சிறப்புக் கட்டுரைகள்

வேலை வாய்ப்புகள் நிறைந்த உணவுத் தொழில் நுட்பவியல் படிப்புகள்

Published On 2024-05-22 11:15 GMT   |   Update On 2024-05-22 11:16 GMT
  • உணவுக்கட்டுப்பாடு சார்ந்த வழிகாட்டுதல்கள் போன்ற பாடங்கள் இடம்பெறும்.
  • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உணவியல் நிபுணர்கள்.

நாம் உண்ணும் உணவு உற்பத்தி செய்யப்படுவது முதல், நமது உடலுக்குள் உணவாகச் செல்வது வரையிலான அனைத்து செயல்பாடுகளையும் அறிவியல் நுட்பங்களுடன் ஆராய்ந்து படிப்பதுதான் உணவு அறிவியல் (Food Science) துறை. ஏறக்குறைய வேளாண் அறிவியலின் அடிப்படையையும், ஊட்டச்சத்து அறிவியலின் நுட்பங்களையும் ஒருங்கிணைத்துப் படிப்பதாகும்.

இவ்வகையான படிப்பைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள், 12-ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களுடன் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், மனையியல் போன்ற அறிவியல் பிரிவு பாடங்களைப் படித்திருக்க வேண்டும். தகுதியான பாடப்பிரிவுகளைப் படித்தவர்கள், B.Sc Food Science, B.Sc Food and Nutrition, B.Sc Nutrition and Dietetics, B.Sc Home Science போன்ற இளங்கலை படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

இத்துறையின் இளங்கலை பிரிவில், உணவு அறிவியலுடன், அவ்வுணவை எவ்வாறு சமைத்துக்கொடுத்தால், எந்த நோயைக் குணப்படுத்தலாம் என்று படிப்பது, டயட்டடிக்ஸ் எனப்படுகிறது.

நோய்களுக்கான உணவுமுறை அல்லது உணவுக்கட்டுப்பாடு தொடர்பான படிப்பு என்பதால், மருத்துவம் சார்ந்த உடலியங்கியல் அடிப்படைகளையும், நோயியல் சார்ந்த அடிப்படைகளையும் பாடப்பிரிவுகளாகக் கொண்டுள்ளது. மனித உடலியங்கியல், உடலுறுப்புகளில் ஏற்படும் நோய்கள், அதன் அறிகுறிகள், அவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான உணவு முறை மாற்றங்கள், உணவுக்கட்டுப்பாடு சார்ந்த வழிகாட்டுதல்கள் போன்ற பாடங்கள் இடம்பெறும்.

இவ்வகையான இளங்கலை பாடப்பிரிவுகளில், உணவுப் பொருட்களை உருவாக்குவது, பக்குவப்படுத்துவது, உணவு பதப்படுத்துவது, உணவிலுள்ள அறிவியல் கூறுகளை ஆராய்ந்துப் படிப்பது, உணவு வேதியியல், புலன் உணர்வுச் சோதனைகள், உணவின் தரம் பரிசோதிக்கும் செயல்முறைகள், உணவிலிருக்கும் நுண்ணுயிர்கள், அவற்றிற்கான சோதனைகள் போன்றவை இடம்பெறும். இதற்கடுத்து அதே படிப்பில் M.Sc முதுகலைப் படிப்பையும், Ph.D முனைவர் ஆராய்ச்சிப் முடிப்பவர்களுக்கு அடுத்த சிறப்பு நிலை பணி வாய்ப்புகள் அதிகம்.

இளங்கலைப் படிப்புகளை முடித்தவர்களுக்கு கீழ்க்காணும் பொதுவான பணி வாய்ப்புகள் உறுதியாகக் கிடைக்கும்.

புதிய உணவுப்பொருட்களின் மூலப்பொருட்கள் அல்லது சேர்மானங்களை உருவாக்கும் வல்லுனர்கள்

உணவு உற்பத்தித் தொழிற்சாலைகளில் உணவின் சுவை, நிறம், வாசனை, தன்மை, தோற்றம் உள்ளிட்ட புலன் சாாந்த காரணிகளை உறுதிப்படுத்தும் வல்லுனர்கள்

உணவு நுண்ணறிவியல் வல்லுனர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு வல்லுனர்கள்.

