search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித்ஷா யோசனை
    X

    தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித்ஷா யோசனை

    அ.தி.மு.க. தலைமையிலான அணி என்பதை விட தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமித் ஷா ஆலோசனை வழங்கினார். #BJP #Amitshah #ADMK #OPS
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேசிய கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாநிலம் வாரியாக கூட்டணி அமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    தமிழகத்திலும் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் எந்ததெந்த கட்சிகள் போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. அணியில் தற்போது பா.ஜனதா, பா.ம.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளது. சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நேற்று மதுரை வந்த பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க. ஒருங் கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். 2 முறை நடைபெற்ற சந்திப்பின்போது கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் எத்தகைய அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்ற நிபந்தனைகளையும் அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணியை அ.தி.மு.க. தலைமையிலான அணி என்று அழைக்கக்கூடாது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்தார். தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்போது அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என்றார்.

    வருகிற 1-ந்தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பேரணியில் முதல்-அமைச்சருடன் கூட்டணி தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.



    அப்போது பன்னீர்செல்வம் அன்றைய தினம் தனக்கு கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகிகள் பா.ஜனதா பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று அமித்ஷாவிடம் கூறினார்.

    இந்த ஆலோசனையின் போது பா.ஜனதா மேலிட பார்வையாளர் முரளிதர ராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். சுமார் 1 மணி நேரம் நடத்தப்பட்ட ஆலோசனையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அமித் ஷா, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு தொடர்பாக மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பா.ஜனதா தலைமை தாங்குகிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் செயல்படும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை வகிக்கிறது.

    வருகிற 1-ந்தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்பாடு செய்துள்ள பேரணியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமித்ஷாவை சந்தித்து பேசியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று தெரிவித்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித்ஷா கூறிய யோசனைகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த சந்திப்பு வைரலாகி விமர்சனங்கள் எழுந்துள்ளளன. #BJP #Amitshah #ADMK #OPS
    Next Story
    ×