search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் கடைகள்"

    • தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை.
    • பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

    சென்னை:

    வருகிற பொங்கல் பண்டிகைக்காக இந்த முறை ரேசன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இந்த பணத்தை கையில் கொடுக்காமல் ரேசன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தி உள்ளார்.

    பொங்கல் பணம் வழங்குவதற்கு வசதியாக ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. இதில் 14,86,582 பேருக்கு வங்கி கணக்கு இல்லாதது தெரியவந்தது.

    எனவே வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளை அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நேற்று காலையில் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இவர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

    இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பாலன்ஸ்' (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி 'ஜீரோ பாலன்ஸ்' கணக்கை தொடங்க வேண்டும்.

    அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து 4 நாட்களுக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேசன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்.

    30.11.2022 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில் கீழ்கண்ட முக்கியமான திருத்தம் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறை கீழ்கண்டவாறு திருத்தம் செய்து உத்தரவிடப்படுகிறது.

    14,86,582 குடும்ப அட்டைதாரர்களில் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி அறிவுரை வழங்கினால் மட்டுமே போதுமானது. அவர்கள் குறித்து வேறு எந்த தகவல்களையும் பெற வேண்டியது இல்லை.

    வங்கி கணக்கு எண் இல்லாதவர்களை பொறுத்தவரையில் நேற்று வெளியிடப்பட்ட நடைமுறையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது.
    • யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேசன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேசன்தாரர்கள் பொருட்கள் வாங்க வரும்போது கூடுதலாக சோப்பு, அரிசி மாவு உள்ளிட்ட பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேசன் கடைகளிலும் சோப்பு, சேமியா, வாங்காவிட்டால் ரேசன் பொருட்கள் கிடையாது என்று ஊழியர்கள் தெரிவிப்பதாக சமூகஊடகங்களில் செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் புதிய ரேசன் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் 'ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேசன்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுவாக ரேசன் கடைகளில் தற்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்எண்ணெய் வழங்கப்படுகிறது. சில கடைகளில் இதனுடன் டீத்தூள், உப்பு ஆகியவையும் விற்கப்படுகிறது.
    • சிந்தாமணி போன்ற கூட்டுறவு கடைகளில் சில மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கடையின் இடவசதியை பொறுத்து பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 35,323 ரேசன் கடைகள் உள்ளன. இதில் 10,279 பகுதி நேர கடைகள் அடங்கும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவிக்கு வந்த பிறகு ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக வழங்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

    இதற்காக அவ்வப்போது ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவு மற்றும் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ரேசன் கடைகளுக்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டு, இன்னும் என்னென்ன கூடுதல் வசதிகளை செய்து தர முடியும் என்று கருத்து கேட்டு வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் ரேசன் கடைகளை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு கட்டமாக வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேசன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டி கொடுக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நிதி நிலைமைக்கு ஏற்ப ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகளையும் இவர்கள் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

    அதுமட்டுமின்றி புதிதாக கட்டப்படும் அனைத்து ரேசன் கடைகளின் முகப்பு தோற்றமும் ஒரே வடிவத்தில் ஒரே கலரில் இருக்கும் வகையில் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ரேசன் கடைகளை நவீனப்படுத்தும் வகையில் இன்னும் என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்ற பட்டியலும் தயாரித்து உள்ளனர்.

    பொதுவாக ரேசன் கடைகளில் தற்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்எண்ணெய் வழங்கப்படுகிறது. சில கடைகளில் இதனுடன் டீத்தூள், உப்பு ஆகியவையும் விற்கப்படுகிறது.

    ஆனால் சிந்தாமணி போன்ற கூட்டுறவு கடைகளில் சில மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கடையின் இடவசதியை பொறுத்து பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன.

    இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடவசதி உள்ள ரேசன் கடைகளில் மளிகை பொருட்களை விற்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுவது போன்று குறிப்பிட்ட ரேசன் கடைகளை தேர்ந்தெடுத்து அங்கு மளிகை பொருட்களை பாக்கெட் போட்டு விற்க உள்ளனர். பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இது விரிவுப்படுத்தப்படும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக 20 முதல் 25 ரேசன் கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 323 நியாய விலைக்கடைகள் உள்ளன.
    • கிராமப்புறங்களில் எளிதாக இணைய சேவையை வை-பை மூலம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

    சென்னை:

    நாடு முழுவதும் இணைய தள சேவை பயன்பாடு அதிகரித்து வருகிறது. செல்போன்களில் இணைய வசதியை பெறுவதால் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    அதே நேரம் நகர்ப்புறங்களில் இணைய சேவையை பெறும் அளவுக்கு கிராமப்புறங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் வசிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த குறைபாட்டை தீர்க்கவும், கிராமப்புறங்களிலும் எளிதாக இணைய சேவையை 'வை-பை' மூலம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

    இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலம் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 323 நியாய விலைக்கடைகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்து 27 கடைகள் பகுதி நேர கடைகளாக உள்ளன. 6,978 கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகிறது. 2 முதல் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒவ்வொரு கடையும் செயல்படுகிறது.

