சிறப்புக் கட்டுரைகள்
null

மூளை ஆராய்ச்சி சாதனை

Published On 2024-05-22 10:45 GMT   |   Update On 2024-05-22 11:17 GMT
  • நினைவாற்றல், அறிவுத் திறன் ஆகியவற்றில் இவர் ஆய்வு நடத்தி பல சாதனைகளை நிகழ்த்தினார்.
  • மூளை செய்திகளை உணர்ந்து அறியும் திறன் இன்றைய அதி நவீன கணினியை விட வேகமானது.

உத்வேகம் ஊட்டும் இந்தப் பெண்மணி தான் நியூரோ பிசியாலஜி எனப்படும் மூளை இயலை முதலில் நிறுவியவர். மனித மூளை, நினைவாற்றல் உள்ளிட்ட மூளை சம்பந்தமான பல்வேறு ஆய்வுகளையும அதன் அடிப்படையிலான உண்மைகளையும் கண்ட "மூளைப் பெண்மணி" இவர். 105 வயதான இவர் இன்றும் துடிப்புடன் இயங்குகிறார் என்பது ஆச்சரியகரமான ஒரு உண்மை!

பிறப்பும் இளமையும்: இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 15-6-1918 அன்று பிரெண்டா மில்னெர் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சாமுவேல் லாங்க்போர்ட் ஒரு இசை விமர்சகர், பத்திரிகையாளரும் கூட. தாயார் ஒரு பாடகி. தந்தை, தாய் ஆகிய இருவரும் இசைத் துறையில் நிபுணர்களாக இருந்தாலும் கூட பிரெண்டாவிற்கு இசையில் ஒரு லயிப்பு ஏற்படவில்லை.

1918-ல் ஏற்பட்ட இன்புளுயென்சா நோயில் தாயாரும் குழந்தையும் பீடிக்கப்பட்டு ஒரு வழியாக பிழைத்துக் கொண்டனர்.

கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சேர்ந்த பிரெண்டா உளவியல் பிரிவில் சேர்ந்தார். பட்டத்தையும் பெற்றார்.

19 வயதிலேயே பணியாற்றத் தொடங்கிய இவருக்கு மூளை பற்றிய ஆய்வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது.

நியூரோ பிசியாலஜி என்று அறியப்படும் நரம்பு இயங்கு இயலை ஒரு புதிய துறையாக இவரே கண்டுபிடித்து நிறுவினார்.

நினைவாற்றல், அறிவுத் திறன் ஆகியவற்றில் இவர் ஆய்வு நடத்தி பல சாதனைகளை நிகழ்த்தினார்.

மூளை: மனித மூளை ஒரு சிக்கலான உறுப்பு. இதைப் பற்றிய ஆயிரம் அதிசய தகவல்கள் உண்டு. பிரமிக்க வைக்கும் சில தகவல்கள் இதோ:

மூளையில் 73 சதவீதம் நீர் தான் உள்ளது.

2 சதவீதம் டீ-ஹைட் ரேஷன் ஏற்பட்டால் நமது கவனிக்கும் சக்தி, நினைவாற்றல் எல்லாம் போய்விடும். மூளையின் எடை ஆண் என்றால் 1370 கிராம். பெண் என்றால் 1200 கிராம். உடல் எடையில் இது 2 சதவீதம் தான். ஆனால் 20 சதவீத ஆக்சிஜனை இது எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறது.

நமது மூளையில் எத்தனை செல்கள் (உயிரணுக்கள்) இருக்கின்றன என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று போல் இன்னொரு உயிரணு இல்லை. 3300 வகையான உயிரணுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் குறைந்தபட்சம் நூறு பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) உயிரணுக்கள் இருக்கலாம். நூறு கோடி நரம்பிணைப்புகள் இருக்கலாம். இவை தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தகவலைப் பரிமாறிக் கொண்டே இருக்கிறது.

மூளை செய்திகளை உணர்ந்து அறியும் திறன் இன்றைய அதி நவீன கணினியை விட வேகமானது. இங்கு தகவல் மணிக்கு 268 மைல் வேகம் என்ற வேகத்தில் செல்கிறது. (பார்முலா ஒன் ரேஸ் காரின் உயர்ந்தபட்ச வேகம் மணிக்கு 240 மைல் தான்!) ஒவ்வொரு நியூரானும் ஒரு விநாடிக்கு ஆயிரம் நரம்புத்தாக்கம் (IMPULSE) ஏற்பட பல்லாயிரம் நரம்பிணைப்பு தொடர்புகள் மற்ற நியூரான்களுடன் ஏற்படுகின்றன.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் மூளையின் மூலம் 70000 எண்ணங்களை எண்ணுகிறோம். அதாவது ஒரு நிமிடத்திற்கு 48.6 எண்ணங்கள் என்ற அளவில் எண்ணுகிறோம். மூளையால் 50000 வாசனைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது. ஒவ்வொரு நிமிடமும் 750 முதல் 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியே பாய்கிறது.

