வழிபாடு

திருச்செங்கோடு மலை செந்நிறமாக திகழ புராணம் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

Published On 2024-05-24 05:33 GMT   |   Update On 2024-05-24 05:33 GMT
  • வட இமயம் தொடங்கி தென் குமரி வரை உள்ள சிவத்தலங்கள் 1008.
  • செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு என அழைக்கப்பட்டது.

காலத்தால் அளவிட முடியாத பழம் பெருமையும், புராண வரலாறும் கொண்டது திருச்செங்கோடு என்ற திருக்கொடி மாட செங்குன்றூர். வட இமயம் தொடங்கி தென் குமரி வரை உள்ள சிவத்தலங்கள் 1008. இதில் பாடல் பெற்ற தலங்கள் என்னும் புகழ் பெற்றவை 274 கோவில்கள்.

இதில் தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திருப்புக்கொளியூர் என்னும் அவினாசி, திருமுருகன் பூண்டி, திருநனா என்றழைக்கப்படும் பவானி, திருக்கொடி மாடச் செங்குன்றூர் என்றழைக்கப்படும் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர். திருவெஞ்சாமக்கூடல், திருப்பாண்டி, கொடுமுடி, திருக்கருவூரணி நிலை என்னும் கரூர் ஆகிய 7 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.

செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு என அழைக்கப்பட்டது என்றாலும், செந்நிறமாக திகழ புராணம் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

திரிபுரம் எரிக்க புறப்பட்ட சிவபெருமான் மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்மை நாணாக்கி, அக்கினி தேவனை அம்பு முனையில் பொருத்தி, வாயுவை விசையாக்கி எடுத்து சென்றார். எல்லாம் சிவம் என்றிருக்க நம் துணையின்றி சிவனால் முப்புரத்தை எரிக்க முடியாது என மேரு, வாசுகி, அக்கினி, வாயு ஆகியோர் ஆணவம் கொண்டனர்.

இதனை உணர்ந்த எம் பெருமான் இவர்கள் துணையின்றி தம் சிரிப்பாலேயே முப்புரத்தையும் எரித்து அழித்தார். இந்த நிலையில் வாயுவுக்கும் மும்மூர்த்திகளின் ஆபரணமாக திகழும் ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற பெரும் போட்டி, சண்டை எழ இதில் தலையிட்ட தேவர்கள் மேரு மலையை வாயு தன் பலத்தால் தகர்க்க வேண்டும்.

ஆதிசேஷன் தன் பலத்தாலும் படத்தாலும் அதனை தடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு போட்டியிட்டு வெல்பவர்களே பலசாலி என்று கூறினார்கள். அதன்படி மேரு மலையை ஆதிசேஷன் பற்றிக் கொள்ள,வாயுதேவன் தன் பலம் முழுவதையும் பிரயோகித்தும் வெற்றி காண முடியவில்லை.

தோல்வியில் ஆத்திரம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் ஈரேழு லோகங்களிலும் காற்றே இல்லாமல் செய்கிறான். சுவாசிக்க காற்று இல்லாமல் உயிரினங்களும், பயிரினங்களும் மயங்கி விழ பயந்து போன தேவர்கள் வாயுவிடம் மன்றாடினார்கள்.

வாயுதேவன் மறுக்கவே தெய்வ குணம் கொண்ட ஆதிசேஷனை போட்டியில் விட்டுக் கொடுக்கும்படி வேண்டினார்கள். மனமிறங்கிய ஆதிசேஷன் தன் பிடியை தளர்த்த வாயு தன் பலத்தால் மோதி ஆதிசேஷனின் தலையையும், மேருமலையின் சில பாகங்களையும் பிய்த்து கொண்டு போகும் படி செய்தார்.

இதில் ஆதிசேஷனின் ஐந்து தலைகளும், மேருவின் ஐந்து மலைகளும் பெயர்ந்து விழுந்தது. ஆதிசேஷனின் நடுநாயகமான தலையும், அதில் இருந்து பீறிட்ட ரத்தம் தோய்ந்து விழுந்ததால் செங்குன்றூர் எனவும், பின்னர் திருக்கொடி மாடச்செங்குன்றூர் எனவும் வழங்கப்பட்டு காலப் போக்கில் மருவி திருச்செங்கோடானது. 

Tags:    

Similar News