search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
    X

    கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

    வருமான வரி ஏய்ப்பு செய்ததோடு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளது. #KarnatakaMinister #DKShivakumar
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது டி.கே.சிவக்குமாருக்கு அவருடைய தொழில் பங்குதாரர் சச்சின் நாராயண், நண்பரும்-டிராவல்ஸ் நிறுவன அதிபருமான எஸ்.கே.சர்மா, டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் பணியாற்றி வரும் ஊழியர் அனுமந்தய்யா, கர்நாடக பவன் பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது.

    இது சம்பந்தமாக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் முதல் குற்றவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் வரி ஏய்ப்பு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்துக்கு டி.கே.சிவக்குமாருக்கு, சச்சின் நாராயண், எஸ்.கே.சர்மா உதவி செய்துள்ளனர். டி.கே.சிவக்குமார், எஸ்.கே.சர்மா ஆகியோரின் அசையா சொத்துகளை ராஜேந்திரன் நிர்வகித்து வருகிறார். அனுமந்தய்யா ‘ஹவாலா’ முறையில் மாற்றும் பணத்தை டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாத்து வந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டவர்கள் மீது நேற்று அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனால் விரைவில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு அனுப்ப வாய்ப்புள்ளது. மேலும் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. #KarnatakaMinister #DKShivakumar
    Next Story
    ×