சிறப்புக் கட்டுரைகள்
மூளைக்கு யோகா சிகிச்சை

ஆரோக்கியம் நம் கையில்: மூளைக்கு யோகா சிகிச்சை- 134

Published On 2022-05-18 12:03 GMT   |   Update On 2022-05-18 12:03 GMT
மூளைக்கு யோகா சிகிச்சை அளிக்கும் முத்திரைகள் தொடர்பாக யோகக் கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
நமது மூளையை முழுமையாக பயன்படுத்தினால் முழு ஆரோக்கியம் கிடைக்கும்
பொதுவாக மனிதர்கள் ஒரு செயல் தவறாக செய்துவிட்டு அதன் விளைவை பார்த்து எனக்கு மூளையே இல்லை, இப்படி தவறு செய்துவிட்டேனே என்பார்கள்.  சிலர் என் மூளை வேலை செய்யவில்லை என்பார்கள்.  வாழ்வில் ஏதாவது தவறு செய்தாலும் நாம் உடன் மூளை வேலை செய்யவில்லை என்று கூறுவது வழக்கம்.

மனித மூளையை முழுமையாகப் பயன்படுத்தினால் வாழ்வில் நிறைய விஷயங்களை சாதிக்கலாம்.  நமது மூளை திறன் அளவிடற்கரியது.  சுவாமி விவேகானந்தர் உலகம் முழுக்க சென்று இளைஞர்களுக்கு தனது உரையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.  அவரது அறிவாற்றலை கண்டு உலகமே வியந்து வணங்கியது.  எப்படி உங்களால் இவ்வளவு சுறுசுறுப்பாக வாழ முடிகின்றது என்று கேட்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அற்புதமான சக்தி சமமாகத்தான் உள்ளது.  நமது  மூளையை சரியாக உபயோகித்தால் ஒவ்வொரு மனிதனும் மாமனிதனாக திகழலாம் என்பது தான் அவர் விடையாகும். ஆம் ஒவ்வொரு மனிதனும் தனது மூளையை சரியாக உபயோகிக்கும்  தன்மையை புரிந்து கொண்டு வாழந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும். 

மூளையும் முதுகுத்தண்டும்

மூளை நன்கு இயங்க முதுகுத்தண்டு திடமாக இருக்க வேண்டும்.  முதுகுத்தண்டுதான் மூளை வழியாக வரும் செய்திகளை நமக்கு உடன் தெரிவிக்க ஒரு பாலமாக அமைகின்றது.  ஒரு மனிதனுடைய மூளை நரம்புகள், மூளை செல்கள் நன்கு இயங்க வேண்டுமெனில் முதுகுத்தண்டுவடம் திடமாக இருக்க வேண்டும்.  உடலில் நரம்பு மண்டலம், மூச்சோட்ட மண்டலம், ஜீரண மண்டலம் நன்றாக இயங்க வேண்டும்.  அப்பொழுது தான் மூளை செல்கள் நன்கு சக்தி பெற்று இயங்கும்.  அதற்குத்தான் யோகக்கலை பயன்படுகிறது.

சில குறிப்பிட்ட யோகாசனங்களையும் முத்திரையையும் செய்தால் மூளை செல்கள் நன்கு இயங்கும்.  வலது மூளை, இடது மூளை இரண்டு பகுதிக்கும் இரத்த ஓட்டம், மூச்சோட்டம் நன்கு கிடைக்கப் பெற்று சிறப்பாக மூளை இயங்கும். மூளைத்திறனை சரியாகப் பயன்படுத்த செய்ய வேண்டிய ஆசனங்கள் 

அர்த்த சிரசாசனம்



விரிப்பில் வஜ்ரா சனத்தில் அமர்ந்து முட்டி போட்டு குனிந்து உச்சந்தலை தரையில் படும்படி வைக்கவும்.  கைகளை தலைக்கு பின்னால் குவிக்கவும்.  பின் மெதுவாக உடலை குன்றுபோல் படத்தில் உள்ளது போல் வளைக்கவும். பத்து முதல் பதினைந்து வினாடிகள் இருக்கவும்.  பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.  இதுபோல் மூன்று தடவைகள் காலை / மாலை பயிற்சி செய்யவும்.

பத்மாசனம்

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  இடது காலை வலது தொடை மீது வைக்கவும்.  வலது காலை இடது தொடை மீது வைக்கவும்.  இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்கவும். (பெருவிரலால், ஆள்காட்டி விரல் நுனியை தொடவும்.) சாதாரண மூச்சில் இருக்கவும்.  இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.

பலன்கள்

வலது கால், இடது தொடையிலும், இடது கால் வலது தொடையிலும் அமுக்கப்படுவதால் வலது பக்க மூளை, இடது பக்க மூளைக்கு நல்ல இரத்த ஓட்டம் செல்லும், மூளை நரம்புகள் சிறப்பாக இயங்கும்.  மூளை செல்கள் நன்கு பிராண சக்தி பெற்று இயங்கும்.  வலது மூளை, இடது மூளை மிகச் சிறப்பாக இயங்கும்.  எதிர்மறை எண்ணங்கள் வராது.  நேர்முகமான எண்ணங்கள் அதிகரிக்கும்.  எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவும், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் பயன்படுகிறது.

மச்சாசனம்



விரிப்பில் நேராகப்படுக்கவும்.  கைகளின் உதவியால் உச்சந்தலையை தரையில் படும்படி வைத்து கைகளை கால் முட்டி மீது வைக்கவும்.  படத்தைப் பார்க்கவும்.  சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் முதல் 20 வினாடிகள் இருக்கவும்.  பின் கைகளின் உதவியால் தலையை நேராக கொண்டுவரவும்.  இரண்டு முறைகள். காலை / மாலை பயிற்சி செய்யவும்.

