சிறப்புக் கட்டுரைகள்

எம்.எஸ்.வி. எனும் இசைச் சுரங்கம்

Published On 2024-05-25 11:35 GMT   |   Update On 2024-05-25 11:35 GMT
  • எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசை ஒரு பல்பொருள் அங்காடி போல.
  • மெட்டு சிறப்பாக இருக்கவே இந்த மெட்டிலேயே பாட்டு இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்.

"எந்தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்"

- என்றார் பாரதியார். "காணி நிலம் வேணும்" - என்ற பாடலில் காணி நிலம், மாளிகை, பத்து பன்னிரெண்டு தென்னை மரம், நிலவொளி, கத்தும்குயிலோசை, தென்றல், பாட்டுக் கலந்திடவே பத்தினிப் பெண், கவிதைகள், பராசக்தியின் காவல் என இத்தனையும் தனக்காக கேட்ட பாரதி, இந்த பூமிக்காகவும் ஒன்றைக் கேட்டார் என்றால் அது இதுதான், "எந்தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்"

இவ்வையத்தை பாலித்திட பராமரித்திடும் அளவிற்கு பாட்டுத் திறன் இருக்குமா? என்றால், இருந்திருக்கிறதே!

சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாரதியின், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?" - என்ற பாடலைக் கேட்டபோது வீரமும், நாட்டுப் பற்றும் பெறாதவர் யார்? அதிலும் பாரதியார் பாடல்களை இசையுடன் பாடிவிட்டால் அன்று மட்டுமல்ல, இன்றும் நமக்கு விருந்தாகவும் மருந்தாகவும் ஆகிவிடுகிறது தானே?

இசைக்கு மனிதர்கள் மட்டுமா மயங்குகிறோம்? கண்ணன் குழலூதினால், நாரதரும், தேவலோக பெண்கள் என்று சொல்லப்படுகிற ஊர்வசி, ரம்பை, திலோத்தம்மை மற்றும் மக்கள், பசுக்கள், மயில், பறவைகள் எல்லாம் மெய் மறந்து "எழுத்து சித்திரங்கள் போல் அசையாமல் நின்றனவே" என்கிறார் பெரியாழ்வார்!

உண்மைதான். இசைக்கு வசப்படாத உயிர்கள் ஏது? பயிர்கள் கூட இசைக் கேட்டால் அதிக செழிப்பாக வளர்வதாகவும், பசுக்கள் அதிகம் பால் சுரப்பதாகவும் படிக்கின்றோமே. இசையால் நோய் தீர்க்க "மியூசிக் தெரபி" உண்டல்லவா?

நம் தமிழ் திரை இசைத் துறையில் எத்தனையோ மேதைகள் ஜி. ராமநாதன் முதல் இன்றைய அனிருத் வரை எத்தனையோ பேர்கள்! அத்தனை பெயரையும் குறிப்பிட்டால் கட்டுரை நீளும். அவர்கள் ஒவ்வொருவரின் இசையமைப்புமே தனித்தன்மை வாய்ந்தது!

இந்த தொடரின் நாயகன் அமரர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசைப் புதையல் பற்றி பார்க்கலாம்..

1948 ல் வெளிவந்த "வீர அபிமன்யு" படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு. அந்தப் படத்தில் "புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மனமே பெறுவோமே" - என்ற பாடலுக்கு மட்டும் மெட்டு சரியாக பொருந்தி வராமல் 'டிமிக்கி' கொடுத்திருக்கின்றன வரிகள். அவர் பொறுமையிழந்து, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வீட்டுக்கு கிளம்பிவிட்டாராம்.

இசையமைப்பாளர் வெளியே போன பிறகு ஹார்மோனியத்தை எடுத்து வைத்து கொண்டு பாடல் வரிகளுக்கு மிக அழகான ஒரு மெட்டு போட்டுவிடுகிறார் அவரது உதவியாளரான 24 வயது இளைஞர். இது, எஸ்.எம். சுப்பையா நாயுடுவிற்கு தெரிந்துவிட்டது. பாட்டை திரும்ப வாசிக்க சொல்லிக் கேட்டார். மெட்டு சிறப்பாக இருக்கவே இந்த மெட்டிலேயே பாட்டு இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்.

ஆஹா, அந்த இளைஞன் அப்போதே இறக்கைக்கட்டி வானவெளியில் பறக்க ஆரம்பித்துவிட்டார். அவர் தான் பின்னாளில் எம்.எஸ்.வி. என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரர்!

பத்திரிக்கைகளில், திரைப்பட விளம்பரங்களில் "இசை எம்.எஸ்.வி." என்று வந்தால் போதும், கதாநாயகன், நாயகி, கதை இதெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், பாடல்களுக்காகவும், பின்னணி இசைக்காகவும் திரையரங்குகளை நோக்கி அலை அலையாகத் திரண்ட ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருந்தது.