உணவுத் தொழிற்சாலைகளில் உணவு வேதியியல் வல்லுனர்கள்.

உணவுப் பதப்படுத்தும் தொழிற்–சாலைகளில் பொறியியல் வல்லுனர்கள்.

உணவுத் தரக் கட்டுப்பாடு அதிகாரிகள்.

இவற்றுள், மிகக் குறிப்பாக டயட்டடிக்ஸ் என்ற படிப்பை மட்டும் இளங்கலை, முதுகலை என்று படிப்பவர்களுக்கு மருத்துவத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. காரணம் தற்போது பெருகி இருக்கும் நீரிழிவு, உடற்பருமன், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றிற்கு அந்த குறிப்பிட்ட துறை சார்பு சிறப்பு மருத்துவ உணவியல் வல்லுனர்கள் மருத்துவமனைகளில் அதிகம் தேவைப்படுகிறார்கள். இவர்கள் கீழ்க்காணும் பணிகளுக்குத் தகுதிபெற்றவர்கள்.

வண்டார்குழலி ராஜசேகர்

* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உணவியல் நிபுணர்கள்.

* பதிவு செய்யப்பட்ட உணவியல் வல்லுனர்கள் (முதுகலைப் படிப்பை முடித்து, ஆறு மாதகால மருத்துவமனை பயிற்சியுடன் தேர்வும் எழுத வேண்டும்).

* உதவி ஆராய்ச்சியாளர்கள், இணை ஆராய்ச்சியாளர்கள், அரசு சாரா உணவு அமைப்புகளில் முதன்மை உணவியல் வல்லுனர்கள்

* உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சைக்கான உணவியல் வல்லுனர்கள்

நியூட்ரிஷன் படிப்பில் மேலும் பல பாடப்பிரிவுகள் உள்ளன. அவை:

பொதுநலன் தொடர்பான உணவியல் வல்லுனர்கள்:

பொதுமக்களிடையே பரவலாகக் காணப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான குறைபாடுகளான ரத்த சோகை, வைட்டமின் ஏ குறைபாடு, அயோடின் சத்து குறைபாடு, நீரிழிவு நோய் போன்றவற்றிற்கான உணவு ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை நேரடியாக மக்களுக்குக் கொடுக்கும் பணி யைச் செய்யும் பொது நலன் சாாந்த உணவியல் வல்லுனர்கள்.

இந்த வகை உணவியல் வல்லுனர்கள் உலக சுகாதார மையம் UNICEF பிற நல வழித்துறை அமைப்புகளிலும், அரசு மற்றும் அரசு சாராத உணவும் உடல் நலனும் சார்ந்த நிறுவனங்களிலும், உணவு சார்ந்த ஒழுங்குமுறை ஆணையங்களிலும், உணவியல் தொடர்பான பத்திரிகைத் துறையிலும் பணியாற்றலாம். அழகுக் கலை நிபுணர்களுடன் உணவியல் வல்லுனர்களும் தற்போது கைகோர்த்துச் செயல்படும் நிலையை திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் காணலாம். இவ்வாறான சுய வேலைவாய்ப்புகளும் உண்டு.

விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு வகையான விளையாட்டுப் பயிற்சிகள், தடகளப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வீரர்களுக்கான பிரத்யேகமான உணவுகளைப் பரிந்துரை செய்து, வீரர்களின் உடல் நலனில் கவனம் செலுத்தி, அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதுவான உடல் அமைப்பிற்குத் தேவையான வழிகாட்டுதல்களைக் கொடுப்பவர்கள் விளையாட்டுத் துறைக்கான சிறப்பு உணவியல் வல்லுனர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.

