சினிமா

அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்: கமல்ஹாசன் பேட்டி

Published On 2017-07-29 06:20 GMT   |   Update On 2017-07-29 06:20 GMT
அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று மனதில் பட்டதை சொல்வதாக தந்தி டி.வி.க்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
தந்தி டி.வி.யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

கமல்ஹாசன் அளித்த பதில்களின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

நான் சிறுவயதாக இருக்கும் போதே எங்கள் வீட்டில் பலவிதமான கருத்துக்கள் பற்றி விவாதம் நடக்கும். பரந்த மனதுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். அதில் ஆத்திகம், நாத்திகம் எல்லாம் இடம் பெறும்.

அதன் மூலம்தான் எனக்கு தமிழ் மீது பற்றும், பகுத்தறிவு மீது பிடித்தமும் ஏற்பட்டது. எப்போதும் என் மனதில் தோன்றிய பொதுவான கருத்துக்களை சொல்ல நான் தயங்கியது இல்லை.



நான் எனக்குள் தோன்றிய நல்ல கருத்துக்களை சொல்கிறேன். இன்றைய நிலையில் நடைபெறும் அரசியல் பற்றிய எனது கருத்துக்கள் பொதுவானவை. பொது வாழ்வில் ஊழல் நடைபெறக்கூடாது என்பதால் அதை சுட்டிக்காட்டுகிறேன்.

எனது கருத்து அரசியல் தொடர்பானது அ.தி.மு.க. பற்றிய கருத்து அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக சொல்லப்படும் கருத்துக்கள். அதற்காக என்னை அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். அரசியல் கட்சி தொடங்கினால் அதற்கு எவ்வளவு பணம் தேவை என்று எனக்கு தெரியும்.

எனது விமர்சனம் பொதுவானது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறிவைக்கப்பட்டேன். அது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.



நான் புதிதாக அரசியல் பேசவில்லை. எதையும் மனதில் வைத்துக் கொண்டு குறை கூறவில்லை. மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் எனக்கும் அக்கறை உண்டு. கருத்து சொல்ல உரிமை உண்டு. அதுபற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை. ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன்.

நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தேடுகிறார்கள். பொதுப் பணி துறை என்றால் பொறுப்பான என்ஜினீயர் அதற்கு தலைமை ஏற்க வேண்டும். சுகாதாரதுறை என்றால் சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும்.

நான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் காரணம் எனக்கு நடிப்பு பற்றி தெரியும். இதுபோல் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர்கள் அமைச்சராக இருந்தால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும்.

படிக்காதவராக இருந்தாலும் காமராஜர் அற்புதமான மனிதர். தனி திறமை உள்ளவராக இருந்தார். சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் படிக்கவில்லை. என்றாலும் அவர்கள் எதில் இருந்தார்களோ அதில் தங்கள் திறமையை நிரூபித்தார்கள்.



இன்று அது போன்ற தலைவர்கள் இல்லை. எனவே தலைவர்களை தேடாமல் நிபுணர்கள் தேவை என்று தான் மக்கள் கருதுகிறார்கள். அது போன்ற நிலை உருவாக வேண்டும்.

நானும் எனது பட நிறுவனமான ராஜ்கமல் பிக்சர்ஸ்சும் மிகவும் நேர்மையாக இருக்கிறோம். எனது நிறுவனம் முறையாக வரி செலுத்துகிறது. எனது சம்பளம் உள்பட அனைத்துக்கும் முறையான வருமான வரி செலுத்துகிறோம். உண்மையாக இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை சரியாக இருக்கிறேன்.

சினிமாவில் முறைகேடுகள் நடப்பதாக விமர்சனம் உள்ளது. என்னைப் போல் எல்லோரும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் நான் தயாரிக்கும் படத்தை குறிப்பிட்ட தொகைக்கு விற்கிறேன். அதற்கு கீழே தியேட்டர்களில் டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்பது, தியேட்டர் கட்டணம் போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. அவை முறைப்படுத்தபட வேண்டும் என்ற கோரிக்கைகள் கவனிக்கப்பட வேண்டியவை.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News