சிறப்புக் கட்டுரைகள்

உண்ணா நோன்பினால் உண்டாகும் நன்மைகள்

Published On 2024-05-23 09:35 GMT   |   Update On 2024-05-23 09:35 GMT
  • தண்ணீர் மட்டும் 24 மணிநேரத்திற்கு எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகற்றப்படுகின்றன.
  • உண்ணா நோன்பில் மா, பலா, வாழை, பூமிக்கு கீழே விளையும் கிழங்கு வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மருந்தின்றியே நம்மால் வாழ இயலும் என்றாலும் கூட, மீதமுள்ள வாழ்க்கையை நலத்துடன் கழிப்பதற்கு நோன்பு இருப்பது நல்லது. இவ்வுலகில் மனிதர்கள் பலவிதங்களில் உண்ணா நோன்புகளை மேற்கொள்கிறார்கள். மிகவும் நல்ல பழக்கம் என்பதால்தான் கடவுள் பெயரால் எல்லா மதத்தினராலும் இது பின்பற்றப்பெறுகிறது.

இந்துக்கள் சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், அமாவாசை, புரட்டாசி மற்றும் வெள்ளிக்கிழமை அம்மன் விரதம், வியாழக்கிழமை சாய்பாபா விரதம், என்று ஒவ்வொரு கிழமையிலும் குறிப்பிட்ட கடவுளுக்கு விரதம் என்று விரதமுறைகளை மேற்கொள்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு 30 நாட்களும், கிருத்துவர்கள் தவக்காலம் 40 நாட்களும் மேற்கொள்கின்றனர். இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன? நோன்பின் வகைகள், இடைப்பட்ட உண்ணா நோன்பு (Intermittent Fasting) என்றால் என்ன? அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பகுதியில் காணலாம். 

ஐந்து வகையான நோன்புகள்:

* தண்ணீர் நோன்பு - 24 மணிநேரத்திற்கு வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு இருப்பது, இதன் முடிவில் பழச்சாறு அருந்திவிட்டுப் பின்பு, உணவு எடுத்துக்கொள்வதைத் தண்ணீர் நோன்பு என்கிறோம்.

* பழச்சாறு நோன்பு- 24 மணி நேரங்களுக்குப் பழச்சாறு மட்டுமே எடுத்துக்கொள்வது. இதில் வெறும் பழத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழச்சாறு செய்யும்போது சர்க்கரையோ அல்லது பால் பொருட்களோ சேர்க்கக்கூடாது. எதையும் சமைத்துப் பருகக்கூடாது.

* பகுதி நோன்பு - நாளும் மூன்று வேளை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள், ஒரு வேளை உணவைத் தவிர்த்து விடுவது பகுதி நோன்பு ஆகும். இதில் பதப்படுத்தப்பட்ட மற்றும் மாமிச உணவுகளைத் தவிர்த்து விட வேண்டும். இயற்கை உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கலோரிக் குறைப்பு நோன்பு - ஒரு நாளைக்கு நமக்கு 2000 கிலோ கலோரிகள் வேண்டும். இதில் 500 கிலோ கலோரிகள் மட்டுமே எடுத்துக்கொண்டு நோன்பு இருப்பது. இது பொதுவாக உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களால் செய்யப்படும் நோன்பாகும். இதற்கு ஒவ்வோர் உணவிலும் உள்ள கலோரிகள் எவ்வளவு என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்றாடம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகளைக் கணித்து 500 கிலோ கலோரிகள் வருமாறு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* இடைப்பட்ட உண்ணா நோன்பு - இதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மேற்கூறிய ஐந்து வகை உண்ணா நோன்புகளில், மிகவும் சிறந்தது தண்ணீர் நோன்பாகும். தண்ணீர் மட்டும் 24 மணிநேரத்திற்கு எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகற்றப்படுகின்றன. இதனால் நம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. புற்றுநோய் உண்டாகும் செல்கள் அழிக்கப்படுகின்றன. நம் உடல் நலம் மிளிர்கிறது.

