search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின் பிறந்தநாள்"

    • பல ஏழைகளுக்காகவும், இல்லாதோர், கல்லாதோர் ஆகியோருக்கு தொடர்ந்து துணை நிற்பவர் நமது முதலமைச்சர்.
    • மு.க.ஸ்டாலின் குரல் தொடர்ந்து சமத்துவத்துக்காகவும் பிற்படுத்தப்பட்டோருக்காக இதே துணிச்சலோடு ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    சென்னை:

    தென்னிந்திய திருச்சபை சென்னைப் பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    70-வது பிறந்த தினத்தை கொண்டாடும் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக தாம் பிரார்த்தனை ஏறெடுப்பதாகவும், கடவுள் அவருக்கு இன்னும் நல்ல உடல் சுகத்தை தர வேண்டும்.

    பல ஏழைகளுக்காகவும், இல்லாதோர், கல்லாதோர் ஆகியோருக்கு தொடர்ந்து துணை நிற்பவர் நமது முதலமைச்சர். அவரது குரல் தொடர்ந்து சமத்துவத்துக்காகவும் பிற்படுத்தப்பட்டோருக்காக இதே துணிச்சலோடு ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    இப்படிப்பட்ட மக்களுக்கு பல நன்மைகளை செய்ய முற்படும்போது வரும் பல இன்னல்களை எதிர்கொள்ள அவருக்கு வேண்டிய துணிச்சலும், ஞானமும் மென்மேலும் அவருக்கு கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு இந்த பிறந்தநாளின் வழியாக இத்தகைய எல்லா ஆசிகளையும் வழங்க தென்னிந்திய திருச்சபையின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து சொல்வதற்காக திரளாக நிற்பதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்த்து கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • ஒவ்வொரு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அவர் தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.

    காலையில் வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மூத்த சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. மற்றும் குடும்பத்தினரும் வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி வணங்கினார். அவரை பார்த்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதன் பிறகு தொண்டர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவரை மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் திரளாக கூடி நின்று வரவேற்றனர்.



    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் அரங்க வளாகத்தில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். பின்னர் கலைஞர் அரங்கினுள் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

    அங்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து சொல்வதற்காக திரளாக நிற்பதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்த்து கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    பின்னர் தொண்டர்களை சந்திப்பதற்காக மேடைக்கு சென்றார். அப்போது மேடையில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு 'கேக்' கொண்டு வந்து வைத்தார். அமைச்சர்கள், தொண்டர்கள் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த 'கேக்'கை வெட்டினார்.

    இதன் பிறகு தலைமைக் கழக நிர்வாகிகளான அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் சால்வை அணிவித்து மரக்கன்று புத்தகங்கள் வழங்கினார்கள்.

    பின்னர் அங்கு திரண்டிருந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து சால்வை வழங்கினார். இதேபோல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, முன்னாள் தூத்துக்குடி எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி, படப்பை மனோகரன் ஆகியோரும் புத்தகங்கள் வழங்கி வாழ்த்து கூறினார்கள்.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

    முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்ல வந்த கட்சி நிர்வாகிகள் புத்தகங்கள் சால்வை, பொன்னாடை, பழங்கள், மரக்கன்றுகள், ரூபாய் நோட்டு மாலைகள் போன்ற பல்வேறு வகையான பரிசு பொருட்களை வழங்கினார்கள்.

    நரிக்குறவ பெண்கள் 30 பேர் தயாளு அம்மாள் போட்டோவுடன் வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்.பி., ஆ.ராசா மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் மேடையில் நின்று வாழ்த்து சொல்ல வந்த கட்சி தொண்டர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பிய வண்ணம் இருந்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வரும் போது அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அவர்களுடன் சேர்ந்து வந்து முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்கள்.



    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி பிரமுகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒட்டகம் பரிசளித்து வாழ்த்து கூறினார்.

    பிறந்த நாள் வாழ்த்து கூற வந்த கட்சி நிர்வாகிகள் பலர் மரக்கன்று வழங்கியதால் அவற்றை வாழ்த்து பெறும் கட்சி பிரமுகர்களுக்கு முதலமைச்சர் பரிசாக வழங்கினார். நடிகர் நாசர் நேரில் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல ஏராளமானோர் அறிவாலயம் வந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொண்டர்கள் பார்ப்பதற்கு வசதியாக அங்கு எல்.இ.டி. ஸ்கிரீன் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

    • திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • நடிகர் ரஜினிகாந்த், இசையமைச்சாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த், இசையமைச்சாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "70-வது பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • ‘மார்ச் 1 திராவிட பொன்நாள்’ என கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    'மார்ச் 1 திராவிட பொன்நாள்' என்றும் முயற்சி... முயற்சி... முயற்சி... அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
    • தொண்டர்களின் ஏக்கத்தை போக்க நவீன தொழில் நுட்பத்தில் புதுமையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அதில் பலருக்கு மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும். அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். சந்தர்ப்ப சூழல் எல்லோருக்கும் சாதகமாக அமையாது.

