search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்"

    • ஒவ்வொரு மாதமும் மூல மந்திர ஹோமம் நடைபெறும்.
    • பக்தர்களுக்கு பல விதமான வளங்களை தரும் சக்தி கொண்டது.

    திருவள்ளூர் பெரியகுப்பம், ராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகரில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் ஒரே பச்சைக் கல்லால் ஆனது. பெங்களூர் ஆர்சன் மடப்பகுதியில் இருந்து கொண்டு வந்து இங்கு நிறுவப்பட்டதாகும்.

    இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூல மந்திர ஹோமம் நடைபெற்று வருகிறது. அனுமன் ஜெயந்தி மற்றும் முக்கிய விழா காலங்களில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, வடைமாலை சாற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இந்த விஸ்வ ரூப பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் பஞ்சமுகங்களும் வழிபடும் பக்தர்களுக்கு பல விதமான வளங்களை தரும் சக்தி கொண்டது.

     பஞ்சமுகங்களும்.. நன்மைகளும்...

    கிழக்கு நோக்கியபடி இருக்கும் ஆஞ்சநேய சுவாமியின் முகம், பாவங்களை நீக்கி, தூய்மையான மனதைக் கொடுக்கும். தெற்கு நோக்கியபடி அமைந்த நரசிம்ம சுவாமியின் முகம், எதிரிகள் மீதான பயத்தை நீக்கி, வெற்றியை பெற்றுத் தரும். மேற்கு நோக்கியபடி இருக்கும் மகா வீர கருட சுவாமியின் முகம், பில்லி சூனியம் - ஏவல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை போக்கும்.

    உடலில் உள்ள எல்லா விஷத் தன்மையையும் நீக்கும். வடக்கு நோக்கிய லட்சுமி வராக சுவாமியின் முகம் கிரக தோஷங்களை போக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களை அளிக்கும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, மேல்நோக்கியபடி அமைந்த ஹயக்ரீவ சுவாமியின் முகமானது, சுபிட்சமான வாழ்வையும், கல்வி, தொழில், பயிற்சியில் தேர்ச்சி, கணவன் - மனைவி ஒற்றுமை, புத்திரபாக்கியம் போன்றவற்றை நல்கும்.

    இந்த 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட செவ்வாய் மற்றும் சனிக்கிழமை உகந்த நாட்கள் ஆகும். கோவில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.

    அமைவிடம்

    சென்னையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இந்த ஆஞ்சநேயர் திருத்தலம். ரெயில் மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ரெயில் நிலையத்திற்கு அருகாமையிலேயே இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.

    ×