search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் மகள் என கூறிய வழக்கு: தமிழக அரசு 19-ந்தேதிக்குள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    ஜெயலலிதாவின் மகள் என கூறிய வழக்கு: தமிழக அரசு 19-ந்தேதிக்குள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி அம்ருதா தொடர்ந்த வழக்கில் வரும் 19-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில், ‘ஜெயலலிதாவின் உடலை வைஷ்ணவ அய்யங்கார் பிரமாண சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்யவில்லை. அதனால், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிராமண சம்பிரதாய முறைப்படி அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வழங்கும்படி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.

    இதற்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிட வேண்டும். நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவுக்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அம்ருதா, ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கு சட்டப் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிட்டார்.

    மேலும், அம்ருதா குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.


    இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்போது ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதா? அந்த ரத்த மாதிரி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஜனவரி மாதமே பதில் மனு தாக்கல் செய்ய இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை’ என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரகாஷ் வாதிட்டார்.

    இதற்கு பதிலளித்த அரசு வக்கீல், ‘இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வருகிறார். அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று உள்ளதால், இன்று அவர் ஆஜராகவில்லை. அதனால், வழக்கை தள்ளி வைக்கவேண்டும்’ என்று கூறினார்.

    இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 19-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

    Next Story
    ×