அவரது பாடல்களைக் கேட்க வானொலிப்பெட்டியைச் சுற்றி வீட்டினர் மொய்த்திருப்பார்கள். எங்கள் வீடே அதற்கு சாட்சி. ஒரு சுவையான செய்தியை பின்வரும் வாரங்களில் சொல்கிறேன். கிராமங்களில் டீக்கடைகளிலும், நகரங்களில் சில ஓட்டல்களிலும் ஜூக் பாக்ஸ் (Juke Box) வசதியிருக்கும். பாடல் கேட்பதற்கான தனிப்பட்ட பெட்டியில் 25 காசு போட்டுவிட்டு விருப்பப்பட்ட பாடலை தேர்வு செய்து கேட்கலாமாம். இந்த ஜூக் பாக்ஸ் பாடல்களுக்காகவும் கூட்டம் அலைமோதி வியாபாரம் அள்ளிக்கொண்டு போன வரலாறு எல்லாம் எங்கள் காலத்தில் கேட்டதுண்டு!

கி.பானுமதி கிருஷ்ணகுமார்

சரி, நாம் "வீர அபிமன்யுக்கு" வருவோம். "வீர அபிமன்யு" படம் வெளியான போது டைட்டலில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பெயர் மட்டுமே வந்தது. எம்.எஸ்.வி பெயர் வரக்காணோம். மனம் மிகவும் துவண்டு போனார் அவர். ஆனால் மனம் ஒடியவில்லை. தொடர்ந்து அதே உண்மையான, நேர்மையான மும்முரமான உழைப்பு என்றே இருந்தார்!

ஒரு கட்டத்தில், ஜூபிடர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னைக்கு இடம் பெயர்ந்த போது, எஸ். எம். சுப்பையா நாயுடு, நிறுவன தயாரிப்பாளரிடம் சென்று எம்.எஸ்.வி-யைக் காட்டி "பிரபலமான எனது பல பாடல்கள் இந்த இளைஞன் மெட்டமைத்தது தான். இவனை சாதாரணமாக நினைக்கவேண்டாம். ரொம்ப விஷயம் தெரிஞ்சவன். இவன் ஒரு பெரிய சொத்து சரியான நேரத்தில் இதை சொல்லத்தான் காத்திருந்தேன். இவனை விட்டுடாதீங்க, வாய்ப்புகள் நிறைய கொடுங்க" என்று சொன்னாராம்.

ஒரு இசையமைப்பாளருக்கு அந்த இசை உதவியாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் திறமையை அடையாளம் காண முடிந்தது. பாம்பின் கால் பாம்பு அறியும் சரி. மெல்லிசை மாமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஓர் ஆகச் சிறந்த இசையமைப்பாளர் என்ற எண்ணம் எனக்கு எப்படித் தோன்றியது?

ஒன்று மட்டும் புரிகிறது! எங்கள் அம்மா நன்றாகப் பாடக்கூடியவர். எங்க வீட்டில் நான் இரண்டாம் குழந்தை. என் அண்ணனுக்கு என் அம்மா பாடிய தாலாட்டு பாடல்களை வயிற்றில் இருந்தபோது கேட்டு மயங்கி வளர்ந்திருப்பேனோ? எனக்கு அப்படித்தான் நினைக்க முடிகிறது. கருவினில் இருக்கும் குழந்தையின் கேட்புத் திறனுக்கு பிரகலாதன், அபிமன்யு என்று பல கதைகள் நம்மிடம் உண்டே!

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசை ஒரு பல்பொருள் அங்காடி போல. அங்கு மெல்லிசை, மேற்கத்தியம், கர்நாடகம், இந்துஸ்தானி, பைலா, கிராமியம் என்று எல்லா வகை இசையும் ஒரே திரைப்படத்தில் ஏன் சில நேரங்களில் ஒரே பாடலில் கூட, அத்தனை வகைகளும் கிடைக்கும்!

நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை தோழிகள் கேட்டார்கள் "எப்பவும் ஏன் எம்.எஸ்.வி. பாட்டுக்களையே கேட்குற, அதைப்பற்றியே பேசுற?"

நான் சொன்னேன், "அவர் பாடல்களில் தான் ஒரே பாடலில் மெட்டும் இசையும் மாறி மாறி வரும் அலுப்புத் தட்டாது! இது அக்மார்க் உண்மை! இதை அறுதியாகவும், உறுதியாகவும், இறுதியாகவும் சொல்வேன்.

"லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தில் "ராமன் எத்தனை ராமனடி" என்ற பாடல் இருக்கு. அந்தப் பாடல் பற்றிய ஒரு சுவையான விவரத்தை எம்.எஸ்.வி.அவர்களின் மகன் பிரகாஷ் அவர்கள் அண்மையில் என்னிடம் பகிர்ந்தார்.

