செய்திகள்

மீண்டும் மோடி பிரதமரா? - முலாயம் கருத்துக்கு சுப்ரியா சுலே பதில்

Published On 2019-02-13 13:21 GMT   |   Update On 2019-02-13 13:21 GMT
பாராளுமன்ற கூட்டத்தின் இறுதி நாளான இன்று மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என முலாயம் சிங் தெரிவித்த கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் பெண் எம்.பி. பதில் அளித்துள்ளார். #SupriyaSule #MulayamSingh #MulayamSinghremark
புதுடெல்லி:

16-வது பாராளுமன்ற கூட்டத்தொடரின் நிறைவுநாளான இன்று மக்களவையில் பேசிய பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். 

உத்தரபிரதேசம் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த நரேந்திர மோடியை பார்த்து, “நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும், எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான் என கூறினார்.  அப்போது முலாயம் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் அமர்ந்திருந்தார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மாயாவதியுடன் கைகோர்த்து முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் செயலாற்றி வரும் நிலையில், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளது தேசிய அரசியல் அரங்கில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று மாலை கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘முலாயம் சிங் யாதவ் எனது பெருமதிப்புக்குரிய தலைவர், தேசிய அளவில் அவருக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எனினும், அவரது எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இதேபோல் பல்வேறு தரப்பினரும் முலாயமின் கருத்தை விமர்சித்து வருகின்றனர். அவ்வகையில், பாராளுமன்ற வாசலில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. சுப்ரியா சுலே, ‘கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவுநாளன்று மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என மதிப்பிற்குரிய முலாயம் சிங் யாதவ் முன்னர் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி நடக்கவில்லையே..’ என குறிப்பிட்டுள்ளார்.

#SupriyaSule #MulayamSingh #MulayamSinghremark #ModiPMagain #ManmohanSinghiPMagain
Tags:    

Similar News