ஆன்மிகம்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு 1008 பால்குட ஊர்வலம்

Published On 2018-05-05 04:25 GMT   |   Update On 2018-05-05 04:25 GMT
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சித்திரை 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டது.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சித்திரை 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு முத்துமாரி சுக்ரவார வழிபாட்டு குழு நலசங்கம் சார்பில் 12-வது ஆண்டாக 1008 பால்குட ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டது. மாரியம்மன்கோவிலில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து காலை 9 மணிக்கு பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன.

ஊர்வலத்தை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் வழிபாட்டுக்குழு நல சங்க கவுரவ தலைவர் மேத்தா தொடங்கி வைத்தார். இதில் சாமி, நாகராஜன், உணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் 4 ராஜவீதிகள் வழியாக அம்மன்சன்னதியை வந்தடைந்தது. அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது. வருகிற 7-ந்தேதி மதியம் பேச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை முத்துமாரி சுக்ர வாரவழிபாட்டுக்குழு நல சங்கம் மற்றும் அன்னதான அறக் கட்டளை தலைவர் வைத்திலிங்கம், பொது செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கந்தசாமி, துணைத்தலைவர் சோமசுந்தரம், துணை செயலாளர் சைவராஜ், நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News