search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கமல்ஹாசன் கோர்ட்டில் ஆஜராக விலக்கு: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    கமல்ஹாசன் கோர்ட்டில் ஆஜராக விலக்கு: ஐகோர்ட்டு உத்தரவு

    நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் சார்பில் வக்கீல் காந்திமதிநாதன் வள்ளியூர் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்ததாகவும், எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், கமல்ஹாசனை மே 5-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார்.



    அந்த மனுவில், ‘யார் மனதையும் புண்படுத்தும்படி கருத்து தெரிவிக்கவில்லை. இதே சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அந்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வள்ளியூர் கோர்ட்டு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி என்.ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆஜராகி, “மனுதாரர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு தனிப்பட்ட முறையில் தான் பதில் அளித்துள்ளார். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. எனவே வள்ளியூரில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும்” என்றார்.

    இதையடுத்து, வள்ளியூர் கோர்ட்டில் கமல்ஹாசன் ஆஜராக விலக்கு அளித்தும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×