search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியைக்கு பின்னணியில் உள்ளவர்கள் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்- பொன். ராதாகிருஷ்ணன்
    X

    பேராசிரியைக்கு பின்னணியில் உள்ளவர்கள் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்- பொன். ராதாகிருஷ்ணன்

    பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    விருதுநகர் அருகே அருப்புக்கோட்டையில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு உட்படுத்தியதாக கைது செய்துள்ளனர். அவரை உடனே பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

    தற்போது நடந்துள்ள இந்த சம்பவத்தை முதல் சம்பவமாக கருதவில்லை. பல ஆண்டுகளாக அவர், இதுபோல நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.

    இந்த சம்பவத்தில் நிர்மலா தேவியின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இந்த சம்பவம் ஒரு கல்லூரிக்கு உட்பட்டு நடந்த சம்பவம் போல தெரியவில்லை. வேறு கல்லூரிகளிலும் இதுபோல நடந்து உள்ளதா? என்பதை பற்றி விசாரணை நடத்த வேண்டும். வேறு பெண்கள் யாரும் இதுபோல பயன்படுத்தப்பட்டு உள்ளனாரா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

    இந்த பிரச்சனையை முழுமையான விசாரணைக்குட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி பிரச்சனை உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சனையாகும். 100, 150 ஆண்டு கால பிரச்சனையை 100 நாளில் தீர்க்க வேண்டும் என்பது முடியாத காரியம். காவிரி பிரச்சனைக்கு ஒட்டு மொத்த காரணம் தி.மு.க-காங்கிரஸ்தான். ஆனால் போராட்டம் நடத்துபவர்களும் அவர்கள்தான்.


    கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெறும். அங்கு பாரதிய ஜனதா வெற்றி பெற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

    கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டு, பிரதமர் நரேந்திர மோடி கூறியும் கூட காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. அங்கு பாரதிய ஜனதா அரசு அமைந்தால் அது தமிழ்நாட்டுக்கு நல்லது.

    பயங்கரவாத இயக்கங்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது.

    ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்க செய்யும் வகையில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் 4 இடங்களில் பஸ் போர்ட் அமைக்கப்படுகிறது. இதற்காக குமரி மாவட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பஸ் போர்ட் அமைக்க இங்கு இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடம் கட்ட ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அதற்குரிய சாத்தியக்கூறில்லை. எனவே வேறு இடம் தேர்வு செய்து வருகிறோம்.

    பார்வதிபுரம்- மார்த்தாண்டம் மேம்பால பணிகள் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. தற்போது மேம்பால பணிகளை ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Nirmaladevi #PonRadhakrishnan
    Next Story
    ×