- திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.
- முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.
வாழ்க்கை என்பது இன்றைய கால கட்டத்தில் ஒரு பெரிய சவாலாகவே இருக்கின்றது. எல்லோர் மனதிலும் எனக்கு மகிழ்ச்சியும் வேண்டாம். துக்கமும் வேண்டாம். பிரச்சினை இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடந்தால் போதும் என்றுதான் இருக்கின்றது. ஆனால் அதனை கடப்பதற்கே ஆரோக்கியம், படிப்பு, உத்தியோகம், வருமானம் இவை அடிப்படை தேவை ஆகின்றன. இதில் குடும்பம், உறவுகள் இவர்களின் மீதுள்ள பாசமே நம்மை துரத்தி இயக்குகின்றது எனலாம். நூறு பிரச்சினைகளும், போராட்டங்களும் 24 மணி நேரமும் நம் உடலினையும், மனதினையும் ஆட்டிப் படைக்கின்றன. முயற்சி செய்தும் இலக்கை-அடிப்படை தேவையை அடைய முடியாத பொழுது அநேகர் நடமாடும் ஜீவன் அற்றவர்களாக இருக்கின்றோம். அந்நேரங்களில் மனிதனுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகின்றது. அந்த வடிகால்தான் இறைவன்.
அவரை நீங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் எனலாம்
குல தெய்வம் எனலாம். இஷ்ட தெய்வம் எனலாம்
பிள்ளையார், முருகன், அம்மன் எனலாம்
அல்லா எனலாம் இயேசு எனலாம்
இன்னும் எத்தனையோ தெய்வங்களின் பெயரைச் சொல்லி வழிபடலாம்.
பலர் தன் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை என்ற உறுதியுடனும் இருக்கலாம்.
இது ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பம் சுதந்திரம். அநேகர் அவரவர் பரம்பரை வழியில் பார்த்து வருவதால் அதனை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.
ஆக மனிதனுக்கு அவன் வாழ்க்கையினைக் கடக்க ஒரு துடுப்பு தேவையாக இருக்கின்றது. பிடிப்பு தேவையாக இருக்கின்றது. பொதுவாக நம் தமிழ்நாட்டில் முருக வழிபாடு என்பது காலம் காலமாய் இருக்கின்றது. சஷ்டி விரதமும், காவடி வழிபாடும் கோலாகலமாக காணப்படும் ஒன்று.
'எங்களுக்கு பாதுகாப்பு கொடு, ஞானம் கொடு... என்று அவரவர் தேவைக்கேற்ப வேண்டுதல்களை வைத்து விரதம், மவுன விரதம், பாதயாத்திரை செய்து ஊர் குலுங்கும் விழாவாக நடத்துகின்றனர்.
* முருகன் என்றாலே அழகுதான். ஓம் என்ற பிரணவத்தின் வடிவம்.
* ஆறு பகைவர்களை அழித்தவர். (ஆணவம், கம்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்)
* சரவணப் பொய்கையில் முருகன் ஆறு குழந்தைகளாய் பிறந்தார்.
* தமிழ் குறிஞ்சி நிலக் கடவுள். எத்தனை பெயர்கள் இவருக்கு கார்த்திகேயா, கந்தா, சுப்ரமணியா, குமரா, குகா, சண்முகா, ஆறுமுகா....
* பரம சிவன், பார்வதியின் புதல்வர், பிள்ளையாரின் இளைய சகோதரர்.
* சிவபிரான் நெற்றிக் கண்ணில் உதித்தவர்.
* கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர்.
* ஆறு குழந்தைகளை பார்வதி தாயார் ஒரு சேர அணைக்க ஆறு முகங்கள் கொண்ட ஒருவரானார்.
* என்றும் இளமையானவர்.
* அவரது வேல் வெறும் ஆயுதம் மட்டுமல்ல. அறியாமை தடைகளை நீக்கும் சக்தி கொண்டவை. அன்னை சக்தியால் அதை பெற்றவர்.
* மயில் வாகனம் கொண்டவர். மயில் காலில் பாம்பு. இவை ஆணவம், அழிவுப் பூர்வமான சிந்தனைகளை அழிக்கும் என குறிப்பிடுகின்றது.
