search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடியில் டி.டி.வி.தினகரன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசினார். அருகில் டாக்டர் முத்தையா உள்ளார்.
    X
    பரமக்குடியில் டி.டி.வி.தினகரன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசினார். அருகில் டாக்டர் முத்தையா உள்ளார்.

    மக்களவை தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் -டிடிவி தினகரன்

    ஜெயலலிதா வழியை பின்பற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெறும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #AMMK #TTVDhinakaran #ADMK #DMK
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க.வின் மக்கள் சந்திப்பு பயணம் நடந்தது. இதில் பங்கேற்ற துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்த வேனில் சென்று மக்களை சந்தித்தார். அவருடன் பரமக்குடி தொகுதியில் வெற்றிபெற்று தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் முத்தையாவும் கைகூப்பியபடி ஜீப்பில் சென்றார்.

    வேட்பாளர் அறிமுக கூட்டம்போல் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் தினகரன் பேசியதாவது:-

    தமிழக மக்களின் நலனில் தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் அக்கறைகாட்டவில்லை. அவர்களால் இங்கு காலூன்ற முடியாது என்பதால் ஆந்திரா, கர்நாடகம், கேரளாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் வழியை பின்பற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெறும்.

    ஆளும் அ.தி.மு.க.வுக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க. வுக்கும் தோல்வி பயம் உள்ளது. இதனால்தான் அவர்கள் தேர்தலை சந்திக்க அஞ்சுகிறார்கள். ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என இங்கே கூறிவிட்டு, மம்தா பானர்ஜி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பது முரணாக உள்ளது. அவரது நிலைப்பாட்டில் தெளிவு இல்லை.

    மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தல் நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முதன் முதலாக பரமக்குடியில் தொடங்கி உள்ளோம். ஆட்சியில் அமர வைத்ததற்கு துரோகம் இளைத்தவர்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்.

    தற்போதைய ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர பொதுமக்கள் அ.ம.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.

    தற்போது கொடநாடு சம்பவம் தொடர்பான வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு அவர் பயப்படாமல் விசாரிக்கட்டும் என சொல்ல வேண்டும். ஆனால் அவர் அதை விட்டுவிட்டு பதட்டப்படுகிறார், அஞ்சுகிறார். இது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்.

    எனவே இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்பதே எனது கருத்து. எங்கள் கட்சியினரை ஆசை வார்த்தை கூறி அ.தி.மு.க.வினர் அழைக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக அங்கு செல்ல மாட்டார்கள்.

    அ.ம.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி குறித்து எந்த கட்சியும் பேசவில்லை. வந்தால் பரிசீலிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #TTVDhinakaran #ADMK #DMK
    Next Story
    ×