செய்திகள்

ஏரி, குளங்களில் உள்ள மணலை எடுத்துக்கொள்ளலாம்: தமிழக அரசின் அறிவிப்புக்கு குமரிஅனந்தன் வரவேற்பு

Published On 2017-04-30 03:39 GMT   |   Update On 2017-04-30 03:39 GMT
ஏரி, குளங்களில் உள்ள மணலை எடுத்துக்கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு குமரிஅனந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:

காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏரி, குளங்களில் தூர்வார வேண்டும் என்றும், அப்படி அகற்றும் களி மண்ணையும், சவுடு மண்ணையும் குறிப்பிட்ட அளவு விவசாயிகள் தமதாக்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. மீதியுள்ள களிமண்ணை ஏரி, குளங்களின் கரைகளைப் பலப்படுத்தப் பயன்படுத்த வேண்டும். அந்தக் கரைப் பகுதியில் பனை விதைகளைப் புதைத்தால் அவை வளர்ந்து தமது வேர்களால் கரையைப் பலப்படுத்தும். எட்டடி வரை தான் பனை மரங்கள் வேர் விடுவதால் நீரை அதிகம் உறிஞ்சாது. ஓலைகள் பழுத்து விழுந்தாலும் நீர்ப்பரப்பில் இருந்து எளிதாக எடுத்துவிடலாம்.

மே மாதம் 1-ந் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மதுவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற துணை நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது. தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி தவிர அனைத்து கட்சியினரும் பூரண மதுவிலக்கை ஆதரிப்பதால் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளும் அரசும் உடனே முன்வர வேண்டும் என வேண்டுகிறேன். காந்தியின் கனவை நனவாக்குவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News