சிறப்புக் கட்டுரைகள்
null

மகாசுவாமிகள்- வழிகாட்டும் கைவிளக்கு!

Published On 2024-05-25 10:48 GMT   |   Update On 2024-05-25 10:52 GMT
  • கவிஞர் கண்ணதாசன் தொடக்கத்தில் நாத்திகராக இருந்து பின்னர் ஆத்திகராக மாறியவர்.
  • திருமணம் செலவு குறைந்ததாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

எளிமையையே தங்கள் வாழ்வின் கோட்பாடாகக் கொண்டிருந்தவர்கள் என்று நாம் அண்மைக் காலத்தில் வாழ்ந்த இரண்டு பேரைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஒருவர் மகாத்மா காந்தி. இன்னொருவர் காஞ்சி மகாசுவாமிகள்.

எதிலும் ஆடம்பரத்தையும் பகட்டையும் துறந்து வாழும் போக்கு இயல்பாகவே மகாசுவாமிகள் என்று அழைக்கப்பட்ட பரமாச்சாரியாரிடம் அமைந்திருந்தது. பெரும்பாலும் தென்னங்கீற்று வேயப்பட்ட குடில்களில் தான் அவர் தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமிகள் 1894 முதல் 1994 வரை வாழ்ந்தவர். வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கும் தாய் மகாலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த அவர், 13 வயதிலேயே காஞ்சி மடத்தில் இணைந்து துறவியானார். அதன்பின் 87 ஆண்டுகள் துறவு வாழ்க்கை வாழ்ந்தார்.

அவர் மேல் காந்திக்கும் காந்தி மேல் அவருக்கும் அன்பும் மதிப்பும் இருந்தன. காந்தி தென்னிந்தியாவில் பயணம் செய்த தருணம். கேரளத்தில் பரமாச்சாரியார் முகாமிட்டிருந்த காலகட்டம்.

1927 அக்டோபர் 15-ந் தேதி காந்தி, பரமாச்சாரியாரை பாலக்காட்டின் அருகே இருந்த நெல்லிசேரி கிராமத்தில் தனிமையில் சந்தித்தார். ஒரு மணிநேரத்திற்கும் மேல் நீடித்த சந்திப்பு அது. அந்தச் சந்திப்பில் காந்தி பரமாச்சாரியாரிடம் என்ன பேசினார் என்ற விவரம் எதுவும் அப்போது வெளிப்படவில்லை.

ஆண்டுகள் பல கடந்தன. மகாத்மா காந்தி 1948-ல் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் வெகு காலத்திற்குப் பிறகு 1968-ல் சென்னைப் பல்கலைக் கழகம் `காந்தியச் சிந்தனைகளின் இன்றைய தேவை` என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தியது. அந்தக் கருத்தரங்கையொட்டி, ஒரு மலரும் வெளியிடப்பட்டது. அந்த மலருக்காக பரமாச்சாரியாரிடம் ஒரு வாழ்த்துச் செய்திபெறப்பட்டது.

அதில், `தன்னை யாரேனும் கொல்ல முயன்றாலும் தன்னைக் கொல்பவர் மீதும் அன்பு செலுத்தும் மனம் தனக்கு அமையவே தான் பிரார்த்திப்பதாக` மகாத்மா காந்தி தன்னிடம் கூறியதாய்ப் பரமாச்சாரியார் குறிப்பிட்டிருந்தார்.

சுவாமிகள் எந்த மதத்தையும் வெறுக்கவில்லை. எல்லா மதத்தினரோடும் இணக்கமாக வாழவேண்டும் என்ற கோட்பாட்டையே வற்புறுத்தினார். அவரை கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் கூட மதித்தார்கள். அவர் சித்தி அடைந்தபோது சாரைசாரையாக வந்து முகமதியர்களும் கிறிஸ்துவர்களும் கூட அவருக்கு வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

எல்லா மதத்தினரும் மற்ற மதத்தினரிடம் பகைமை பாராட்டாமல் அவரவர் மத நெறிப்படி வாழவேண்டும் என்பதே பரமாச்சாரியாரின் கருத்து.

கவிஞர் கண்ணதாசன் தொடக்கத்தில் நாத்திகராக இருந்து பின்னர் ஆத்திகராக மாறியவர். அவர் அவ்விதம் ஆத்திகராக மாறுவதற்கும் பின்னர் `அர்த்தமுள்ள இந்துமதம்` என்ற புகழ்பெற்ற நூலை எழுதுவதற்கும் மகாசுவாமிகள்தான் காரணமாக இருந்தார்.

பரமாச்சாரியாரின் தமிழ்ப் பற்று பெரிதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் பக்தி இலக்கியத்தின் பெருமை பற்றி அவர் பலமுறை வியந்து பேசியிருக்கிறார். முக்கியமாக அவர் தமிழ் மூதாட்டி ஒளவையாரைப் பெரிதும் கொண்டாடினார்.

