search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry Chief Secretariat"

    • கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை.
    • கட்டண பாக்கியை கோர்ட்டில் செலுத்திவிடுவதாக தலைமை செயலக அதிகாரிகள் கோர்ட்டு ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பணிக்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களை சேர்ந்த வாகனங்களும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    இதற்கான வாடகை பாக்கி ரூ.1 கோடியே 28 லட்சம் தொகையானது 2 தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு தரப்பட வேண்டி இருந்தது. ஆனால் ரூ.77 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. மீதி தொகை வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக டிராவல்ஸ் நிறுவனங்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த கோர்ட்டு வாடகை பாக்கியை செலுத்த உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை. டிராவல்ஸ் உரிமையாளர்கள் கோர்ட்டை அணுகவே தலைமை செயலகம், தேர்தல் துறை, கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கடந்த 2021-ல் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின் பேரில் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வாடகை பாக்கியை தருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை கட்டண பாக்கி தரப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து மீண்டும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி இளவரசன் தலைமை செயலகம், தேர்தல்துறை, கலெக்டர் அலுவலக மேஜை, நாற்காலி, ஏ.சி. மெஷின்கள், வாகனங்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

    அதை நிறைவேற்றும் வகையில் கோர்ட்டு அமீனாக்கள் தலைமை செயலகத்துக்கு வந்தனர். தலைமை செயலாளர் அலுவலகத்துக்கு வந்த அவர்கள் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

    ஜப்தி நடவடிக்கை தொடர்பான தகவல் உடனடியாக தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சட்டத்துறை செயலாளர் செந்தில்குமாருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடனும் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதன் பின் கட்டண பாக்கியை கோர்ட்டில் செலுத்திவிடுவதாக தலைமை செயலக அதிகாரிகள் கோர்ட்டு ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர். இதன் காரணமாக புதுவை தலைமை செயலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ×