search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடைகள் அடைப்பு-பஸ்கள் ஓடவில்லை
    X

    விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடைகள் அடைப்பு-பஸ்கள் ஓடவில்லை

    கருணாநிதி மறைவை முன்னிட்டு விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. #Karunanidhideath #Karunanithi #DMK
    விருதுநகர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

    பஸ்கள் ஓடாததால் வெளியூரில் இருந்து உள்ளூர் திரும்பியவர்களும் அவதிப்பட்டனர். பஸ் போக்குவரத்து நேற்று இரவு 7 மணி முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டது. இன்று காலை பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

    சிவகங்கை நகரில் இன்று அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிவகங்கை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

    அரண்மனை ரோடு, நேரு பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடியது. இதே போல் காரைக்குடி, திருப்பத்தூர், காளையார் கோவில், தேவகோட்டை, கல்லல், சருகணி, மானாமதுரை, இளையாங் குடி, திருப்புவனம், சிங்கம்புணரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    கருணாநிதி மறைவையொட்டி இன்று மாலை சிவகங்கை நகரில் அனைத்து கட்சி சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது.

    மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்நிலையம், முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.

    இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு இன்று விடுமுறை அறிவித்து விட்டதால் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டமும் காணப்படவில்லை.



    இதேபோல் 3 மாவட்டங்களிலும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சிறு சிறு டீக்கடைகள் கூட ஒன்றிரண்டே ஆங்காங்கே திறந்திருந்தன. ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டே இருந்தன.

    இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வீதிகளில் தங்கி இருந்த மக்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளானார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ராமநாதபுரம், சிவகங்கை நகர சாலைகளிலும் ஆங்காங்கே கருணாநிதி படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நடக்கும் சந்தை இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் நேற்று இரவே ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு சென்று விட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். #Karunanidhideath #Karunanithi #DMK
    Next Story
    ×