திருப்பூர் கிருஷ்ணன்

 `ஒளவையாரை விடத் தமிழ்நாட்டுக்கு உபகாரம் செய்தவர் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த தேசத்தில் ஒழுக்கமும் பக்தியும் இருந்து வருகிற தென்றால் அது முக்கியமாக ஒளவையாரால் தான் என்று சொல்ல வேண்டும். அவருடைய அன்பின் விசேஷத்தால் அவருக்கப்புறம் எத்தனையோ தலைமுறைகள் ஆனபிறகு இப்போதும் நாம் படிக்க ஆரம்பிக்கிற போதே அவருடைய ஆத்திசூடிதான் முதலில் வருகிறது!' என்பது ஒளவையாரைப் பற்றிப் பரமாச்சாரியார் சொன்ன கருத்து.

பரமாச்சாரியாரது ஆன்மிகத்தின் அடிப்படை மனிதாபிமானம்தான். ஒருமுறை பார்வையற்ற மாணவர்கள் அவரை தரிசிக்க வந்தார்கள். அன்று பரமாச்சாரியார் முழுமையான மவுனம்.

என்றாலும் பார்வையற்ற மாணவர்கள் வந்திருக்கிறார்கள் என்றறிந்ததும் அவர் தம் மவுனத்தைத் துறந்துவிட்டார். பார்வையற்றவர்களுக்குத் தம் குரல்தானே தரிசனம், அவர்களை மகிழ்விப்பதை விடவும் தனது மவுன விரதம் முக்கியமானதல்ல என்று தம் தரப்புக் கண்ணோட்டத்தைப் பிறகு அவர் தம் அன்பர்களிடம் விளக்கினார்.

திருமணங்களில் வரதட்சணை கொடுக்கும் வழக்கத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் பரமாச்சாரியார் முக்கியமானவர். வரதட்சணை வாங்கி நடைபெறும் திருமணங்களில் பரமாச்சாரியாரின் அருளாசியோடு என்று ஏன் அச்சிடுகிறீர்கள் எனத் தம் அன்பர்களைக் கடிந்து கொண்டார் அவர்.

திருமணம் செலவு குறைந்ததாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். பட்டுப் புழுக்களைக் கொன்று நெய்யப்படும் பட்டுத் துணியைக் கட்டக் கூடாது என்பதும் அவரது அறிவுரைகளில் முக்கியமான ஒன்று. சைவ வைணவ பேதங்களை அவர் பாராட்டியதில்லை. தம் பேச்சை முடிக்கும் போதெல்லாம் `நாராயண நாராயண!' என்று திருமால் நாமத்தைச் சொல்லியே நிறைவு செய்வார். ஆண்டாள் அருளிய வைணவக் கவிதை நூலான திருப்பாவையின் புகழைப் பரப்பியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. ஆண்டாளின் பக்தி மயமான வாழ்க்கையின் பெருமையைத் தம் சொற்பொழிவுகளில் அவர் பலமுறை குறிப்பிட்டு ஆண்டாளைப் போற்றியுள்ளார்.

விஞ்ஞானத்திலும் சுவாமிகளுக்கு ஆர்வம் இருந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் அவரிடம் ஆசி பெற வந்ததுண்டு. அப்போதெல்லாம் அவர்களிடம் கேள்வி கேட்டு விண்வெளி ஆய்வு தொடர்பான பல நுணுக்கமான விஷயங்களை அவர் தெரிந்துகொள்வார்.

சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளின் இலக்கியங்களைக் கற்றறிந்து அவற்றில் சிறப்பான புலமை பெற்றிருந்த மகாசுவாமிகள், தமிழையும் கசடறக் கற்றிருந்தார். அவரின் தமிழறிவு உண்மையிலேயே வியக்க வைப்பது.

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியைத் தம் பொருளாதாரப் பிரச்சனை தீர்வதன் பொருட்டுப் பாராயணம் செய்யலாமா என ஒரு தமிழறிஞர் கேட்ட போது, கட்டாயம் பாராயணம் செய்யலாம் எனச் சொன்ன மகாசுவாமிகள், அதற்கான அகச்சான்று கந்தர் அனுபூதியிலேயே இருக்கிறது எனவும் விளக்கினார்.

`குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!` என அதில் வரும் வரியில் வருவாய் என்ற சொல் வருகிறது. அதை `வா` என்ற பொருளில் மட்டுமல்லாமல் `வருவாய் அருள்வாய்`, அதாவது செல்வம் அருள்வாய் என்பதாகவும் பொருள் கொள்ளலாம் அல்லவா என சுவாமிகள் வினவியபோது அவரது தமிழறிவைக் கண்டு வியந்தார் அந்தத் தமிழறிஞர்.

