search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அரசுக்கு பஸ்வான் மிரட்டல்- போராட்ட அறிவிப்பால் கூட்டணியில் குழப்பம்
    X

    மோடி அரசுக்கு பஸ்வான் மிரட்டல்- போராட்ட அறிவிப்பால் கூட்டணியில் குழப்பம்

    எஸ்.சி, எஸ்.டி சட்டத்தை திருத்தம் செய்ய வலியுறுத்தி ராம்விலாஸ் பஸ்வான் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதால் பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. #RamVilasPaswan #BJP #Modi
    புதுடெல்லி:

    பா.ஜனதா கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி மந்திரி சபையில் ராம் விலாஸ் பஸ்வான் உணவு மந்திரியாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மோடி அரசுக்கு எதிராக மிரட்டல் விடுத்துள்ளார்.

    சமீபத்தில் எஸ்.சி, எஸ்.டி சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. தீண்டாமை சட்டத்தின் கீழ் யாரையும் விசாரணை இன்றி கைது செய்ய முடியாது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

    இது எஸ்.சி.,எஸ்.டி., சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்றும் இதை கண்டித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. தலீத்சேனா அமைப்பு சார்பில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் இந்த சட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 9-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி ராம்விலாஸ் பஸ்வானின் மகனும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் கூறுகையில், எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அமைந்துள்ளது. மத்திய அரசு இதில் திருத்தம் செய்து சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஏப்ரல் 2-ந்தேதி தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தின. தற்போது நாங்கள் இதுதொடர்பான பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.


    பிரதமர் மோடி இதில் தலையிட்டு உரிய தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கிறோம். இந்தப் பிரச்சனையில் நாங்கள் தெலுங்கு தேசம் கட்சியைப்போல் நடந்து கொள்ளமாட்டோம். நாங்கள் ஆட்சியில் பங்கெடுத்து இருப்பதால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறிவிட்டது. சிவசேனா, பிஜி ஜனதாதளம் கட்சிகளும் மிரட்டல் விடுத்து வருகின்றன. தற்போது ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் மிரட்டல் விடுத்து இருப்பது கூட்டணியில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. #RamVilasPaswan #BJP #Modi
    Next Story
    ×