சிறப்புக் கட்டுரைகள்

ஆளி விதை-சியா விதைகளின் பயன்பாடு!

Published On 2026-02-09 17:37 IST   |   Update On 2026-02-09 17:37:00 IST
  • உணவில் தயிர் கடைசியாக இருக்கட்டும்.
  • சியா விதைகள் மத்திய அமெரிக்காவில் தோன்றிய ஒரு சிறிய விதை.

இன்றைய உணவு பழக்கங்களில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆளிவிதை எனப்படும் பிளாக்ஸ் விதைகளை மனிதனுக்கு கிடைத்த அதிர்ஷ்டங்களில் ஒன்று எனலாம். இது ஆரோக்கியத்தின் புதையல்.

* இருதய ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. இதிலுள்ள ஒமேகா 3 கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும். இருதய நோய்கள் பாதிப்பு வெகுவாய் குறையும். சைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ஒமேகா 3 ஆளி விதை மூலம் எளிதில் கிடைக்கும்.

* நார் சத்து மிகுந்தது. எனவே மலச்சிக்கல் இருக்காது. குடல் ஆரோக்கியமாய் சுத்தமாக இருக்கும்.

* பிராஸ்டேட், மார்பக புற்றுநோய் அபாயத்தினைக் குறைக்கும்.

* வயிறு நார்சத்து மூலம் நிறைவு கொள்வதால் எடை குறைப்புக்கு உதவும்.

* தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது முடிகொட்டுவது நிற்கும். சரும பொலிவு கூடும்.

ஆளிவிதை எடுத்துக் கொள்ளும் முறை:

* இதனை அப்படியே உட்கொண்டால் செரிமானம் இன்றி அப்படியே வெளியேறி விடும்.

* இதனை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பயன்படுத்தலாம். மோர், சூப், பருப்பு இப்படி எதிலும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

சில முக்கிய குறிப்புகள்:

* அதிக நார்சத்து கொண்டது என்பதால் தண்ணீர் நன்கு குடிக்க வேண்டும். நாள்முழுவதும் நன்கு நீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் வயிற்று வலி ஏற்படும்.

* கர்ப்ப காலத்தில் மருத்துவர் அறிவுரை பெற்றே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைந்த பலன் கொண்ட ஆளி விதையினை உணவில் சேர்த்து ஆரோக்கியத்தினை மேம்படுத்துவோம்.

* வயிறு உப்பிசம் நீங்க- சர்க்கரை சீஸ், சோடா, க்ளூெடன் தவிர்க்க வேண்டும்.

* 2 லிட்டர் நீர் அன்றாடம் அவசியம், இஞ்சி, சியா விதை, அன்னாசி, சோம்பு, வெள்ளரி இவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

கலோரி சத்தில் மாற்றம்: (100 கிராம் அளவு)

* வேக வைத்த சோளம் 96, கார்ன்பிளாக்ஸ் 285, வெண்ணெய் சேர்த்த பாப்கார்ன் 494.

* வேக வைத்த உருளை 91, பிரெஞ்ச் பிரை 214 உருளை சிப்ஸ் 510

* வாழைக்காய் 97, வாழைப்பழம் 116, வாழைக்காய் நேந்திரம் சிப்ஸ் சுமார் 450

கமலி ஸ்ரீபால்

 

* வாழைப்பழத்தினை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டாம். மக்னீசியம், கால்சியம் இவற்றில் பாதிப்பு ஏற்படலாம்.

* காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பது மந்தமாக உணரக் கூடும்.

* இரவில் கொட்டை வகை உணவு தூக்கத்தினை தொந்தரவு செய்யலாம்.

* காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது படபடப்பினை ஏற்படுத்தும்.

* இரவில் அரிசி உணவு கொழுப்பு சத்தினைக் கூட்டும்.

* வெறும் வயிற்றில் ஆரஞ்சு பழம் ஜுஸ் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.

* உணவில் தயிர் கடைசியாக இருக்கட்டும்.