பரமாச்சாரியார் நிகழ்த்திய அற்புதமான சொற்பொழிவுகள் எல்லாம் பற்பல தொகுதிகளாக எழுத்தாக்கப்பட்டுவிட்டன.

வியாசர் சொன்ன மகாபாரதத்தை கணபதி ஒரு தந்தத்தை ஒடித்து எழுதி எழுத்தாக்கினார். அதுவே மகாபாரத இதிகாசமாயிற்று.

பரமாச்சாரியார் பேசிய சொற்பொழிவுகளையெல்லாம் இன்னொரு கணபதி (ரா. கணபதி) பேனாவை எடுத்து எழுதி எழுத்தாக்கிவிட்டார். அந்த நூல் `தெய்வத்தின் குரல்` என அன்பர்களால் கொண்டாடப் படுகிறது.

அவரை ஜகத்குரு என்று அன்பர்கள் போற்றியபோது, உலகம் முழுவதற்கும் இவர் எப்படி குருவாக முடியும் என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். மகாசுவாமிகள், `உலகத்தை நான் குருவாகக் கொண்டவன், ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன் என்பதாகவே ஜகத்குரு என்ற சொற்றொடரை நான் புரிந்துகொள்கிறேன்` என அடக்கத்தோடு தெரிவித்தார்.

கால்நடைபோல பண்பாடில்லாமல் வாழ்ந்த மக்களை மனிதர்களாக மாற்றி உயர்த்துவதற்காக கால்நடையாகவே பாரத தேசம் முழுவதும் நடந்தார். காலடியில் பிறந்த ஆதிசங்கரரின் மரபில் வந்த மகாசுவாமிகளின் காலடி படாத இடம் பாரதத்தில் இல்லை.

தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் அவருக்குத் தெரிந்திருந்ததால், அந்தந்த மாநில மக்களிடம் அவரவர் மொழிகளில் உரையாடி அவர்களை வழிநடத்தினார் அவர்.

மந்திரங்களின் மகிமைகள் குறித்து சுவாமிகள் நிறையப் பேசியிருக்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் செல்வ வளத்தையும் ஆரோக்கியத்தையும் தரும் என்றும் காயத்ரி மந்திரம் இம்மை, மறுமை என இருவித நலன்களையும் தரும் என்றும் சொல்லி மந்திரங்களை பக்தர்கள் ஜபம் செய்வதை ஊக்குவித்திருக்கிறார்.

தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றின் மகிமை பற்றி அவர் நிறைய எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

பணத்தை அவர் ஒரு பொருட்டாக மதித்ததில்லை. தன்னை நாடிவரும் செல்வந்தர்கள் பெரும் தொகையை சமர்ப்பித்தால் அதை ஒதுக்கி வைத்துச் சிரிப்பார். அடுத்து யாரேனும் ஓர் ஏழை தன் பெண் திருமணத்திற்குப் பணம் இல்லை எனக் கண்ணீர் வடித்தால் அந்தத் தொகையை எடுத்துச் செல்லுமாறு அந்த ஏழையிடம் கூறிவிடுவார்.

இப்படித் தம்மை நாடிவந்த பணத்தைத் தொடாமலேயே தேவையானவர்களுக்கு அவர் வழங்கிய சந்தர்ப்பங்கள் அவர் வாழ்வில் ஏராளம்.

தம்மைத் தேடிவரும் அன்பர்களிடம் ஏழை என்றோ பணக்காரர் என்றோ சுவாமிகள் பேதம் பாராட்டியதில்லை. பெரும் பதவியில் இருந்தவர்களையும் சாதாரண மனிதர்களையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்த்தார். அவரைப் பொறுத்தவரை மனிதர்கள் அனைவரும் இறைவனின் படைப்புக்கள், அவ்வளவே.

அவருடைய அந்த `சம நோக்கு' காரணமாகவே மக்களிடையே அவர் புகழ் ஓங்கியது. எண்ணற்ற அடியவர்கள் அவரை நடமாடும் தெய்வமாகவே கருதினார்கள். வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் இறைவனுடைய குணம்தான் அல்லவா?

ஸ்ரீராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று வரலாறு சொல்கிறது. அண்மைக் காலத்தில் நூறாண்டு வாழ்ந்த பெருமை பரமாச்சாரியாருக்கு உரியது. தம் வாழ்நாள் முழுவதையும் மக்களை பண்படுத்துவதற்காகவே செலவிட்ட மகான் அவர்.

இப்போதும் அவர் ஆன்ம ரூபமாக வாழ்ந்து வருகிறார். அவரைப் பற்றிய சிந்தனைகளும் அவரது நூலாக்கப்பட்ட அறிவுரைகளும் இன்றும் மக்களுக்கு வழிகாட்டி, அவர்களை நல்வழிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News