* குகர்- குகைகளிலும், குன்றுகளிலும் இருப்பவர்.
* தந்தைக்கே உபதேசம் செய்த சாமிநாதன்.
* போர் கடவுள். அசுரர்களை அழித்தவர்.
* தமிழ் கடவுள்.
* ஆறுபடை வீடுகளைக் கொண்டவர்.
* தைப்பூச விழா மிகவும் சிறப்பு பெற்றது.
* வட இந்தியாவில் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றவர்.
* சிலோன், மலேசியா என ஏனைய நாடுகளிலும் இவர் கோவில்கள் உண்டு.
* அறுபடை வீடுகள்
* திருப்பரங்குன்றம்-தெய்வானை திருமணம் செய்த இடம்.
* திருச்செந்தூர்-சூரபத்மனை அழித்து சூரசம்ஹாரம் செய்த இடம்.
* பழநி-ஞானம் நிறைந்த இடம். சுவாமிமலை- ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசித்த தலம்.
திருத்தணி- அமைதி தரும் இடம்.
* பழமுதிர் சோலை-அவ்வையார் ஆசி பெற்ற இடம்.
கமலி ஸ்ரீபால்
எத்தனை எததனையோ முருக பக்தர்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் பழநியில் நவபாஷாண முருக சிலையினை உருவாக்கி ஸ்தாபித்த போகர் சித்தரை மறக்க முடியுமா? கி.மு. 200களில் வாழ்ந்தவர். இன்றும் பழநியில் ஜீவ சமாதியாக இருப்பவர். சீன நாட்டிற்க்கும் சென்றவர். பழநி நவபாஷாண சிலையின் அபிஷேக தீர்த்தம் மக்களின் நோய்களை போக்க வல்லது. இறைவன் மார்பில் இரவில் சந்தனம் சாற்றி மறுநாள் அதனையும் பிரசாதமாக வழங்குவர். இதே போன்று அவர் மற்றொரு நவ பாஷாண முருகர் சிலையினை உருவாக்கி உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சிறந்த ஆன்மீக, தியான முறைகளை அருளியவர்.
அருணகிரி நாதரை அறியாத ஆன்மீக வழி மக்கள் குறைவு எனலாம். தன் வாழ்வினை எண்ணி வருந்தி கோவில் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்ய முயன்ற பொழுது அவரை தடுத்தாட் கொண்டவர் முருகபிரான். பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் முருகனைப் பாடியே முக்தி அடைந்தார். திருப்புகழினை பாடியவர். 15-ம் நூற்றாண்டினைச் சார்ந்தவர். ஆறு எழுத்து மந்திரமான 'சரவண பவ' அருணகிரிநாதரின் நாக்கில் முருகன் வேல் கொண்டு எழுதினார் என்றும் "ஓம்" என எழுதினார் என்றும் கூறப்படுகின்றன.
இவருக்கு பல இடங்களில் முருகர் காட்சி அளித்துள்ளார். திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.
திருச்செந்தூரில் நடன தரிசனம் தந்தார்.
வயலூரில் மயில் மீது அமர்ந்து காட்சி தந்தார். மேலும் சுவாமிமலை, திருவிடைக்கழி என பல இடங்களில் முருகனை கண்ணார கண்டுகளித்தவர் அருணகிரிநாதர். முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.
மன்னர் ஒருவருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்ட போது அருணகிரி நாதர் கிளியாக மாறி தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து மன்னரின் கண் பார்வையினை மீட்டார் எனவும் கூறப்படுகின்றது.
இவரது திருப்புகழ் பாடல்களை ஒரு முறையாவது பொருள் அறிந்து படித்துதான் பார்க்கலாமே.
அது போலவே 'கந்தர் சஷ்டி கவசத்தினை' அன்றாடம் சொல்ல சிறு வயது முதலே குழந்தைகளை பழக்கலாமே.
இது போலத்தான் போகர் சித்தரும், மாபெரும் சித்தர் என்பதனை அறிந்தோம். ரசவாத ரகசியங்கள், மருத்துவ நுட்பங்கள், போகர்-1000 போன்ற நூல்களை படித்தால் பல அரிய விஷயங்களைக் கற்கலாம். மேரு மலையே சுற்றி வந்தவர். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பழனிக்கு செல்லும் பக்தர்கள் முருகனை தரிசித்து, செவ்வாய் ஆதிக்கம் கொண்ட போகர் சமாதியிலும் வணங்கி வருவர்.
