search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- ஜவாஹிருல்லா
    X

    பா.ஜ.க. மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- ஜவாஹிருல்லா

    பா. ஜனதா கட்சி மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு, எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

    பெரம்பலூர்:

    பாரதிய ஜனதா கட்சி மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு, எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

    பெரம்பலூரில், மனித நேய மக்கள் கட்சியின் இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற படைப்பிலக்கிய பயிலரங்கில் பங்கேற்ற பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அயோத்தியில் தொடங்கிய ராமராஜ்யா ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து, செங்கோட்டை வழியாக விருதுநகர், மதுரை, கன்னியாகுமாரி, ராமநாதபுரம், சிவகங்கை வழியாக செல்ல உள்ளது. ஜனநாயக ரீதியில் நாளை 20 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், செங்கோட்டைக்கு வரும் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதில், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமுக நல அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    அ.தி.மு.க. பெரியார் வழியில் செயல்படுவதாக தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்துள்ளனர். அந்த வகையில், விஸ்வ இந்து பரிசத் நடத்தும் இந்த ரத யாத்திரையை தடை செய்ய வேண்டும். மதுரையில் கிறிஸ்துவ மக்களின் ஜெபக் கூடத்தில் பைபிலை எரித்து, பெண்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எதிர் கட்சிகள் அனைத்தும், பாரதிய ஜனதா கட்சி மீது மக்களவையில் கொண்டுவர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மத்திய அரசு, தமிழக நலனுக்கு எதிராக எடுக்ககூடிய நடவடிக்கைகளை அதிமுக வலுமையாக எதிர்க்க வில்லை. காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்திய பிறகும், பிரதமர் தமிழக மக்கள் பிரதிநிதியை சந்திக்க மறுக்கிறார். அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்து தங்களது எதிர்ப்பை காட்ட வேண்டும்.

    காவிரியை பாலைவனமாக மாற்றுவதற்குண்டான மீத்தேன், ஹைட் ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எனவே, பாரதிய ஜனதா கட்சி மீது கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தமிழக உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது, மாநில பொதுசெயலர் அப்துல்சமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×