search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக கூட்டணி விஜயகாந்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை- 2 நாளில் முடிவு வெளியாகும்
    X

    அதிமுக கூட்டணி விஜயகாந்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை- 2 நாளில் முடிவு வெளியாகும்

    அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் 2 நாளில் முடிவு வெளியாகும் என்று தெரிகிறது. #parliamentelection #admk #vijayakanth #bjp

    சென்னை:

    விஜயகாந்த் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கிய தே.மு.தி.க. இதுவரை 5 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.

    தமிழக அரசியலில் மிக குறுகிய காலத்தில் 10 சதவீத வாக்கு வங்கிகளை பெற்ற கட்சி என்ற சிறப்பு தே.மு.தி.க.வுக்கு உண்டு. தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. பிரித்த வாக்குகள் ஏதாவது ஒரு வகையில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மாறி மாறி வெற்றி-தோல்வியை கொடுத்துள்ளன.

    இதன் காரணமாக தே.மு. தி.க. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. கடந்த 2 தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட தே.மு.தி.க.வுக்கு வாக்கு சதவீதமும் குறைந்து விட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

    2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க.வுக்கு 10 சதவீத வாக்குகள் இருந்தது. ஆனால் அதன் பிறகு 2011, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தே.மு. தி.க.வின் வாக்கு சதவீதம் குறைந்து போனது.

    குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கனவே இருந்த தொண்டர்களில் பாதி பேர்தான் வாக்களித்தனர். தற்போது அந்த கட்சிக்கு 3 முதல் 5 சதவீத வாக்குகளே இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    தே.மு.தி.க.வுக்கு வாக்கு சதவீதம் குறைந்து விட்டாலும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக அது இருப்பதாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக தே.மு.தி.க. தலைவர்களுடன் பேசி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டும் என்று முதலில் காய்களை நகர்த்தியது பா.ஜனதா தலைவர்கள்தான். எனவே டெல்லி பா.ஜனதா தலைவர்களிடம் தே.மு.தி.க. பேச்சு நடத்தியது. ஆனால் அதில் சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை.

    இதையடுத்து தே.மு.தி.க.வை வழிக்கு கொண்டு வரும் முயற்சிகளில் அ.தி. மு.க. ஈடுபட்டது. ஆனால் 7 முதல் 9 தொகுதிகள் வரை தே.மு.தி.க. கேட்டதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி உருவானது.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விஜயகாந்தை சந்தித்து பேசினார். இதனால் தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே 40 தொகுதிகளிலும் விருப்ப மனுக்கள் வாங்குவதற்கு தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தே.மு.தி.க. வின் நிலைப்பாட்டில் மாற்றம் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. எந்த அணியில் சேரும் என்பது நேற்று இரவு வரை மதில்மேல் பூனையாக இருந்தது. ஆனால் இன்று காலை இது குறித்து சில தெளிவான தகவல்கள் தெரியவந்தன.

    தி.மு.க. மூத்த தலைவர் ஒருவரிடம் தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. அணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டபோது அவர் மாறுபட்ட தகவலை தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், “தி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. 40 தொகுதிகளிலும் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை நாங்கள் தீர்மானித்து விட்டோம். இனி எங்கள் அணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இல்லை” என்றார்.

    தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் சிலர் இதுபற்றி கூறுகையில், “தி.மு.க. கூட்டணியில் சேர மாட்டோம். டி.டி.வி.தினகரன் பக்கம் போகும் பேச்சுக்கே இடமில்லை. எங்களது பலம் எங்களுக்கு தெரியும். விரைவில் எங்களது முடிவை அறிவிப்போம்” என்றனர்.


    இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர்களுடன் அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவும் தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேசியது. இன்று காலையிலும் அந்த பேச்சு வார்த்தை நீடித்தது.

    அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே தொகுதிகள் எண்ணிக்கை மட்டுமே இழுபறியாக இல்லை. எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் இழுபறி நீடித்தப்படி உள்ளது. அதுபோல பா.ஜனதா தரப்பில் இருந்தும் சில உறுதி மொழிகளை தே.மு.தி.க. எதிர்பார்க்கிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் வரும் பட்சத்தில் தாங்கள் விரும்பும் தொகுதிகளை கண்டிப்பாக தந்தே தீர வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர். எனவே பேச்சு வார்த்தை ஓரிரு தினங்கள் நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.

    இரு தரப்பினரும் விட்டு கொடுத்தால்தான் அ.தி.மு.க. அணியில் சுமூகமாக தே.மு.தி.க. இடம் பெறும் என்று கூறப்படுகிறது. எனவே அ.தி.மு.க- தே.மு.தி.க. இடையே எப்போது தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் என்பது இழுபறியாகவே உள்ளது.

    2 நாளில் இதில் என்ன முடிவு ஏற்படும் என்பது தெரிந்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #parliamentelection #admk #vijayakanth #bjp

    Next Story
    ×