search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்குமார் ஆனந்த்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழலை எதிர்த்துப் போராட பிறந்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலில் சிக்கித் தவிக்கிறது.
    • இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மேலும் அவர் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

    இந்நிலையில், ராஜ்குமார் ஆனந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்துப் போராட பிறந்தது. ஆனால் இன்று அந்தக் கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது.

    அமைச்சர் பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. இந்த ஊழலுடன் பெயரை இணைக்கமுடியாது என்பதால் அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தேன்.

    இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார். எனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன்.

    தலித் பிரதிநிதித்துவம் பற்றி பேசப்படும்போது பின் இருக்கை எடுக்கும் கட்சியில் நான் அங்கம் வகிக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என தெரிவித்தார்.

    • புதிய மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
    • இதுதொடர்பாக மந்திரிகள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உள்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடு நடைபெற்றதில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    இதனால் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜெயிலில் உள்ளார்.

    இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி அரசின் மந்திரி சத்யேந்தர் ஜெயின் வீட்டில் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பின்னர் அவரையும் கைது செய்தனர். அவர் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக ஜாமினில் வெளியே வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் 4-ம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக சஞ்சய் சிங்கை அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த விவகாரங்கள் தொடர்பாக டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவரும் ஏற்கனவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    இந்நிலையில், மேலும் ஒரு ஆம் ஆத்மி மந்திரியான ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதற்காக இன்று காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் மந்திரி ராஜ்குமார் ஆனந்த் வீட்டுக்குச் சென்றனர். அங்கு திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் மந்திரி ராஜ்குமார் ஆனந்த்தின் அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிக்ள் சோதனை நடத்தினார்கள். அவரது வீடு, அலுவலகம் உள்பட 10 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மந்திரி சபையில் ராஜ்குமார் ஆனந்த், சமூக நலம் மற்றும் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக உள்ளார். சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக மந்திரி ராஜ்குமார் ஆனந்த் மீது சுங்கத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இது பற்றிய கூடுதல் தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக வைத்துள்ளனர்.

    மந்திரி ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ஆம் ஆத்மி மந்திரிகள் வீடுகளில் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் அந்த கட்சி தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×