- சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு.
- ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும்.
சந்திரன் ரிஷப ராசியின் மூன்றாவது பாகையான கிருத்திகை நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான். ஒரு ஜாதகத்தில் சூரியன் ஆன்மாவையும் ஆன்ம பலத்தையும் குறிப்பவர். ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடலையும் மனதையும் குறிப்பவர்.
உடலையும் மனதையும் பற்றி கூறும் சந்திரன் ஆன்மாவை பற்றி கூறும் சூரியனின் நட்சத்திரத்தில் உச்சம் அடைந்தால் மனமும் ஆன்மாவும் புனிதம் அடையும். உடலாலும் உள்ளத்தாலும் ஒருவர் உயரும் போது லவுகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அடைய முடியும். சந்திரன் உச்சம் பெற்றவர்கள் ஆன்ம பலம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் சுப வலிமை பெற வேண்டும். சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு. மதிநுட்பத்துடன் செயல்படுவார்கள். நல்ல தோற்ற பொலிவு உள்ளவர்கள். எந்த சூழ்நிலையிலும் அஞ்ச மாட்டார்கள். தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தாய்மை உணர்வுடன் வழிநடத்துவார்கள்.
எளிதில் நோய்கள் அண்டாது. சந்திரன் காலபுருஷ நான்காம் அதிபதி என்பதால் சந்திரன் பலம் பெற்றால் ஸ்திர சொத்துக்கள் இருக்கும். இனி 12 லக்னங்களுக்கும் உச்ச சந்திரன் என்ன பலனை வழங்குவார் என்று பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு 4-ம் அதிபதியான சந்திரன் 2ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் நிரம்பப் பெற்றவர்கள்.
தாயின் மூலமாக திரண்ட சொத்துக்கள் நகைகள் பணங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு உண்டு. பலர் வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் உள்ளவராக இருப்பார்கள். கற்ற கல்வியின் மூலம் பயன் உண்டு. படித்ததை உடனே புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும். தான் கற்றதை பிறருக்கு உபதேசிக்கும் வல்லமை நிரம்பியவர்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பது பண்ணை தொழில் போன்றவற்றில் ஜாதகருக்கு ஆர்வம் மிகுதியாக உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவராக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் அனுசரணை இருக்கும். இடத்திற்கு தகுந்தார் போல் தனது பேச்சை மாற்றுவார்கள்.
ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகர் பிறந்தவுடன் குடும்பத்திற்கு மாற்றம் தரக்கூடிய நல்ல இடப்பெயர்ச்சி நடக்கும். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, விருத்தி, மங்காத புகழ் உடையவர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
ஜாதகருக்கு உடன்பிறந்த இளைய சகோதர சகோதரிகள் இருப்பார்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் உண்டாகும். அடிக்கடி தொழில் வேலை உத்தியோகத்தை குடியிருப்பை மாற்றிக் கொண்டே இருப்பார். விடா முயற்சி, தன்நம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதிகார வர்க்கத்தின் தொடர்புடையவர்கள். வேலை ஆட்கள் யோகம் நிறைந்தவர்கள். பயணம் செய்வதில் விருப்பம் மிகுந்தவர்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
மிதுன லக்னத்திற்கு தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரன் தன் வீட்டிற்குப் பின் வீடான 12ம் இடத்தில் உச்சம் பெற்றால் ஜாதகருக்கு மறைமுக வருமானம் அதிகமாக இருக்கும். ஜாதகர் கற்பனையில் கனவுகளில் வாழ்வார்கள். குடும்ப வாழ்க்கை ரகசியம் மர்மம் நிறைந்ததாக இருக்கும். சிலர் உண்ண உறங்க நேரமில்லாமல் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் எதை பற்றியும் கவலைப்படாமல் நேரத்திற்கு சாப்பிட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டே இருப்பார்கள். கஞ்சத்தனம் அதிகமாக இருக்கும்.
ஆதாயம் இல்லாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். உலகில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை அனுபவிக்காமல் பணத்தையும் சொத்து சுகத்தையும் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பார்கள். தானும் அனுபவிக்க மாட்டார்கள் தன்னை சார்ந்தவர்களையும் அனுபவிக்க விடமாட்டார்கள்.
கடக லக்னத்திற்கு ராசி அதிபதியான சந்திரன் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் தன ஸ்தான அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் நின்றால் மிகப்பெரிய பொருளாதார அமைப்பு நிறைந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளவர்கள். குடும்ப தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்வார்கள். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்த பிறகு பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கடக லக்னத்திற்கு 11ம்மிடம் பாதகஸ்தானம் என்பதால் எவ்வளவு பொருளாதாரம் இருந்தாலும் அது ஜாதகரை சார்ந்தவர்களுக்கு தான் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நல்ல நட்புகள் உண்டு பேச்சில் பெருமிதம் இருக்கும். வாக்கு சம்பந்தமான தொழிலை அதிகம் விரும்புவார்கள்.