    இந்த கடைகளில் இருக்கும் இட வசதிகள், வாடகை கட்டிடம் என்றால் உரிமையாளரின் ஒப்புதலை பெறுவது, கடைகள் அமைந்திருக்கும் இடங்களின் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    தற்போது கிராமப்புறங்களில் இணைய தளங்களின் வேகம் 50 முதல் 90 கிலோ பைட்சாகத்தான் உள்ளது. அரசின் வை-பை வசதி கிடைத்தால் இந்த வேகம் அதிகரிக்கும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கிராமப்புற மக்கள் ரேசன் கடைகளை இணைய தள மையங்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    அரசு சேவை என்பதால் கட்டணமும் குறைவாக இருக்கும். ரேசன் கடைகளுக்கும் வருமானம் ஈட்டுவதாக அமையும்.

    • தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் 7-ந் தேதி தொடங்கிய வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் இன்று 9-ந் தேதி 3-வது நாளாக தொடர்கிறது.
    • ரேசன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களுக்கான பணியில் தடையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, ரேசன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். அதாவது ரேசன் கடை பணியாளா்கள் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர்.

    குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் 7-ந் தேதி தொடங்கிய வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் இன்று 9-ந் தேதி 3-வது நாளாக தொடர்கிறது. இதனால் பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் கிடைக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ரேசன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களுக்கான பணியில் தடையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப் பொருட்கள் திணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ரேசன் கடை ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுக்குத் தரவேண்டிய அகவிலைப்படி உயர்வு, மளிகைப் பொருட்களை அவர்கள் மீது திணிக்கும் முடிவை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் இல்லை என்று அறிவிப்பது, புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற தொழிலாளர் விரோதச் செயல்களில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப் பொருட்கள் திணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் 13-ந்தேதி முதல் ரேசன் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    • போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ரேசன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அரசு அறிவித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் விவரங்களை பட்டியல் எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ரேசன் கடை ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீண்டும் வழங்க கோரி வருகிற திங்கட்கிழமை முதல் (13-ந்தேதி) சென்னையிலும் ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

    தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேசன்கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து ரேசன் கடை ஊழியர்கள் நேற்று முதல் கடைகளை திறக்காமல் 'ஸ்டிரைக்' செய்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ரேசன் கடை ஊழியர்கள் 'ஸ்டிரைக்' செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் அமுதம், சிந்தாமணி, காமதேனு மற்றும் சுய உதவி குழு நடத்தும் கடைகளை தவிர்த்து 25 ஆயிரம் ரேசன் கடைகளில் உள்ள ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.

    தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், கடலூர், தேனி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ரேசன் கடை திறக்கப்படாததால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

    ரேசன்கடை ஊழியர்கள் புதிதாக எந்த கோரிக்கையையும் வைத்து போராடவில்லை. அரசு அறிவித்த நிறுத்தி வைத்துள்ள உத்தரவை செயல்படுத்துமாறு தான் கேட்கிறார்கள்.

    கருணாநிதி ஆட்சியின் போது 2010-ல் அகவிலைப்படி 6 மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்பட்டது. அதை நிறுத்தி விட்டனர்.

    10 வருடம் பணி முடித்தால் தேர்வு நிலை, 20 வருடம் பணி முடிந்தால் சிறப்பு நிலை ஊதியம் வழங்கப்பட வேண்டும். 4.3.2020 அரசாணையில் அறிவித்தப்படி அதுவும் வழங்கப்படவில்லை.

    5 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். அரசாணை எண்.24ன்படி 22.2.2021ல் அறிவித்தபடி புதிய ஊதிய உயர்வை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்க ஏதுவாக மாதிரி பட்டியலை வெளியிட்டு ஒரு மாதிரியாக ஊதியம் வழங்க வேண்டும். இதுவும் எல்லா பணியாளர்களுக்கும் அமல்படுத்தப்படவில்லை.

    கொரோனா காலத்திலும், பொங்கல் சிறப்பு தொகுப்பு கொடுக்கும் போதும் ஒரு கார்டுக்கு 50 பைசா வீதம் பணியாளர்களுக்கு தருவதாக சொன்னார்கள். அதையும் வழங்கவில்லை.