பலன்கள்

மூளை நரம்பு மண்டலங்கள் மிக நன்றாக இயங்கும்.  மூளை செல்களுக்கு இரத்த ஓட்டம் நன்கு பாயும்.  மூளையின் திறனை நாம் உபயோகப்படுத்த வழிவகுக்கும்.  நுண்ணறிவு என்று கூறும் அறிவுத்திறன் மிளிரும்.  அதற்கு மூளை நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும் தன்மையை இந்த ஆசனம் கொடுக்கின்றது.

எளிமையான மூச்சுப்பயிற்சி

நிமிர்ந்து அமருங்கள்.  இரு நாசிவழியாக மிக மிக மெதுவாக மூச்சை இழுக்கவும்.  மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.  இப்படி செய்யும் பொழுது மூளைக்கு நன்கு பிராண சக்தி கிடைக்கின்றது.  மூளை நரம்பு மண்டலங்கள் பிராண ஆற்றல் பெற்று சிறப்பாக இயங்குகின்றது.  இதனை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

முத்திரைகள் - பிரிதிவி முத்திரை

நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் மோதிர விரலால் பெருவிரல் நுனியைத் தொடவும்.  மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.  இரு கைகளிலும் செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் செய்யவும்.  காலை / மாலை இரு வேளையும் செய்யவும்.

ஹாக்கினி முத்திரை 

நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் எல்லா கை விரல் நுனிகளையும் சேர்த்து படத்தில் உள்ளதுபோல் ஒரு பந்து வடிவில் வைத்து சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் இருக்கவும்.  காலை / மாலை இரு வேளையும் பயிற்சி செய்யலாம்.

பலன்கள்

மேற்குறிப்பிட்ட முத்திரைகள் அனைத்தும் மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்கச் செய்யும்.  மூளை செல்கள் நன்கு பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.

ஆக்ஞா தியானம்
 
விரிப்பில்  நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கை சின் முத்திரையில் வைக்கவும்.  பெருவிரலால் ஆள்காட்டிவிரல் நுனியை தொடவும்.  இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  ஐந்து முறைகள் செய்யவும்.  பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து தியானிக்கவும்.  நல்ல பிராண சக்தி அந்தப் பகுதி முழுவதும் கிடைப்பதாக எண்ணவும்.  ஐந்து நிமிடங்கள் நெற்றிப் புருவ மையத்தில் நிதானமாக  தியானிக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை தினமும் பயிலுங்கள்.  நிச்சயமாக நமது மூளையின் திறன் மேம்படும்.  நற்சிந்தனை பிறக்கும்.  நாம் நமது மூளை திறனால் அளவிடற்கரிய சாதனைகளை உலகில் நிகழ்த்தலாம்.  புது புது கண்டுபிடுப்புகளை சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கலாம்.  உங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே கற்றுக்கொடுங்கள்.  வளர்ந்து வரும் பொழுது சிறந்த அறிஞர் களாக அவர்கள் நினைத்த துறையில் சாதனை புரிந்து வெற்றியாளர்களாக விஞ்ஞானிகளாக உருவாகுவது உறுதி.

வாசகர் கேள்வி

முக வாதம் வந்து அதனால் இலேசாக வாய் கோணலாக உள்ளது.  உடலில் வாயுத் தொந்தரவும் அதிகமாக  உள்ளது.  பேசும் பொழுதும் திக்கு வாய் உள்ளது.  இதற்குரிய யோகா சிகிச்சை பற்றி கூறுங்கள். 

பதில்

நமது உடலில் வாதம் (காற்று) சரியான விகிதத்தில் இல்லாததால் தச வாயுக்களும் அதனதன் தன்மையில் இயங்காததால் இந்த பிரச்சனை வருகின்றது.  இதற்கு முத்திரையில் வாயு முத்திரை, அபான முத்திரை, அபான வாயு முத்திரை மூன்றையும் ஒரு சிகிச்சையாக இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

வாயு முத்திரை



நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் ஆள்காட்டி விரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும்.  இரு கைகளிலும் செய்யவும்.  இரண்டு நிமிடம் இருக்கவும்.  காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

அபான முத்திரை

நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.  பின் நடு விரல் மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும்.  இரு கைகளிலும் செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.  காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

அபான வாயு முத்திரை

நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும்.  பின் நடு விரல், மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும்.  உடன் ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடியில் வைக்கவும், சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கியிருக்கும் .  இரு கைகளிலும் செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.  காலை / மதியம் / மாலை மூன்று வேளைகளும் பயிற்சி செய்யவும்.

மேற்குறிப்பிட்ட மூன்று முத்திரைகளையும் ஒரு சிகிச்சையாக ஒன்றன்பின் ஒன்றாக பயிற்சி செய்யுங்கள்.  ஒரு மண்டலம் 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்யுங்கள்.  வாதம், முக வாதம், வாயு பிரச்சனை பசியின்மை, வயிறு உப்பிசம் நீங்கும்.

இத்துடன் உணவிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்.  கிழங்கு வகைகள் குறைத்து பழவகைகள் கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.  முடக்கத்தான் கீரை, பசலை கீரை, தண்டங்கீரை, அரைக்கீரை,உணவில் எடுங்கள்.  மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை மாதம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.  கொய்யாபழம், மாதுளம்பழம்,  உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.  இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com
Tags:    

Similar News