கண் இமைக்கும் நேரத்தை விடக் குறைவான நேரத்தில் - நீங்கள் பார்க்கும் காட்சியை கண் அனுப்ப அதை 13 மில்லி வினாடிகளில் மூளை உணர்ந்து கொள்கிறது. மூளையில் 400 மைல் நீளம் என்ற அளவில் ரத்த நாளங்கள் உள்ளன. 25 வயதில் தான் மூளை முழு வளர்ச்சியை அடைகிறது. தொடர்ந்து மூளை இயக்கத்திற்கு ஆக்சிஜன் தேவை. ஐந்து நிமிடம் ஆக்சிஜன் இல்லையென்றால் மூளை சேதப்படும்.

மூளையின் சேமிக்கும் திறனை முழுவதுமாக இன்னும் அறிய முடியவில்லை.

எல்லையற்ற அளவில் அது சேமிக்கும் திறனைக் கொண்டது. இப்படி மூளை பற்றிய விவரங்களை சொல்லிக் கொண்டே போகலாம் - முடிவில்லாமல்!

ஒன்பது வகை அறிவு: மனிதனுக்கு ஒன்பது வகை அறிவு உண்டு என்று அறிவியல் சோதனைகள் நிரூபிக்கின்றன.

மொழி வகையிலான அறிவு- LINGUISTIC, 2) தர்க்கரீதியிலான அறிவு - LOGICAL - MATHEMATICAL, 3) பார்ப்பதன் மூலம் வருகின்ற அறிவு, மற்றும் இடம் பற்றிய அறிவு - VISUAL AND SPATIAL 4) உடல் இயக்கத்தில் இருக்கும் அறிவு - BODILY KINESTHETIC 5) இசை அறிவு- MUSICAL 6) தனி மனித உறவு சார்ந்த அல்லது நபர்களுக்கு இடையேயான அறிவு - INTERPERSONAL 7) தன்னைப் பற்றிய அறிவு - INTRAPERSONAL 8) இயற்கையின் அறிவு - NATURALISTIC. 9) புறநிலை பற்றிய அறிவு - EXISTENTIAL.

ஆக இவற்றை கல்விப் பயிற்சியின் மூலம் திறம்படக் கூட்டிக் கொள்ளலாம். மூளையைப் பற்றிய பல தவறான தகவல்களை அறிவியல் தகர்த்து வருகிறது. மூளையைத் தீவிரமாக ஆராய்ந்த பிரெண்டா, அறிவியல் ரீதியாக மூளை பற்றிய சரியான புது தகவல்களைத் தந்தார்.

நினைவாற்றல்: நினைவாற்றல் ஆய்வில் இறங்கிய பிரெண்டா, இருவகை நினைவாற்றல் நமக்கு இருப்பதைக் கண்டுபிடித்தார். ஒன்று நிகழ்வு நினைவாற்றல் இன்னொன்று செய்முறை நினைவு.

தகவல்களை ஒழுங்கு படுத்துவதில் மூளையின் முன் மடல்களுக்கும் நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை அவர் கண்டுபிடித்தார். இப்படி அவர் கண்டுபிடித்த தகவல்கள் மூளை கோளாறுகள், நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட தீவிரமான வியாதிகளைத் தீர்க்க வழிவகைகளைக் கண்டுபிடிக்க உதவியது. 'வாடா' என்ற ஒரு சோதனை மூலம் இடது பக்க மூளையே மொழி பற்றிய அறிவில் முன்னிலைப் பங்கு வகிக்கிறது என்பதை அவர் நிரூபித்தார்.

சாதனையான சோதனை: ஒரு முறை ஹார்ட்போர்ட் என்ற இடத்திற்கு ஒரு நோயாளியைப் பார்க்க உடனே வருமாறு பிரெண்டாவிற்கு அழைப்பு வந்தது. அங்கு விரைந்த அவர் ஹென்றி மொலைசன் (ஹெச் எம் என்று பின்னால் அனைவராலும் குறிப்பிடப்பட்டார் இவர்) என்பவரைக் கண்டார்.

அவருக்கு தான் அன்றாடம் செய்யும் செயல்களே நினைவில் இல்லை. இதைப் பார்த்து அதிர்ந்து போன பிரெண்டா இரு சோதனைகளை அவரிடம் மேற்கொண்டார். 1955, ஏப்ரல் 26-ம் தேதி நடந்த சோதனை பற்றியும் 1957-ல் ஹெச். எம் மீது நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையும் 1957-ல் உலகிற்குத் தெரிய வந்தது. சுமார் 2500 ஆய்வுப் பேப்பர்களில் இந்த சோதனை மேற்கோளாகக் காட்டப்படும் அளவு இது வரலாற்று பிரசித்தி பெற்ற சோதனையாக ஆனது.

