search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X

    கொடநாடு சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கொடநாடு கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #KodanadEstate #EdappadiPalaniwami
    சென்னை:

    நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

    இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் புகுந்து ஜெயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது என போலீஸ் 2017 ஏப்ரலில் தெரிவித்தது.

    இவ்விவகாரத்தில் குற்றவாளி என கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சேலம் அருகே ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் பாலக்காடு மாவட்டம் கண்ணடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் பரிதாபமாக இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புது சர்ச்சையொன்று வெடித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    இந்நிலையில் இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    கொடநாடு சம்பவத்தும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புகின்றனர். கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரத்தில் கூறப்பட்டவை உண்மையில்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர்.

    குறுக்கு வழியை கையாண்டு அ.தி.மு.க அரசை யாராலும் கவிழ்க்க முடியாது.  கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  முழுமையாக விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும்.


    அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பரிசாக ரூ.1,000 தருவதற்கு எதிராக மு.க.ஸ்டாலின் தனது கட்சியினரை விட்டு வழக்கு போட்டுள்ளார்.  மு.க. ஸ்டாலின் நடத்தும் கிராம சபைக் கூட்டங்கள் அரசியல் நாடகம்.  ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யத்தவறியவர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.   #KodanadEstate #EdappadiPalaniwami
    Next Story
    ×