search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நாளை நேர்காணல்
    X

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நாளை நேர்காணல்

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் நாளை 10 மணிக்கு நடக்கிறது. புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு விலகினார்.

    கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பயிற்சியாளர் பதவிக்கு அவர் மீண்டும் விண்ணப்பம் செய்யவில்லை.

    புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பெற கிரிக்கெட் வாரியம் கால அவகாசத்தை இன்று (9-ந்தேதி) வரை நீட்டித்து ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    வீரேந்தர் ஷேவாக், டாம் மோடி, லால்சந்த், ராஜ்பத், தோடா கணேஷ், ரிச்சர்டு லைபஸ் ஆகிய 5 பேர் முதலில் விண்ணப்பித்து இருந்தனர். அதை தொடர்ந்து ரவிசாஸ்திரி, பில்சிம்மன்ஸ் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தனர்.

    பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் நாளை (திங்கட்கிழமை) 10 மணிக்கு நடக்கிறது. முன்னாள் வீரர்களான தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகிய 3 பேர் அடங்கிய குழு நேர்காணல் நடத்துகிறது. தெண்டுல்கர் தற்போது லண்டனில் உள்ளார். அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இதில் பங்கேற்பார்.



    முதலில் இந்த நேர்காணலை 12.30 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. லண்டனில் உள்ள நேரம் கணக்கின்படி தெண்டுல்கர் விடுத்த வேண்டுகோளால் 1 மணிக்கு நடத்தப்படுகிறது.

    இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவர் ஏற்கனவே இந்திய அணியின் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

    கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் எந்தவித கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கிரிக்கெட் வாரியம் மிகவும் கவனமாக இருக்கிறது. இதனால் தான் பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக கேப்டன் விராட் கோலியிடமும், வீரர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது.

    ரவிசாஸ்திரி வீரர்களின் ஆதரவை பெற்றவர். மேலும் கோலியின் அறிவுரையின் பேரில் தான் அவர் விண்ணப்பம் செய்தார். இருவருக்கும் சுமூகமான உறவு இருக்கிறது. இதனால் ரவிசாஸ்திரிக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. ஷேவாக் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

    ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு வரை ஷேவாக், டாம் மோடி இடையே தான் கடும் போட்டி நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×