வாக்கு வன்மை உண்டு. கொடுத்த வாக்கை எந்த சூழ்நிலையிலும் தவற விட மாட்டார்கள். தாய் பாசம் பற்றி அடிக்கடி பேசுவார்கள்.
சிம்ம லக்னத்திற்கு விரயாதிபதியான சந்திரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. சிம்ம லக்னத்திற்கு சந்திரன் உச்சம் பெறுவது சுமாரான பலன்களை தரும். எந்த தொழில் செய்தாலும் நஷ்டம். தொழிலுக்காக பிரயாணம் செய்ய நேரும் அல்லது அலைச்சல் மிகுந்த தொழில் செய்வார். உத்தியோகமே சிறந்தது என்றாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இருக்காது. தொழில் தொடர்பான மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். அதிக முதலீடு உள்ள தொழில்களை தவிர்ப்பதால் வீண் விரயங்களை கட்டுப்படுத்த முடியும். இடது கண் பாதங்களில் பாதிப்பு இருக்கும். எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்குவார்கள். சிலர் கடைசி காலத்தில் படுத்த படுக்கையாக இருப்பார்கள். அயல்நாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். சிலர் அந்திம காலத்தில் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலத்தில் பிள்ளைகளுடன் கழிப்பார்கள்.
கன்னி லக்னத்திற்கு லாப அதிபதியான சந்திரன் 9-ம் மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச்சிறந்த அமைப்பாகும். ஜாதகர் அந்தஸ்து, கவுரவம், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஜாதகருக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடனே வசிப்பார்கள். பல தொழில் வல்லுநராக இருப்பார். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகமாக இருக்கும். ஆயிரம் பேருக்கு மத்தியில் ஜாதகர் தனித் திறனுடன் மிளிர்வார்கள். எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கையேந்தி வாழ மாட்டார்கள். இரண்டு குடும்ப வாழ்க்கை உண்டு. கூட்டுக் குடும்பத்தில் வசிப்பார். மூதாதையர்களின் சொத்து ஜாதகருக்கு அதிகமாக இருக்கும். ஜாதகரின் எண்ணங்களும் விருப்பங்களும் உடனுக்குடன் நிறைவேறும்.
துலாம் லக்னத்திற்கு தொழில் ஸ்தான அதிபதியான சந்திரன் 8ம் இடத்தில் உச்சம் பெறுவது நல்லது. முதலீடு உயர்ந்து கொண்டே இருக்கும். முதலீட்டை விட அதிக வருமானம் வந்து கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பிய வாழ்க்கை துணை அமையும். இளம் வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை மூலமாக வருமானம் உண்டு. பேச்சில் கனிவு கவுரவம் இருக்கும். அறநெறி தவறாமல் வாழ்வார்கள். உயர் கல்வி வாய்ப்பு உண்டு. அறக்கட்டளை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். தந்தைக்கு இருதார யோகம் உண்டு. ஜாதகர் தாய் வழி பாட்டி வீட்டில் வளர்ந்தவராக இருப்பார். தந்தையை விட தாத்தாவின் மேல் பிரியம் அதிகமாக இருக்கும். தாய்வழி தந்தை வழி சொத்து உண்டு. வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் ஜாதகர் பிறந்த பிறகு தாய், தந்தைக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.
விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதி பதியாகி ராசிக்கு ஏழாம் இடத்தில் பெறுவது சற்று சுமாரான பலனை தரும். பரம்பரை கூட்டுத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் சம்பந்தம் இல்லாத நபர்களால் நிம்மதி குறைகிறது. ஏழில் சந்திரன் உச்சம் பெற்ற விருச்சிக லக்னத்தினர் திருமணம் ஏன் நடந்தது என்று வருந்தும் வகையில் திருமண வாழ்க்கை இருக்கிறது. பாதகாதிபதி ஏழில் உச்சம் பெறுவதால் கூட்டுத் தொழில் வஞ்சிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் குறைவுபடும். ஜாதகரின் சந்திர தசை காலங்களில் விருச்சிக லக்னத்தவரின் தாய், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என அனைத்தும் பாதிப்படைகிறது. பொதுவாக விருச்சிக லக்னம் கால புருஷ எட்டாமிடம் என்பதால் எளிதில் எந்தப் பிரச்சினையும் எளிதில் வெளியில் தெரிவிக்காத பிரச்சினை நன்றாக தீவீரமடைந்த பின்பே வெளியில் தெரியும். கடுமையான பாதகம் உருவாகும்.