    இந்த அறிவிப்பு அனைத்தும் அரசால் அறிவிக்கப்பட்டு அரசாணை போடப்பட்டது. ஆனால் இன்னும் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். இதைதான் நாங்கள் கேட்கிறோம்.

    பொது வினியோக திட்டத்திற்காக தனித்துறையை உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டாக வலியுறுத்தி வருகிறோம்.

    5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக் கூடிய 31 சதவீத அகவிலைப்படி ரேசன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அதுவும் இன்னும் வழங்கவில்லை.

    அது மட்டுமல்ல சரியான எடையில் தரமான பொருட்களை (அரிசி உள்பட) பொட்டலமாக வழங்க வேண்டும். அனைத்து ரேசன் கடைகளுக்கும் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம் வழங்க வேண்டும். மோடம் வழங்கப்பட்டு இணைய தள சேவை மேம்படுத்த வேண்டும், பழுதடைந்த விற்பனை முனையத்திற்கு பழுது நீக்கம் தொகை வசூல் செய்வதை கைவிட வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு அதிகமாக இருந்தால் பல மடங்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பன போன்ற 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக்கோரி போராடுகிறோம்.

    இந்த அரசு போராட்டத்தை மதிக்கும் அரசு என்பதால், எங்களது போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றும் என நம்பு கிறோம்.

    இவ்வாறு கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

    இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ரேசன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அரசு அறிவித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் விவரங்களை பட்டியல் எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி முதல் ரேசன் கடை ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைகிறது.

    இது பற்றி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தினேஷ்குமார் (தொழிலாளர் நலத்துறையில் பதிவு பெற்ற சங்கம்) கூறியதாவது:-

    ரேசன்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் இருப்பதால்தான் நாங்கள் போராட்டத்தில் குதிக்கிறோம். வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் எங்களது சங்கமும், அண்ணா பணியாளர்கள் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கமும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    எனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் 13-ந்தேதி முதல் ரேசன் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    வடசென்னையில் 878 ரேசன்கடை, தென் சென்னையில் 888 கடை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 635, செங்கல்பட்டு மாவட்டத்தில் 841, திருவள்ளூர் மாவட்டத்தில் 1117 ரேசன் கடைகள் உள்ளன.

    இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு தினேஷ்குமார் கூறினார்.

    • தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் அமுதம், சுய உதவி குழு நடத்தும் கடைகளை தவிர்த்து 25 ஆயிரம் கடைகளில் உள்ள ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.
    • விழுப்புரம், கரூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரேசன் கடை ஊழியர்கள் இன்று கடையை திறக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேசன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து ரேசன் கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வரை ஸ்டிரைக்கில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

    மத்திய அரசு கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பத்தில் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டபோது நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைத்தது.

    இதற்கு பிறகு கொரோனா தொற்று பரவுவது ஓரளவு குறைந்த பிறகு கடந்த 2021-ல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 11 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கியது. பிறகு மறுபடியும் ஜூலையில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கியது.

    இதைத் தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேசன் கடை ஊழியர்களுக்கு மட்டும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

    எனவே ரேசன் கடை ஊழியர்களுக்கு 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்க கூடிய 31 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அரசு இதுவரை எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

    எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தியும் பொது விநியோக திட்டத்துக்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும், ஓய்வுபெற்ற நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் ரேசன் கடை ஊழியர்கள் 'ஸ்டிரைக்கில்' ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 'ஸ்டிரைக்'கில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் அமுதம், சுய உதவி குழு நடத்தும் கடைகளை தவிர்த்து 25 ஆயிரம் கடைகளில் உள்ள ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.

    விழுப்புரம், கரூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரேசன் கடை ஊழியர்கள் இன்று கடையை திறக்கவில்லை. இந்த போராட்டம் 9-ந்தேதி வரை தொடரும்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பாக வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக வள்ளுவர் கோட்டம் அருகே போராட்ட குழு சார்பில் காத்திருப்பு போராட்டத்தையும் நடத்துகிறோம்.

    இந்த அரசாங்கம் போராட்டத்தை மதிக்கும் அரசு என்பதால் எங்களது போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றும் என நம்புகிறோம்.

    இவ்வாறு கு.பாலசுப்பிர மணியன் கூறினார்.

    ரேசன் கடை ஊழியர்களின் போராட்டத்தை எதிர்கொள்வது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் தங்களது 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை மாநிலம் தழுவிய 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அச்சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்து உள்ளார்.

    மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து மண்டலங்களில் பணிபுரியும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதால் இன்று முதல் 9-ந்தேதி வரை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறும், பொது விநியோகத் திட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படா வண்ணம், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொண்டு அனைத்து நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    வேலை நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்கள் வேலைக்கு வராத நாளாக கருதி சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×