search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபை வைரவிழாவில் திப்பு சுல்தானை பாராட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதால் பரபரப்பு
    X

    கர்நாடக சட்டசபை வைரவிழாவில் திப்பு சுல்தானை பாராட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதால் பரபரப்பு

    கர்நாடக சட்டசபை வைரவிழாவில் திப்பு சுல்தானை பாராட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது.
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை வைரவிழாவில் திப்பு சுல்தானை பாராட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது.

    கர்நாடக அரசின் சார்பில் திப்புசுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவுக்கு அங்கு எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நவம்பர் 10-ந் தேதி நடக்கவுள்ள விழா அழைப்பிதழில் தன் பெயர் இடம் பெறக்கூடாது என மாநில அரசுக்கு மத்திய ராஜாங்க மந்திரி அனந்தகுமார் ஹெக்டே சமீபத்தில் கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    ஆனால், “திப்பு சுல்தான் சுதந்திரத்திற்காக போராடியவர். ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர் போரிட்டுள்ளார். திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக திப்பு ஜெயந்தி கொண்டாட கூடாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். திப்பு ஜெயந்தி விழா அரசு சார்பில் கொண்டாடப்படுவதால், அரசு நெறிமுறைகளின்படி எதிர்க்கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகளின் பெயர்கள் அழைப்பிதழில் இடம்பெறும்” என முதல்-மந்திரி சித்தராமையா பதில் அளித்தார்.



    இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டசபையின் வைர விழா கொண்டாட்டத்தையொட்டி, நேற்று சட்டசபையின் கூட்டு கூட்டம் நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திப்பு சுல்தானுக்கு பாராட்டுமழை பொழிந்தார். அவர் கூறும்போது, “ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி திப்பு சுல்தான் வீர மரணம் அடைந்தார். முன்னேற்றத்திலும் அவர் ஒரு முன்னோடியாக திகழ்ந்தார்” என பாராட்டினார்.

    மேலும், “திப்பு சுல்தான் போரில் மைசூரு ராக்கெட்டுகளை பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை பின்னாளில் ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொண்டன” என்று பெருமிதத்துடன் கூறினார்.

    நமது ராணுவ தளபதிகளாக பணியாற்றிய பீல்டு மார்ஷல்கள் கே.எம்.கரியப்பா, கே.எஸ்.திம்மையா ஆகியோர் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் என்று நினைவுகூர்ந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “கல்வி, அறிவியல், தொழில்நுட்பத்தின் மையமாகவும் கர்நாடகம் திகழ்கிறது. என்ஜினீயர் விஸ்வேசுவரய்யா நவீன கர்நாடகத்தை உருவாக்கினார், பெரிய நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்தினார். இது விவசாயிகளுக்கு இன்றளவும் உதவி வருகிறது. இந்திய அறிவியல் கழகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் போன்ற மிக முக்கியமான நிறுவனங்கள் பெங்களூருவில் இருக்கின்றன” என்று சுட்டிக்காட்டினார்.

    திப்பு சுல்தானைப் பற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சுக்கு பாராட்டு தெரிவித்து முதல்-மந்திரி சித்தராமையா டுவிட்டரில் செய்தி வெளியிட்டார். அதில் அவர், “கர்நாடக சட்டசபையில் ராஜதந்திரி போன்று அற்புதமான உரை நிகழ்த்திய இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் ஜனாதிபதி உரையில், திப்பு சுல்தானின் பெயரை இடம் பெறச்செய்து, ஜனாதிபதி அலுவலகத்தை கர்நாடக அரசு தவறாக பயன்படுத்தி விட்டது என மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா (பா.ஜனதா) சாடினார்.

    மேலும், “திப்பு சுல்தானின் பெயரை ஜனாதிபதி சொன்னபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது மரபை மீறிய செயலாக இருந்திருக்கும்” என்றும் கூறினார்.

    பா.ஜனதாவுக்கு மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் பதில் அளித்தபோது, “யாரோ எழுதித்தந்த உரையை ஜனாதிபதி வாசித்தார் என்று கூற முற்பட்டு, அவர்கள் ஜனாதிபதியையும், அவரது அலுவலகத்தையும் அவமதித்து விட்டனர். இதற்காக பா.ஜனதா வெட்கப்படவேண்டும்” என்று குறிப்பிட்டார். 
    Next Story
    ×