தற்போது, அரசு மற்றும் தனியார் விளையாட்டுப் பயிற்சி நிலையங்கள் மட்டுமல்லாமல், நாட்டின் நட்சத்திர வீரர் வீராங்கனைகளுக்குத் தனிப்பட்ட முறையிலும் உணவியல் வல்லுனர்களாக, உணவியல் ஆலோசகர்களாகப் பணியமர்த்திக் கொள்ளப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல், உடற்பயிற்சிக் கூடங்களில் உணவியல் வல்லுனர்கள், விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான சிறப்புணவுகள் தயாரிக்கும் உணவு நிறுவனங்களில் உணவியல் வல்லுனர்கள், ஆலோசகர்கள், அரசு சார்ந்த விளையாட்டு அமைப்புகளில் உணவியல் வல்லுனர்கள் போன்ற பணிகளையும் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இத்துறையில் பயின்றவர்களுக்கு உண்டு.

உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் - உணவு தொழில்நுட்பவியல் (Food science and Technology / Food Technology)

12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவர்கள் B.Sc Food science and Technology மற்றும் B.Sc Food Technology படிப்பதற்குத் தகுதி பெறுகிறார்கள்.

இந்தியாவின் மொத்த உணவுச் சந்தையின் சதவீதத்தில் 32 சதவீதம் உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகளின் பங்கு பிரதானமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற துறைகளைவிட மிகப்பெரியது இந்தியாவின் உணவுப் பதப்படுத்துதல் துறை. இதன் மூலகாரணம் இந்தியாவில் அசுர வளர்ச்சி கண்டு வரும் உணவுத் தொழில்நுட்பவியல் துறையும் அது சார்ந்த பிற துறைகளும்தான். உணவுத் தொழில்நுட்பவியல் படித்தவர்கள் கீழ்க்கண்ட துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

*உணவு தொழிற்சாலைகள் மற்றும் உணவு ஆராய்ச்சி நிலையங்களில் உணவியல் துறையில் உணவு அறிவியல் வல்லுனர்கள்.

*உணவுத் தணிக்கையாளர்.

*உணவு சார்ந்த சுயதொழில் முனைவோர்கள் மற்றும் அவர்களுக்கான பயிற்சியாளர்கள்.

*உணவுத் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

*உணவுப் பொருட்களின் புலன் சார்ந்த வல்லுனர்கள்.

*உணவுப்பொருட்களின் பாக்கெட்டுகளில் காணப்படும் ஊட்டச்சத்து தொடர்பான Food Labels எழுதும் உணவியல் சார்ந்த தொழில் நுட்ப எழுத்தாளர்கள்.

*உணவுக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பகளில் அதிகாரிகள்.

புதுச்சேரியில் இத்துறை தொடர்பான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்:

1. பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி

* B.Sc Clinical Nutrition and Dietetics

* Ph.D Home Science

2. காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்

* M.Sc. Food Service Management

& Dietetics

3. அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்

* B.Sc Home Science

4. புதுவைப் பல்கலைக் கழகம்

* M.Sc.Food Science and Nutrition

* M.Sc.Food Science and Technology

* Ph.D.Food Science and Nutrition

* Ph.D.Food Science and Technology

5. ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி

*B.Sc Nutrition and Dietetics

6. மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்

*B.Sc Clinical Nutrition

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இத்துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுவதால், அந்த கல்லூரிகளின் பெயர்கள் உள்ளிட்ட பிற தகவல்களை கீழ்க்காணும் வலைத்தள இணைப்பு களுக்குள் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

https://avinuty.ac.in/maincampus/

https://www.indiacollegeshub.com/colleges/bsc-home-science-colleges-in-tamil-nadu.aspx

https://www.shiksha.com/science/colleges/b-sc-home-science-colleges-tamil-nadu

https://www.shiksha.com/medicine-health-sciences/dietics-nutrition/colleges/colleges-tamil-nadu?st[]=123&sp[]=244&uaf[]=specialization&rf=filters

https://www.collegesearch.in/bsc/colleges-tamil-nadu

Tags:    

Similar News