சிறப்புக் கட்டுரைகள்

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க கல்விக்கடன் பெறுவது எப்படி?

Published On 2024-05-24 10:45 GMT   |   Update On 2024-05-24 10:46 GMT
  • கல்லுரியில் சேர இயலாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏராளமான மாணவர்கள் உள்ளனர்.
  • வங்கிகளைப் பொறுத்து 8 சதவீதம் முதல் தனி வட்டியாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த வாரங்களில் வெளிநாடுகளில் சென்று மருத்துவக்கல்வி (M.B.B.S) பயில்வது குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள், தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகள் மற்றும் அட்மிஷன் நடைமுறைகள் குறித்து பார்த்தோம். தற்போது மாணவர்கள் வங்கிகளில் கல்வி கடன் பெறுவது எப்படி? மற்றும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி முடித்து இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்வது எப்படி? என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வங்கிகளில் கல்விக் கடன்: மாணவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவக்கல்விக்கான சேர்க்கை கிடைத்தும், கல்லுரியில் சேர இயலாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு நமது அரசாங்கங்கள் எடுத்த சிறப்பான முன்னெடுப்பு கல்விக் கடன் திட்டமாகும்.

முதன்முதலில் பாரத ஸ்டேட் வங்கியால் 1995-ல் துவங்கப்பட்ட கல்விக்கடன் திட்டமானது பின்பு 28-04-2001ல் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் முறைப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது மாணவர்கள் மிக எளிதாக கல்விக்கடன் பெறும் நோக்கில் இந்தியாவில் உள்ள சுமார் 240 வங்கிகள் (அரசு மற்றும் தனியார்) சேர்ந்த இந்திய வங்கிகள் சங்கம்

மூலம் கல்விக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்விக்கடன் வழிமுறைகள்:

1) அதன்படி மாணவர்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாகவே தேவையான ஆவணங்களுடன் www.vidyalakshmi.co.in என்ற ஒருங்கிணைந்த முகவரியில் பதிவு செய்து கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

2)மாணவர்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் வங்கிகள் online வாயிலாகவே ஒப்புதல் வழங்கும். அதிகபட்சம் 30 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

3) அதன்பின் மாணவர்கள் நேரில் வங்கியை அணுகி தேவைப்படும் சான்றிதழ்களை சமர்ப்பித்து கடன் அனுமதி கடிதத்தை பெற்றுக் கொள்ளலாம்.

4) தற்போது பெரும்பாலான வங்கிகள் மாணவர்களின் கல்லூரி கட்டணத்தை நேரடியாக வெளிநாட்டு கல்லூரிகளின் வங்கிக் கணக்கிலே SWIFT என்ற பன்னாட்டு பரிவர்த்தனை மூலம் செலுத்தி விடுகின்றன.

5) மாணவர்களுக்கு கடன் அனுமதி (Loan Sanction) செய்யப்படும் மொத்த தொகையை 6 வருடங்களுக்கு சமமாகப் பிரித்து ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாணவர்களின் தகுதி மற்றும் ஆவணங்கள்

1) மாணவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

2)10, பிளஸ்2 முறையில் தேர்ச்சி பெற்று அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு கல்லூரியில் அட்மிஷன் பெற்றிருக்க வேண்டும்.

அனிதா காமராஜ்

3)மாணவன் மற்றும் பெற்றோரின் அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று.

4)கல்லூரியில் பெறப்பட்ட கல்லூரி கட்டண விவரத்துடன் கூடிய அட்மிஷன் லெட்டர்.

5)மாணவனின் மதிப்பெண் சான்றிதழ் நகல்.

6)கடவுச்சீட்டு நகல்.

7)வங்கிகள் கேட்கும் ஜாமீன்தாரர் (ஜாமீன் சொத்து விவரங்கள்)

மாணவர்களுக்கு 3 விதமான கல்விக் கடன் திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:

ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடன் பெற மாணவர்கள், பெற்றோருடன் சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்தவிதமான ஜாமீனும் தேவையில்லை. மாணவர்களின் அடிப்படை ஆவணங்களை மட்டுமே வைத்து இது செயல்படுத்தப்படுகிறது.

ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக் கடன் பெற பொருத்தமான ஜாமீன் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது அரசுப் பணியில் உள்ள மாணவர்களின் பெற்றோரோ அல்லது வேறு அரசுப் பணியில் உள்ள உறவினர்களோ அவர்களின் சம்பள சான்றிதழுடன் ஜாமீன்தாரராக கையெழுத்திட வேண்டும். அவ்வாறு செய்தால் மேற்படி கல்விக்கடனை எளிதாகப் பெற இயலும்.

ரூ.7.5 லட்சத்திற்கு அதிகமான முழு படிப்பிற்கும் தேவையான கல்விக்கடன்:

வெளிநாடுகள் மற்றும் கல்லூரிகளை பொறுத்து மாணவர்களின் முழு கல்விக்கும் தேவையான கல்விக் கடன் பெற மாணவர்கள் கண்டிப்பாக கடன் தொகைக்கு ஈடான அசையா சொத்துக்கள் ஏதேனும் (பெற்றோருடையதோ அல்லது உறவினர்களுடையதோ) வங்கியில் ஜாமீனாக சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலும் தற்போதைய நடைமுறையில் சமர்ப்பிக்கப்படும் சொத்து மதிப்பில் 75 சதவீதம் கடனாக வழங்கப்படுகிறது.

மாணவர்கள் கல்லூரி கட்டணம் மற்றுமின்றி உணவு, தங்குமிடம், புத்தகம், பயண கட்டணம் மற்றும் இதர செலவுகள் என கல்விக்கான முழுமைக்குமான செலவுகளும் கல்விக்கடன் மூலம் வழங்கப்படுகிறது.

