செய்திகள்

ஐ.ஏ.எஸ் படிப்பதற்காக டெல்லி சென்ற தமிழக மாணவி மர்ம மரணம்

Published On 2018-10-29 01:10 GMT   |   Update On 2018-10-29 01:10 GMT
டெல்லியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TN #Delhi
புதுடெல்லி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவருடைய மனைவி தேவி (43). இவர்களுடைய மகள் ஸ்ரீமதி (20), மகன் வருண்ஸ்ரீ (16).

ஸ்ரீமதி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்தார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பியதால் அவருடைய பெற்றோர் ஸ்ரீமதியை டெல்லியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 6 மாதங்களுக்கு முன் சேர்த்துவிட்டனர். அந்த பயிற்சி மையத்தின் அருகே உள்ள மாடி கட்டிடத்தில் அறை வாடகைக்கு எடுத்து ஸ்ரீமதி தங்கியிருந்தார். அவருடன் நெல்லையை சேர்ந்த மாணவி ஒருவரும் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த மாணவி வெளியில் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து அறைக்கு திரும்பினார். அப்போது ஸ்ரீமதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய நிர்வாகிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

அவர்களும், அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்களும் அங்கு வந்தனர். இதுகுறித்து டெல்லி கரோல்பாக் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஸ்ரீமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.



ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. டெல்லியில் தங்கியிருந்து படிப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பெற்றோரிடம் கூறிவந்ததாக தோழிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். ஸ்ரீமதியின் அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், தற்கொலை செய்ய தான் எடுத்த முடிவை குறிப்பிட்டு மன்னிக்கும்படி வேண்டியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டது பற்றி சத்தியமங்கலத்தில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஸ்ரீமதியின் பெற்றோர் கதறி அழுதனர். அவர்கள் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஸ்ரீமதியின் உடல் இன்று (திங்கட்கிழமை) சத்தியமங்கலத்துக்கு கொண்டுவரப்படுகிறது. #TN #Delhi
Tags:    

Similar News