search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரை வெல்ல காரணமான சுழற்பந்து வீரர்களுக்கு விராட் கோலி பாராட்டு
    X

    தொடரை வெல்ல காரணமான சுழற்பந்து வீரர்களுக்கு விராட் கோலி பாராட்டு

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற காரணமாக இருந்த சுழற்பந்து வீரர்கள் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    செஞ்சூரியன்:

    விராட் கோலியின் அதிரடியான சதத்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    செஞ்சூரியனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 46.5 ஓவர்களில் 204 ரன்னில் சுருண்டது. ஜோன்டோ அதிகபட்சமாக 54 ரன் எடுத்தார். தனது முதல் போட்டியிலேயே ‌ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். பும்ரா, யசுவேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட்கோலி 35-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 96 பந்தில் 129 ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 19 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். ரகானே 34 ரன் எடுத்தார்.

    இந்த வெற்றி மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி முதல் முறையாக தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கு முன்பு அந்நாட்டில் 4 முறை ஒருநாள் தொடரில் இந்தியா ஆடி இருக்கிறது.

    தொடரை வெல்ல விராட்கோலியின் ஆட்டம் தான் காரணம். அவர் ஒருநாள் தொடரில் 3 சதம் அடித்தார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் 4-வது சதத்தை பதிவு செய்தார்.



    இந்தியாவின் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தில் மின்னொளியில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. இதன் காரணமாகவே ‘டாஸ்’ வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற சுழற்பந்து வீரர்கள் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் காரணமாக இருந்தனர். அவர்கள் இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினர். டெஸ்ட் தொடரை இழந்த பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றியது சிறப்பானது.



    நான் விளையாட வந்து 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கேப்டனாக இருந்து சிறப்பாக ஆடுவது முக்கியமானது. அபாரமாக ஆடி தொடரை கைப்பற்ற எனது பங்களிப்பு இருந்ததை அற்புதமாக உணர்கிறேன்.

    கடவுளின் ஆசிர்வாதத்தால் ஆரோக்கியமாக இருக்கிறேன். கேப்டன் என்ற முறையில் எனது பங்களிப்பை 120 சதவீதம் வரை அளிக்க இயலும்.

    அடுத்த வரும் 20 ஓவரிலும் எங்கள் திறமையை வெளிப்படுத்துவோம். இதிலும் சுழற்பந்து வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×