இதில் தான் ஹிப்போகாம்பஸ் என்ற மூளையின் பின் மேடு, இதுவரை நினைவாற்றல் பற்றிய எந்த விஷயத்திலும் அறிஞர்களால் பார்க்கப்படாமல் இருந்ததையும் அதன் முக்கியத்துவத்தையும் பிரெண்டா சுட்டிக் காட்டினார்.

ஒரு சுவையான விஷயம் ஹெச். எம். மீதான அவரது தொடர் சோதனை 50 ஆண்டுகள் தொடர்ந்தன.

குறுகிய கால நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் ஆகியவை பற்றிய பல புதிய உண்மைகள் உலகிற்குத் தெரிய வந்தன.

வலிப்பினால் அவதிப்பட்ட ஒரு நோயாளி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தனது பழைய காலம் பற்றிய அனைத்தையும் மறந்தார். ஆனால் அவரால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் மனித மூளையில் நினவாற்றலைக் கொள்ளும் பல்வேறு அடுக்குகள் உள்ளன என்பதை பிரெண்டா தன் ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்தார். மூளையின் பல்வேறு பகுதிகள் எப்படி இயங்குகின்றன என்பதைக் கண்டுபிடிக்க இவரது ஆராய்ச்சிகள் பெரிதும் உதவின.

விருதுகள்: ஏராளமான விருதுகள் இவருக்கு வந்து குவிந்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இவரை கவுரவித்தன. 2020- ல் மில்னெர் 25 கவுரவ பட்டங்களைப் பெற்றிருந்தார்.

நன்கொடை: அவருக்கு வந்த பரிசுத் தொகை ஏராளமாகக் குவிந்தது. ஆகவே பத்து லட்சம் டாலர்களை அவர் மாண்ட்ரீல் நியூராலஜிகல் இண்ஸ்டிடியூட்டுக்கு நன்கொடையாக அளித்தார்.

குடும்பம்: 1941-ல் பிரெண்டாவிற்கான நிதி உதவி தீர்ந்து விடவே அவர் பிரிட்டனின் சப்ளை அமைச்சகத்தில் சேர வேண்டி நேர்ந்தது. அங்கு ராடாரை இயக்கும் ஆபரேட்டர்களில் எந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. அங்கு தான் அவர் பீட்டர் மில்னெர் என்ற ஆய்வாளரைச் சந்தித்தார். ராடார் ஆய்வில் ஈடுபட்டிருந்த இருவரும் 1944-ல் மணம் புரிந்து கொண்டனர். கணவருடன் கனடா சென்று அங்கு குடியேறினார் பிரெண்டா. ஆனால் 1970-ல் தனது கணவரை விவாகரத்து செய்தார் பிரெண்டா.

நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம்: 2018-ம் ஆண்டு தனது நூறாவது பிறந்த நாளை பிரெண்டா கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில், 'தான் இன்னும் பல பிறந்த நாள்களைப் பார்க்க வழி கோலப் போவதாகச்' சொன்னார். நூறாவது வயதிலும் அவர் தனது வேலையை விடவில்லை. ஆராய்ச்சிகளையும் விடவில்லை. 101 வயதிலும் கூட மாண்ட்ரீலில் உள்ள மக்கில் பல்கலைக் கழகத்தில் பிரெண்டா பணியாற்றி வந்தார் என்றால் நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது உண்மை!

இளைஞர்களுக்கு பிரெண்டாவின் அறிவுரைகள்: பொருள் பொதிந்த வழிகாட்டுகின்ற அறிவுரைகளை பிரெண்டா அனைத்து இளைஞர்களுக்கும் தருகிறார். அவற்றில் மிக முக்கியமான ஒன்று இது:

தப்பான ஒரு பணிக்களத்தில் அல்லது வேலையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் அதை உடனே மாற்றத் தயங்காதீர்கள். (நான் மட்டும் என் பணியை மாற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால்) சாதாரண ஒரு பள்ளிக்கூடத்தில் நான் ஒரு கணித ஆசிரியையாகவே இருந்திருப்பேன்"

மிகத் துணிச்சலுடன் தனக்கு ஒவ்வாத ஒரு தொழிலில் தான் இருப்பதை உணர்ந்து கொண்ட பிரெண்டா உடனே நரம்பியலில் தன் பணியைத் தொடங்கி அதிலேயே ஆய்வு செய்து முன்னேறினார்.

ஆகவே நீங்கள் விரும்பும் ஈடுபாடுடன் கூடிய வேலையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள் என்பதே இவரது முக்கியமான அறிவுரை!

இப்போது இவருக்கு வயது 105.

மூப்பின் முதிர்ச்சியில் இருப்பதாகக் கூறும் இவர் தொடர்ந்து தன் ஆய்வுப் பணியைத் தொடர்கிறார்! மூளை இயலில் புது வழி காட்டிய இவரை சாமான்யன் முதல் மேதை வரை (மூளை உள்ள அனைவரும்) மறக்க முடியுமா என்ன?

தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

Tags:    

Similar News