ஒரு காலத்தில் பக்தி பாடல்கள், சாஸ்த்திரிய சங்கீதம் தவிர சினிமா பாடல்கள் எல்லாம் கேட்கக் கூடாது என்ற கெடுபிடி பல கட்டுப்பெட்டியான குடும்பங்களில் இருந்தது. அப்படியொரு வீட்டில் அந்த குடும்பத்தின் அப்பா,அம்மா வெளியே போயிருந்தபோது வீட்டுப்பிள்ளைகள் ரகசியமாக "ராமன் எத்தனை ராமனடி" என்றப் பாடலை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

திடீரென அவர்களின் அப்பா, அம்மா வந்துவிட்டார்கள். பாடல் கேட்ட அந்தக் குடும்பத் தலைவர் பிரமித்து நின்றுவிட்டார். சினிமா பாட்டில் இப்படியொரு பாட்டெல்லாம் வருதா? ஆச்சர்யமா இருக்கே என்று சொல்லி என்ன படப்பாடல்? யார் இசை எனக் கேட்டுவிட்டு, மறுநாள் காலையில் 7மணிக்கு எம்.எஸ்.வி.அவர்களின் வீட்டிற்கு சென்று ஒரு தாம்பாளத் தட்டில் பூ, பழம், இனிப்புடன் ஒரு பணமுடிப்பு வைத்து, "ராமன் எத்தனை ராமனடி" என்ற உங்கப் பாட்டைக் கேட்டேன். நெகிழ்ந்துவிட்டேன்! சினிமா பாட்டை கேட்கக் கூடாது என்று இருந்த என்னை இந்தப்பாட்டு கேட்கத்தூண்டியது. என்னால் முடிஞ்ச அன்பளிப்பு" என்றாராம்.

அதற்கு எம்.எஸ்.வி. "இதனை எழுதிய கவியரசர் தான் இந்தப் பாட்டுக்கு காரணகர்த்தா" என்று பணம் வாங்க மறுத்துவிட்டாராம். அன்று முதல் அந்த அன்பர் எம்.எஸ்.வி. குடும்ப நண்பராகி இரு வீட்டினரும் பரஸ்பரம் குடும்ப விழாக்களில் கலந்துக்கொள்ளும் அளவிற்கு பாசமாகி விட்டார்களாம்.

இன்னொரு நிகழ்ச்சி இந்த பாடலுக்கு உண்டு. "கவியரசர் தனது மனதுக்குப் பிடித்தவர்களைப் பற்றி எங்கேயாவது பாடலில் வைத்து எழுதிவிடுவது அவரின் பழக்கம். கவியரசர், தனது வழக்கறிஞர் நண்பரிடம் நான் உங்க குடும்பத்தைப்பற்றி ஒரு பாட்டுல எழுதியிருக்கிறேன்பா என்றிருக்கிறார். நண்பரின் பிள்ளைகள் பெயர் ' ராம்' என்பதில் முடியும். நண்பர் மேலுள்ள பாசத்தினாலும் நட்பின் மீதுள்ள மரியாதையினாலும் நண்பர் குடும்பத்தினர் பெயரை வைத்து எழுதிய பாடல் "ராமன் எத்தனை ராமனடி" என்றார் எம்.எஸ்.வி. அவர்களின் மகன்.

இந்தப் பாடலில் கல்யாண ராமன், சீதா ராமன், ராஜா ராமன், சுந்தர ராமன், கோசல ராமன், தசரத ராமன் ('தச ரத' என்றால் ஒரே நேரத்தில் பத்து ரதங்களை ஓட்டுவாராம். அதனால் அவருக்கு 'தச ரதன்' என்று பெயர். இதை மிகச் சரியாக சொல் பிரித்து கவியரசர் எழுதியதை சரியாகப் பிரித்து பாட வைத்திருப்பார் எம்.எஸ்.வி.) கோதண்டராமன், ஸ்ரீஜெயராமன், ரகுராமன், சிவராமன், ஸ்ரீ ராமன், அனந்த ராமன் என்று ராமனின் 12 பெயர்களையும் பெயர் காரணங்களோடு அமைத்து எழுதிய கவியரசரை என்ன சொல்லி போற்றுவது?

"ராமன்...எத்தனை...ராமனடி" என்று பெண் பார்க்கும் படலத்திற்கே உரிய தயக்கத்துடனும் வெட்கத்துடனும் பி.சுசீலா பாடுவதாக ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் போக்கு ஒவ்வொரு ராமனையும் ரசித்துப் பாடி புகழ்வதும், அதற்கேற்றபடி காட்சிகளில் அந்தந்த ராமனை காட்டுவதும் அழகு. !

தொடர்ந்து புதையல் எடுப்போம்...

இணைய முகவரி:banumathykrishnakumar6@gmail.com

Tags:    

Similar News