* கிரீன் டீ: சில ஆய்வுகள் கூறும் கருத்துக்கள் கிரீன் டீ எடையை குறைக்கும்.

கல்லீரல் பாதிப்பு குறைய, சர்க்கரை நோய் பிரிவு 2 குறைய, மறதி நோய் பாதிப்பு குறைய கூட உதவுகின்றன என்பதுதான். மேலும் கூடுதல் ஆய்வுகள் கிரீன் டீ பற்றி தேவைப்பட்டாலும் சில நீண்ட கால உறுதியான பலன்களும் கூறப்படுகிறது.

* புற்றுநோய் அபாயத்தினைக் குறைக்கும். இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது. கவனிக்கும் கூர்மை திறன் கூடும். மறதிநோய் பாதிப்பு அபாயம் குறையும். கெட்ட கொழுப்பு குறையும். எடை குறையும்.

* வீக்கங்களை குறைக்கும். ஆகவே தினமும் இருவேளை கிரீன் டீ குடிக்கலாமே.

* மனித உறுப்புகளுக்கு பிடித்த உணவு

மூளைக்கு ஒமேகா 3 மிகவும் பிடிக்கும். ஞாபக சக்தி, கற்கும் திறன் இவையெல்லாம் ஒமேகா 3விடம் இருந்து நன்கு கிடைக்கும். கண் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது. மனநிலை நன்கு இருக்கும்.

* இரவில் சிலர் 10 மணிக்கு மேல்தான் சாப்பிடுவார்கள். இவர்களுக்கு எடை எளிதில் கூடும். இருதய பாதிப்பு ஏற்படும். தூக்கம் இருக்காது. சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் கூடும்.

* போதுமான அளவு (சுமார் 2 லி) அன்றாடம் நீர் குடிக்காதவர்களுக்கு அடர்ந்த சிறுநீர், வறண்ட உதடுகள், தலைவலி, சதை பிடிப்பு, வறண்ட சருமம், தலைசுற்றல், மலச்சிக்கல், சோர்வு, சோர்ந்து உள்வாங்கிய கண் ஆகிய பாதிப்புகள் இருக்கும்.

* சியா விதைகள்: சியா விதைகள் மத்திய அமெரிக்காவில் தோன்றிய ஒரு சிறிய விதை. அளவில் சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்து அடர்த்தி மிக அதிகம் கொண்டதால் இதனை உயர்ந்த உணவு என்று அழைக்கின்றனர். நம் நாட்டு உணவு முறைகளில் இதனை எளிதாக சேர்த்துக் கொள்ள முடியும்.

சியா விதைகளின் நன்மைகள்:

* நார்சத்து அதிகம். சியா விதைகளில் கரையக்கூடிய, கரையாத நார்சத்து அதிகமாக உள்ளது. இதனால் மலச்சிக்கல் குறைய உதவும். குடல் இயக்கத்தை சீராக்கும். நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சியா விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இதனால் கெட்ட கொழுப்பு குறைய உதவும். ரத்த அழுத்தம் சீராக பராமரிக்க உதவும். இதய நோய்களின் அபாய்த்தினைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ளது. உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை திடீரென உயர்வதை தடுக்க உதவும். எலும்பு மற்றும் பல் ஆரோக்கியம் கூடும். சியா விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் அதிகமாக உள்ளதால் எலும்பு உறுதி மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்.

* சியா விதைகள் தண்ணீரில் ஊறும் பொழுது ஜெல் போல் உறைகின்றன. விரிவடைகின்றன. இதனால் வயிற்றை நிறைவாக உணரச் செய்யும். அதிகமாக உண்பதை குறைக்கும். எடை குறைப்பு முயற்சிகளில் உதவியாக இருக்கும்.

* சியா விதைகள் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் கொண்டவை. இதனால் செல்கள் சேதமடைவதை தடுக்க முதிர்வை தாமதப்படுத்த உதவுகின்றன.

