரியாங்குப்பத்தில் 3 இடத்தில் திருட்டு சம்பவம் நடந்தது. திருடர்களை பிடிக்கவில்லை என்றார்.

    இதையடுத்து அதி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், இரவு நேரத்தில் காரில் வருபவர்கள்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வீடுகளை நோட்டமிடுகின்றனர். காரில் வருபவர்களை சோதனை செய்தாலே திருட்டு சம்பவங்கள் குறைந்துவிடும். முதல்-அமைச்சர் வழக்குப் பதிவு செய்வதாக கூறுகிறார். ஆனால் 25 நாட்களுக்கு முன்பு சோலை நகரில் ஒரு வீட்டில் 20 பவுன் நகையை திருடிவிட்டனர். இந்த வழக்கை பதிவு செய்ய போலீசார் முன்வரவில்லை.

    திருட்டு, கொள்ளையை கண்டுபிடிக்கிறார்களோ? இல்லையோ? முதலில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவையில் சில இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் சில பகுதிகளில் கடந்த 3 மாதம் முன்பு நடந்தது. இதை வெளிமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடிச்சென்றனர். இதுகுறித்து காவல்துறையை அழைத்து பேசினேன். பொதுவாக காவல்துறை நள்ளிரவு 12 மணி வரை ரோந்து செல்வார்கள். அதன்பிறகு செல்லமாட்டார்கள். அதிகாலை வரை ரோந்து செல்லும்படி கேட்டுக் கொண்டேன். போலீசாரும் அதிகாலை வரை ரோந்து செல்கின்றனர். இதனால் ஒன்றரை மாதமாக திருட்டு குறைந்துள்ளது. போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இரவு நேரத்தில் போலீசார் பணியாற்றுகிறார்களா? என டி.ஜி.பி., எஸ்.எஸ்.பி. பார்வையிடவும் கூறியுள்ளேன். கடந்த காலத்தில் திருட்டு, கொள்ளை வழக்கு பதிவு செய்யமாட்டார்கள். தற்போது புகார் கொடுத்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. நான் எம்.பி.யாக இருந்தபோது காவல்துறைக்கு ரோந்து வாகனம் வழங்கினேன். தற்போது எம்.பி.க்களிடம் காவல்துறைக்கு ரோந்து வாகனம் வழங்கும்படி கேட்டுள்ளோம். 10 ரோந்து வாகனம் விரைவில் வழங்கப்பட்டு ரோந்து பணி துரிதப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×