தனுசு லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான சந்திரன் மற்றொரு மறைவு ஸ்தானமான ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. கெட்டவன் கெடுவது நல்லது. கெட்டவன் உச்சம் பெறுவது ஜாதகருக்கு உச்சகட்ட கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகளை அதிகம் அதிகப்படுத்தும். உத்தி யோகம் சிறப்பாக இருக்காது அல்லது அடிக்கடி உத்தியோகத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சிலர் நடக்காததை நடந்ததாக நினைத்து கற்பனை பயத்தை வளர்த்துக் கொள்வார்கள். சந்திரனுக்கு ராகு கேது சம்பந்தம் இருந்தால் புத்தி தடுமாற்றம் மிகையாக இருக்கும். சிலர் அடிப்படை தேவைக்கு கூட போராட வேண்டிய நிலை இருக்கும். மிகச் சுருக்கமாக சந்திர தசை காலங்களில் ஜாதகரின் உடலில் உயிரை மட்டும் விட்டு வைத்து மனிதனை நிர்கதியாக்குகிறது. பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேறுவார்கள்.
மகர லக்னத்திற்கு சந்திரன் களத்திர ஸ்தான அதிபதியாகும். அவர் 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால்
ஜாதகருக்கு மிகச்சிறப்பான வாழ்வியல் மாற்றத்தை ஏற்படும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு நன்மை தரும்.ஜாதகர் திறமையான அணுகு முறையுடன் கூடிய சாமார்த்தியசாலியாக திகழ்வார்கள். பேச்சில் நிதானமும், பொறுமையும் இருக்கும். ஜாதகர் உயர்ந்த குலத்தில் பிறந்தவராக இருப்பார். தன்னைத் தானே உணரும் வலிமை படைத்தவராக இருப்பார்கள். காதல் திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு உயரும். கூட்டு தொழில் பல மடங்கு நன்மை தரும். குடும்ப உறவுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள். நிச்சயமாக சொத்து வாகன வசதிகள் இருக்கும். இயல் இசை நாடகப் பிரியர்கள்.
கும்ப லக்னத்திற்கு 6ம் அதிபதியான சந்திரன் 4-ம்மிடத்தில் உச்சம் பெறுவது சிறப்பான பலன் அல்ல. கடன், நோய், வம்பு, வழக்கு எதிரியை உருவாக்கி தரக்கூடிய கிரகமான சந்திரன் நான்காம் இடத்தில் உச்சம் பெறுவதால் ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் இருக்கும். கல்வியில் தடை உண்டாகும். அல்லது அதிகமாக கல்லி கடன் பெற்று உயர் கல்வி படிப்பார்கள். நான்காம் அதிபதிக்கு ஆறாம் அதிபதி சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு முதல் சொத்து விரயமாகும் அல்லது சொத்தை விற்று கடன் தீர்ப்பார்கள். சொத்தின் மதிப்பை விட கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும். 6ம் இடத்திற்கு லாப ஸ்தானம் நான்காம் இடம் என்பதால் இது போன்ற அமைப்பு இருப்பவர்கள் சொத்து வாங்கும் முன்பு தாயிடம் அல்லது தாய் மாமாவிடம் யாசகம் பெற்று சொத்து வாங்க வேண்டும்.
மீன லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சந்திரன் 3-ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிக உயர்வான அமைப்பாகும். ஆன்மீக நாட்டம் தியாக சிந்தனை மிகுந்தவராக இருப்பார். பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். புனித யாத்திரை செய்யும் பாக்கியம் உள்ளவர்கள். முதலீடு இல்லாத கமிஷன் தொழில்கள் பல மடங்கு வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொடுக்கும். வயது கூட கூட ஜாதகருக்கு வருமானம் கூடிக் கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பியவர்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு பூர்வீகத்தை விட்டு வெளியேறி முன்னேறுவார்கள் ஆதாயம் இல்லாத விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் மாறுவார்கள். சாதாரண மனிதனாக இருந்தால் கூட சாதனை மனிதனாக மாறுவார்கள். பொதுவாக ஒரு ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் ஜாதகரின் சிந்தனை ஓட்டம் நல்ல விதமாக இருக்கும். உச்ச சந்திரனால் இன்னல் களை அனுபவிப்பவர்கள் பவுர்ணமி அன்று பால் சாதம் தானம் வழங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
செல்: 98652 20406