search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியை எடப்பாடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை- எச்.ராஜா
    X

    பிரதமர் மோடியை எடப்பாடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை- எச்.ராஜா

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று எச்.ராஜா கூறினார். #BJP #HRaja #PMModi #EdappadiPalaniswami
    கும்பகோணம்:

    தாமிரபரணி மஹா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக காவிரி ரதயாத்திரை இன்று கும்பகோணத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

    இந்த விழாவில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு ரதயாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ராமராஜ்ய ரதயாத்திரை சென்ற போது இந்த ரதம் குறித்து வெளியே தெரியவில்லை. ஆனால் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் ரதயாத்திரை குறித்து பேசி புயலை ஏற்படுத்திய பின் தான் ராமராஜ்ய ரதயாத்திரை பிரபலமானது. அதன் பின் ஏராளமான இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    அது போன்று தற்போது தாமிரபரணி புஷ்கர விழாவிற்கான காவிரி ரதயாத்திரையை பற்றி இந்து விரோத சக்திகளும், தி.மு.க., தி.க. போன்ற கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. மேலும் இவர்கள் சமூக ஆர்வலர்கள் என்று தங்களை கூறிக்கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    நாங்கள் நடத்தும் இந்த புஷ்கர விழாவை எந்த சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது. நீர் நிலைகளின் புனிதத்தை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர்கள் இந்து விரோதிகள் என்று தான் அழைக்கப்படுவார்கள்.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் குறித்தே தவிர இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.

    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுமா? என்று கட்சி தலைமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பே முடிவு செய்யும். அதன் பின் எங்களது பணி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பா.ஜனதா ஆட்சியில் தான் இந்துக்களுக்கும், இந்திய கலாச்சாரத்துக்கும் எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதே? என்று நிருபர்கள் கேட்டதற்கு ஆட்சியையும், நீதிமன்றத்தையும் கட்சி (பா.ஜனதா) வழிநடத்தவில்லை என்றார். #BJP #HRaja #PMModi #EdappadiPalaniswami
    Next Story
    ×