தினசரி சியா விதைகளை பயன்படுத்தும் முறைகள்:-

* ஒரு டீஸ்பூன் சியா விதைகளை மெலிதான வடிகட்டி மூலம் நன்கு கழுவி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலை வெறும் வயிற்றில் அப்படியே பருகலாம்.

* பால் (அ) தயிரில் கலந்து ஊற வைத்து காலை அல்லது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

* பழச்சாறு: ஆப்பிள், பப்பாயா, வாழைப்பழம் போன்ற பழசாறுகளில் ஊறிய சியா விதையினை கலந்து பருகலாம்.

* ஓட்ஸ், கஞ்சி, இட்லி மாவு தயாரிக்கும் போது ஊற வைத்த விதைகளை கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

* சாலட், சூப் இவற்றில் சேர்க்கலாம்.

* ஒரு நாளைக்கு 1 அல்லது 2 ஸ்பூன் விதைகள் போதுமானது. உலர்ந்த விதைகளை நேரடியாக சாப்பிடக் கூடாது. ஊற வைத்து எடுத்துக் கொள்வதே சிறந்தது.

* குடல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் சிறிய அளவில் ஆரம்பிக்க வேண்டும்.

* தைராய்டு, ரத்த அழுத்தம் பிரச்சினை இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூத்த வயதில் தசை இழப்பை தவிர்ப்பது எப்படி?

மனித வாழ்வில் இயல்பான ஒரு பகுதிதான் முதுமை. இக்காலத்தில் உடலில் பல மாறுதல்கள் ஏற்படும். தசை அளவு குறையும். நடப்பதில் சிரமம், விழுந்து காயம் ஏற்படும் சுய நம்பிக்கை குறையும். இப்படி பல பிரச்சினைகள் ஏற்படும் இதனை தவிர்க்க (அ) குறைக்க போதுமான புரதச்சத்து அவசியம். உடல் எடைக்கு ஏற்ற புரதம் தேவை.

* பால், தயிர், மோர், பருப்பு வகைகள், கொட்டை வகைகள், அசைவ வகைகள் உண்பவர்கள் முட்டை, மீன் எடுத்துக் கொள்ளலாம்.

* சோயா மற்றும் அதன் தயாரிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

* தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பயிற்சியாளர் வயது, உடல் நலத்திற்கேற்ப சொல்லித் தருவார். அவைகளை செய்ய வேண்டும். மெதுவான உடற்பயிற்சி, லேசான எடைப்பயிற்சி செய்யலாம்.

* வைட்டமின் டி, கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். உடல் இயக்கமற்று இருப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் படுத்திருப்பது, உட்கார்ந்திருப்பது போன்றவை தசை இழப்பினை ஏற்படுத்தும். வீட்டு வேலைகள், தோட்டப்பணி போன்றவை தசைகளை செயல்பட வைக்கும்.

* சர்க்கரை நோய், தைராய்டு, சிறுநீரக நோய் இவை தசை இழப்பை அதிகரிக்கும் என்பதால் சரியான கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி தசை இழப்பைத் தூண்டும். மன அமைதி, முறையான தூக்கம் இவை இரண்டுமே ஆரோக்கியத்தின் அடிப்படை ஆகும்.

உணர வேண்டிய சில உண்மைகள்:

* காலம் பணத்தை விடவும் கூட முக்கியமானது. (அனைவரும் அறிந்ததுதான்). ஆரோக்கியமே அனைத்து வெற்றிகளுக்கும் ஆதாரம். அதனால்தான் இத்தனை மருத்துவ கட்டுரைகள், மருத்துவர் பேட்டிகள் தொடர்ந்து வெளியாகின்றன. கவலைப்படும் அனைத்தும் அநேகமாக நடப்பதேயில்லை. உறவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. கருணை, அன்பு மிக அவசியம். பிறருக்காக வாழ வேண்டாம். எளிமையான வாழ்க்கையே அமைதி.

Tags:    

Similar News