செய்திகள்

தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-06-24 04:58 GMT   |   Update On 2017-06-24 04:58 GMT
தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுடக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். அது இந்தியாவின் ஒரு பகுதி. கச்சத்தீவு மீட்கப்பட்டால் முழுமை அளவில் தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும்.



1991-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் அம்மா சுதந்திர தின கொடியை ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தார். சுப்ரீம் கோர்ட்டிலும் அவரது பெயரிலேயே வழக்கு தொடர்ந்தார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதுதான் தீர்வு என்றார். இன்றும் நாங்கள் அவரது வழியில் கச்சத்தீவை மீட்கும் வி‌ஷயத்தில் உறுதியாக இருக்கிறோம்.



1974-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார். அதுவரை இந்திய எல்லை கச்சத்தீவு வரை விரிவாக இருந்தது. 500 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடித்துள்ளனர். எனவே தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படை சுடக் கூடாது. கைது செய்யக் கூடாது. விசைப்படகுகளை பறிமுதல் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News