search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது- தமிழக அரசு அதிரடி உத்தரவு
    X

    வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது- தமிழக அரசு அதிரடி உத்தரவு

    • தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் அமுதம், சுய உதவி குழு நடத்தும் கடைகளை தவிர்த்து 25 ஆயிரம் கடைகளில் உள்ள ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.
    • விழுப்புரம், கரூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரேசன் கடை ஊழியர்கள் இன்று கடையை திறக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேசன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து ரேசன் கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வரை ஸ்டிரைக்கில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

    மத்திய அரசு கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பத்தில் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டபோது நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைத்தது.

    இதற்கு பிறகு கொரோனா தொற்று பரவுவது ஓரளவு குறைந்த பிறகு கடந்த 2021-ல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 11 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கியது. பிறகு மறுபடியும் ஜூலையில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கியது.

    இதைத் தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேசன் கடை ஊழியர்களுக்கு மட்டும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

    எனவே ரேசன் கடை ஊழியர்களுக்கு 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்க கூடிய 31 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அரசு இதுவரை எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

    எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தியும் பொது விநியோக திட்டத்துக்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும், ஓய்வுபெற்ற நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் ரேசன் கடை ஊழியர்கள் 'ஸ்டிரைக்கில்' ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 'ஸ்டிரைக்'கில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் அமுதம், சுய உதவி குழு நடத்தும் கடைகளை தவிர்த்து 25 ஆயிரம் கடைகளில் உள்ள ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.

    விழுப்புரம், கரூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரேசன் கடை ஊழியர்கள் இன்று கடையை திறக்கவில்லை. இந்த போராட்டம் 9-ந்தேதி வரை தொடரும்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பாக வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக வள்ளுவர் கோட்டம் அருகே போராட்ட குழு சார்பில் காத்திருப்பு போராட்டத்தையும் நடத்துகிறோம்.

    இந்த அரசாங்கம் போராட்டத்தை மதிக்கும் அரசு என்பதால் எங்களது போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றும் என நம்புகிறோம்.

    இவ்வாறு கு.பாலசுப்பிர மணியன் கூறினார்.

    ரேசன் கடை ஊழியர்களின் போராட்டத்தை எதிர்கொள்வது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் தங்களது 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை மாநிலம் தழுவிய 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அச்சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்து உள்ளார்.

    மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து மண்டலங்களில் பணிபுரியும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதால் இன்று முதல் 9-ந்தேதி வரை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறும், பொது விநியோகத் திட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படா வண்ணம், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொண்டு அனைத்து நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    வேலை நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்கள் வேலைக்கு வராத நாளாக கருதி சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×