ஆன்மிகம்
ஏழைமாரியம்மன், காமாட்சியம்மன், சண்டபிரசண்ட மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2017-08-12 04:42 GMT   |   Update On 2017-08-12 04:42 GMT
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் கமலா நகரில் உள்ள செல்லியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7.30 மணிக்கு பூங்கரகம் எடுத்து வர பம்பை நதிக்கரைக்கு புறப்படுதலும், பகல் 12 மணிக்கு சக்தி பூங்கரகம் வீதிஉலா வருதலும், 1 மணிக்கு செல்லியம்மனுக்கு 108 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது.

பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடும், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு கும்ப படையலிட்டும் வழிபாடு செய்தனர். 9 மணிக்கு அம்மன் வீதிஉலா நடந்தது.

இதேபோல் விழுப்புரம் மேலவீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சாமி வீதிஉலா நடைபெற்றது.

விழுப்புரம் நாப்பாளைய தெருவில் உள்ள சண்டபிரசண்ட மாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மன் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் விழுப்புரம் பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News