பாம்பன் சுவாமிகள்
பாம்பன் ஸ்ரீ மத் குமரகுரு சுவாமிகள் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான், ஞானி. 666 பாடல்களை சைவ சமயம், முருக வழிபாட்டில் பாடியுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள இவரது ஜீவ சமாதி உலகப் பிரசித்தி பெற்றது.
சண்முக கவசம், குமாரஸ்தவம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்ற பாடல்களை இயற்றியவர். 1929ல் ஜீவசமாதி அடைந்தவர். 'வேலும், மயிலும் துணை'. இது இவரது மந்திரச் சொல். அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் தங்க வேலினை வருடம் ஒருமுறை மலை சுனைக்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து மேலே காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை செய்து கொண்டு வருவர். மேள தாளங்களுடன் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த வேல் பூஜை.
பாம்பன் சுவாமிகளுக்கு 1920-ல் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் எதுவும் செய்ய இயலவில்லை என்று வருந்திய நிலையில் அவரது பக்தர் 'சண்முக கவசத்தினை' தினமும் 11 முறை படித்தார். 11-ம் நாள் அவரது கனவில் இரு மயில்கள் வந்து நடனமாட, வேல் சுவாமிகளின் கால்களை சீர் செய்ய, முருக பிரான் சுவாமிகளின் அருகில் அமர்ந்திருப்பதனைக் கண்டார். பாம்பன் சுவாமிகளின் கால்களும் முழுமையாய் குணமடைந்து இருப்பதனைப் பார்தார். என்ன ஆச்சர்யம்! மறுநாள் மருத்துவமனை சென்ற பொழுது அவர் கனவில் கண்ட அனைத்தும் உண்மையிலேயே நடந்து இருந்தது. இன்றும் இதற்கான சாட்சியங்கள் உள்ளன.
பாம்பன் சுவாமிகள் கடுந்தவம் புரிந்த காலத்தில் முருகன், அருணகிரி நாதர், அகத்திய சுவாமிகள் ஆகிேயார் ஒரு சேர காட்சி அளித்தனர். அவர் தவம் செய்த காலத்தில் அவரை நெருங்கிய துஷ்ட சக்திகளை அவரது 'தண்டம்' துரத்தியது. இன்றும் திருப்பரங்குன்றம் பாம்பன் சுவாமிகளின் ஆலயத்தில் அத்திரு தண்டம் பூஜிக்கப்படுகின்றது.
தைப்பூசம்
இந்த விழா உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படும் விழா. கோலா கலமான விழா. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் என்று கொண்டாடப்படும் விழா. இம்முறை2026-ல் நாளை (1-ந்தேதி) அன்று வருகின்றது. ஆனால் அதற்கான ஆரம்ப வேலைகள் தை மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து விடும். பலர் 48 நாள் விரதம் எடுப்பர். கடும் விரதம் எடுப்பவர்களும் உண்டு. பலர் 21 நாள், 7 நாள் என்றும் விரதம் இருப்பர். விரத கோட்பாடுகளை பக்தியுடன் கடைபிடிப்பர். சிலர் பால், பழம் மட்டுமே அருந்துவார்கள். காவடி எடுப்பது, பால் குடம் ஏந்தி செல்வது என பல வேண்டுதல்கள் இருக்கும். அலகு குத்துவார்கள். பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்த தைப்பூசத்தில்தான் அகிலமே தோன்றி யது என்பவரும் உண்டு. பழநியில் இந்த விழா கூடுதல் சிறப்புடன் நிகழும்.
வறுமை நீங்க, வேண்டுதல்களின் காணிக்கையாக, பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் நீங்க இந்நாளில் சிறப்பு பூஜைகளும், விழாக்களும் நடக்கின்றன. சிவ, பார்வதி ஆனந்த நடனம் நிகழ்வது இந்நாளில் என்ற கருத்து உண்டு. குரு பகவான் வழிபாடும் நடைபெறும். வணங்கி வளம் பெறுவோம்.