இடைப்பட்ட உண்ணாநோன்பு - வகைகள்:

16 மணி நேர உண்ணாநோன்பு: காலை உணவை உண்ணாமல் நண்பகல் உணவை 1 மணிக்குப் பிறகு உண்பது. முந்திய நாள் இரவு உணவை 8 மணிக்கு முன்பே எடுத்துக்கொண்டு, அதற்குப் பிறகு 16 மணிநேரம் எந்த உணவையும் எடுக்காமல் இருப்பதற்குப் பெயர்தான் 16 மணிநேர உண்ணாநோன்பு. இந்த வகையில் உண்ணாமல் இருக்கும்போது தண்ணீர் மட்டும் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம்.

24 மணி நேர உண்ணா நோன்பு: இந்நோன்பு முறையின்போது சமைத்த உணவைத் தவிர்த்துத் தண்ணீர், காய்கறிகள், பழங்கள் மட்டும் 24 மணி நேரமும் எடுத்துக் கொள்ளலாம். இதில் 500-600 கலோரிகள் வரைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மேற்கூறிய நோன்பை விடச் சிறந்ததாகும்.

வாரத்தில் 2 நாட்கள் மட்டும்: இதில் வாரத்தில் 5 நாட்கள் எளிய உணவுப் பழக்கம் மேற்கொண்டு இரண்டு நாட்களில் மட்டும் 500-600 கலோரிக்குள் பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு: ஒரு நாள் எளிய உணவுப் பழக்கவழக்கம், அதற்கு அடுத்த நாள் 500-600 கலோரி மட்டும் எடுத்துக் கொள்வது. இந்த உண்ணா நோன்பை மாதத்தில் 2 முறையாவது பின்பற்றினால் உடல் நலமாக இருக்கும்.

இந்தவித உண்ணா நோன்பில் மா, பலா, வாழை, பூமிக்கு கீழே விளையும் கிழங்கு வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மற்றும் பசியுணர்வைத் தூண்டி விடும் என்பதால், இனிப்புத் தின்பண்டங்களையும் தவிர்க்க வேண்டும்.

இந்த நோன்புகளை மாரடைப்பு, இதயம் தொடர்பான நோய்கள், நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைப்பிடிக்கக் கூடாது.

உண்ணா நோன்பின் நன்மைகள்:

* இன்சுலின் எதிர்ப்புத் தன்மையால் வரும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.

* ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

* ரத்த அழுத்தத்தைச் சீரான அளவில் வைக்கிறது.

* 8 வாரங்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு இருப்பதால் 25-32 விழுக்காடு இதய நோய்கள் குறைகின்றன என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

* மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. மூளையில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதால், மூளை மழுங்கு (நினைவுமறதி) நோய் தடுக்கப்படுகிறது.

* வளர்ச்சி ஹார்மோன் நன்கு சுரப்பதால், உடலில் உள்ள தசைகள் வலுவடைகின்றன. இரண்டு நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பு இருந்தால், இந்த ஹார்மோன் சுரப்பது ஐந்து மடங்கு அதிகரிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மரு.அ.வேணி MD., DM(Neuro)

75980 01010, 80564 01010

* இளமையாக வாழ இந்த உண்ணா நோன்பு இருக்கும் பழக்கம் உதவி புரிகிறது.

* ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும் என்று ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.

* புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் புற்றுநோய் உள்ளவர்கள் உண்ணாநோன்பு கடைப்பிடிக்கும்போது அளவுமீறிப் பல்கிப்பெருகும் புற்றுசெல்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்கின்றன. இதனால் புற்றுசெல்கள் மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது.

* கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. மேலும் கொழுப்பு படிந்த கல்லீரலைக் குணப்படுத்தவும் இந்த உண்ணா நோன்பு பயன்படுகிறது.

இத்தனை நன்மைகளை நமக்குத் தரும் இந்த உண்ணா நோன்பு இருப்பதற்கு மனக் கட்டுப்பாடு மிகவும் முதன்மையானது. முதல் முறை செய்யும்போது மிகவும் கடினமாகத்தான் தெரியும். ஆனால் தொடர்ந்து செய்யும்போது நம் உடலும், மனமும் ஒத்துழைப்பதையும், தன்னம்பிக்கை மேன்மையுறுவதையும் நம்மால் உணர முடியும். நம் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிந்த பின்னும், இதைச் செய்யாமல் இருப்பது தவறு அல்லவா?

Tags:    

Similar News