search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    70 சதவீத ஊழியர்கள் பணிக்கு வராததால் நாராயணசாமி அதிர்ச்சி

    புதுவை தலைமை செயலகத்தில் 70 சதவீத ஊழியர்கள் பணிக்கு வராததால் முதலமைச்சர் நாராயணசாமி அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை 9.30 மணியளவில் சட்டசபையிலிருந்து கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்திற்கு திடீர் ஆய்வு செய்ய சென்றார்.

    புதுவையில் அரசு அலுவலகங்கள் காலை 8.45 மணிக்கு தொடங்கும். ஆனால் நாராயணசாமி 9.30 மணிக்கு தலைமை செயலகத்தின் தரை தளத்திற்கு சென்றார். அங்கு பயோமெட்ரிக் கருவியை பார்த்தார். ஆனால் அந்த கருவி பழுதடைந்து கிடந்தது. தலைமை செயலகத்தில் உள்ள துறை வாரியான அலுவலகம், நிர்வாக அலுவலகம் ஆகியவை 4 தளத்தில் உள்ளது.

    ஒவ்வொரு அலுவலகத்திற்கும் நாராயணசாமி சென்று பார்த்தார். பெரும்பாலான அலுவலகங்களில் இருக்கைகள் காலியாக இருந்தது. ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. சில அலுவலகங்களில் பியூன் மட்டுமே இருந்தனர். ஊழியர்கள், அதிகாரிகள் என வித்தியாசமின்றி யாருமே வராமல் இருந்தனர். வருகைப் பதிவேட்டை நாராயணசாமி கேட்டு பெற்று பார்த்தார். அதிலும் யாரும் கையெழுத்திடவில்லை. சில அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைக்குக்கூட வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்தனர்.

    ஊழியர்கள் வராதது குறித்து நாராயணசாமி கேள்வி எழுப்பியபோது அங்கிருந்த பிற ஊழியர்கள், சிலர் விடுமுறை எடுத்திருப்பதாக தெரிவித்தனர். விடுப்பு கடிதத்தை தரும்படி கேட்டார். ஆனால் கடிதம் இல்லை. இன்னும் சிலர் காரைக்காலில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர், சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள் என தெரிவித்தனர். இதையடுத்து நாராயணசாமி சட்டசபையில் உள்ள கமிட்டி அறைக்கு திரும்பினார்.

    அங்கு நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஓராண்டுக்கு முன்பு கூட்டுறவுத்துறை, மின்துறை, கூட்டுறவு வங்கிக்கு சென்று ஆய்வு செய்தேன். அப்போது ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வராதது தெரிய வந்தது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.

    தற்போது ஓராண்டுக்கு பிறகு தலைமை செயலகத்திற்கு இன்று காலை 9.30 மணிக்கு திடீர்ஆய்வு செய்தேன். தலைமை செயலகத்தில் பலதுறை அலுவலகத்தில் இருக்கை காலியாகவே இருந்தது. பயாமெட்ரிக் வருகை கருவியும் பழுதாகியிருந்தது. வேண்டுமென்றே அரசு ஊழியர்கள் இந்த கருவியை பழுதாக்கியுள்ளனர்.

    அரசு ஊழியர்கள் வரு கையை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள சூப்பிரெண்டுகளும் பணிக்கு வரவில்லை. அரசு ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வர வேண்டியது அவர்களின் கடமை. பிற மாநிலங்களில் 7-வது சம்பள கமி‌ஷனை அமல்படுத்தாத நிலையிலும் புதுவையில் அமல்படுத்தியுள்ளோம்.

    கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் வதந்தி பரப்பினர். அந்த வதந்தியை முறியடித்து காலத்தோடு சம்பளம் வழங்கி வருகிறோம். இது மட்டுமின்றி அரசின் வருமானத்தை சிக்கன நடவடிக்கை மூலமாக ரூ.180 கோடி அதிகரித்துள்ளோம். ஆனால் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை மறந்து செயல்படுகின்றனர்.

    இன்றைய ஆய்வில் சுமார் 70 சதவீத ஊழியர்கள் பணியில் இல்லாதது தெரிய வந்தது. பணிக்கு வராதவர்கள் குறித்து பட்டியல் எடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கும், துறை செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

    நாள்தோறும் நேரத்தோடு பணிக்கு வருவதை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளேன். சிறிய மாநிலமான புதுவையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி செய்கின்றனர். அரசு ஊழியர்கள் ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டும். காலத்தோடு வந்து பணியாற்றாததால் கோப்புகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் இருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    ஒட்டுமொத்த நிதியில் 96 சதவீதத்தை அரசு செலவு செய்துள்ளது. மீதமுள்ள 4 சதவீத நிதி செலவிடப்படவில்லை. இது தாழ்த்தப்பட்டோர் பகுதிகளில் சாலை, குடிநீர் வசதிக்காக செலவிட வேண்டிய ரூ.16 கோடியாகும். இதை 3 கட்டமாக செலவிடுவதால் இந்த நிதியை செலவிடப்படாமல் உள்ளது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். தலைமை செயலகத்தில் உள்ள பயோமெட்ரிக் வருகை பதிவு உடனடியாக சீரமைக்கப்படும்.

    அனைத்து அரசு துறைகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரும்காலத்தில் அரசு ஊழியர்கள் காலத்தோடு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வாகனங்களை ஊழியர்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளது.

    இதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழுவின் அறிக்கை பெற்று இதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×