வட்டி விவரம்: கல்விக்கடனாக இருந்தாலும் வங்கிகள் அவ்வப்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதம் இதற்கும் பொருந்தும். வங்கிகளைப் பொறுத்து 8 சதவீதம் முதல் தனி வட்டியாக வசூலிக்கப்படுகிறது.

திருப்பி செலுத்தும் காலம்: கல்வி காலம் முடிந்ததில் இருந்து ஒரு வருடம் கழித்தோ அல்லது வேலை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து ஆறு மாதத்திற்கு பிறகோ, (இதில் எது முன்னதாக வருகிறதோ அதன்படி) திருப்பி செலுத்தலாம்.

இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்தல்:

பல்வேறு வெளிநாடுகளில் மாணவர்கள் மருத்துவக்கல்வி முடித்து பட்டம் பெற்றாலும், அவர்கள் இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்ய வேண்டுமானால் இங்கு நடத்தப்படும் FMGE எனப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது தற்போது வரை இந்தியாவை தவிர வேறு எந்த வெளிநாடுகளில் சென்று மருத்துவக் கல்வி படித்து முடித்தாலும், அவர்களுக்கு இந்தியாவில், முந்தைய "Medical Council of India" ன் 2002 தகுதி தேர்வு விதிமுறைகளின் படி FMGE எனப்படும் FOREIGN MEDICAL GRADUATE EXAMINATION தேர்வானது நடத்தப்படுகிறது.

இந்த தேர்வானது தேசிய மருத்துவக் கல்விக்கான தேசிய தேர்வு வாரியத்தின் (National Board of Examination) மூலமாக ஆண்டிற்கு இருமுறை அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வானது நடத்தப்படுகிறது.

FMGE தேர்வு முறை தேர்வு கட்டணம்:

மேற்கண்ட FMGE தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. 300 கேள்விகள் MCQ எனப்படும் ஒரு வார்த்தை கேள்விகளைக்கொண்ட தேர்வானது இரு பகுதிகளாக நடத்தப்படுகிறது. இதில் 150 மதிப்பெண்கள் எடுத்தாலே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுகிறது. இதில் எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது.

தற்போது தேர்வு கட்டணம் சுமார் ரூ.6,000/- ஆக உள்ளது.

INTERNSHIP - பயிற்சி மருத்துவர்:

FMGE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்து, அதன் வழிகாட்டுதலின்படி இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 12 மாதங்கள் கண்டிப்பாக பயிற்சி மருத்துவராகப் பணிபுரிய வேண்டும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் மாநிலங்களில் மருத்துவராக பணிபுரிய அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவ ஆணையத்தில் (Medical Council) பதிவு செய்து மருத்துவராகப் பணிபுரியலாம்.

இந்தியாவின் M.B.B.S. மற்றும் வெளிநாடுகளின் M.D:

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் இளங்கலை மருத்துவப் படிப்பிற்கு M.D.(Medical Doctor) என்னும் பட்டம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் M.D. என்பது M.B.B.S.க்குப் பிறகான முதுகலை மருத்துவப்படிப்பு ஆகும். எனவே இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கும் பொருட்டு வெளிநாடுகளில் வழங்கப்படும் M.D.பட்டம் இந்திய M.B.B.S-க்கு இணையானது என MCI-ம் தற்போது தேசிய மருத்துவ ஆணையமும் விளக்கமளித்துள்ளது.

விலக்கு அளிக்கப்பட்ட வெளிநாடுகள்:

FMGE தேர்வானது எல்லா வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்கும் பொதுவான நிலையில், சில நாடுகளுக்கு மட்டும் இந்திய தேசிய மருத்துவ ஆணையம் விலக்கு அளித்துள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, USA, UK போன்ற 5 நாடுகளில் மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்கு மட்டும் FMGE தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மேற்கண்ட நாடுகளில் மருத்துவக்கல்வி முடிவதற்கு அவர்களுக்கு அங்கேயே பல கட்ட கடுமையான தேர்வுமுறைகள் உள்ளன.

அரசு மருத்துவராகும் வாய்ப்புகள்:

வெளிநாட்டில் மருத்துவக்கல்வி பயின்ற மாணவர்கள் இந்தியாவில் FMGE தேர்வில் தேர்ச்சி பெற்று, ஓர் ஆண்டு உள்ளுறை பயிற்சியை இந்தியாவில் முடித்து விட்டால் அவர்கள் இந்தியாவில் மருத்துவக்கல்வி பயின்ற மருத்துவர்களுக்கு இணையானவர்கள் என்று இந்திய மருத்துவ ஆணையம் தெரிவிக்கின்றது. எனவே அவர்களும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தகுதி பெற்றவர்கள் ஆவர். இதுபோன்று ஏற்கனவே ஏராளமான மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் தற்போதைய முன்னெடுப்புகள்:

இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் உயர் அதிகார அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம், இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி முடித்த இந்திய மாணவர்கள் என அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பொதுவான ஒரு தகுதி தேர்வை கொண்டு வரும் நோக்கத்தில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்த தேர்வானது NEET நுழைவுத் தேர்வை போல NEXT என்ற பெயரில் மருத்துவக்கல்வி முடித்த அனைத்து இந்திய மாணவர்களுக்கும் இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிய தகுதித் தேர்வாக (Licence Exam) இருக்கும் விதமாக அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் FMGE என்னும் தேர்வுமுறை நீக்கப்பட்டு எல்லோருக்கும் பொதுவான ஒரே தேர்வுமுறை கொண்டு வரப்படும்.

வரும் வாரத்தில் பல்வேறு வெளிநாடுகளின் கல்விமுறை, கல்லூரி விவரம், காலநிலை, மாணவர்களுக்கான உயர் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

செல்: 94980 88890

Tags:    

Similar News