    தொண்டர்களின் இந்த ஏக்கத்தை போக்க நவீன தொழில் நுட்பத்தில் புதுமையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் இருக்கும் நலம் விரும்பிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும்.

    07127191333 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம். இந்த தொலைபேசி எண் இன்று முதல் 2-ந் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.

    மெய்நிகர் சேவையை பயன்படுத்தி முதல்வருடன் புகைப்படம் எடுத்து தங்கள் வாழ்த்தையும் பதிவு செய்யலாம்.

    www.selfiewithcm.com என்ற இணைய தளத்துடன் கியூ.ஆர்.குறியீடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்பி எடுத்து கொள்ளலாம்.

    அந்த புகைப்படங்களை தங்களது சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்து முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். முதல்முறையாக நவீன தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    • சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்களை நேரில் சந்திக்க உள்ளார்.
    • மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற அனைவரும் வாருங்கள் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைக்கிறார்.

    சென்னை:

    காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மார்ச் 1-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி அனைத்துக் கட்சி தலைவர்கள், முதல்வர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம். பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற உள்ளது.

    பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிறப்புரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர, பகுதி, ஒன்றிய நகர கிளை கழகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கழகத்தினரும் இளைஞர் அணியினரும் மகளிர் அணியினரும் அலைகடலென அணிதிரண்டு பங்கேற்று பொதுக்கூட்டத்தை வெற்றி மாநாடாக ஆக்கிட வேண்டும்.

    மார்ச் 1 அன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்களையும் நேரில் சந்திக்க உள்ளார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற அனைவரும் வாருங்கள் என அழைக்கிறேன்.

    இவ்வாறு த.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

    • சென்னை மாவட்டக் கழகத்தின் தூணாக வளர்ந்தார். இளைஞரணியை உருவாக்கிய காலத்தில் அதன் ஏற்றமிகு செயலாளராக வளர்ந்தார்.
    • துணை பொதுச்செயலாளராக-பொருளாளராக-செயல் தலைவராக உயர்ந்து இன்று கழகத்தின் தன்னிகரில்லா தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர், திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ந்தேதி தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

    இது தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டாட்ட நாளாக அமையப் போகிறது.

    ஆட்சிக்கு வந்த 20 மாத காலத்துக்குள் ஈடு இணையற்ற சாதனைகளைச் செய்து இந்தியாவில் தலை சிறந்த முதலமைச்சர்களில் தலைசிறந்தவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்பதைப் பார்த்து நித்தமும் நான் வியந்து நிற்கிறேன்.

    இளம்வயதில் துள்ளித் திரிந்து 'முரசொலி' நாளிதழ் பணிகளைச் செய்து வந்தார். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை தானே உருவாக்கி, அதன் மூலமாக அந்த வட்டாரத்தில் சமூகப் பணிகளை ஆற்றினார். இயல்பிலேயே பிறந்த கலை ஆர்வத்தின் காரணமாக நாடக மேடைகளில் தோன்றி நாடு முழுக்க பரப்புரை நாடகங்களை நடத்தினார்.

    சென்னை மாவட்டக் கழகத்தின் தூணாக வளர்ந்தார். இளைஞரணியை உருவாக்கிய காலத்தில் அதன் ஏற்றமிகு செயலாளராக வளர்ந்தார். துணை பொதுச்செயலாளராக-பொருளாளராக-செயல் தலைவராக உயர்ந்து இன்று கழகத்தின் தன்னிகரில்லா தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

    நிர்வாகப் பணிகளில், சென்னை மாநகரத்தின் வணக்கத்துக்குரிய மேயராக, சட்டமன்ற உறுப்பினராக-அமைச்சராக-துணை முதலமைச்சராக வளர்ந்து இன்று முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார்.

    ஆட்சிப்பணியாக இருந்தாலும்-கட்சிப் பணியாக இருந்தாலும் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு-இன்றைய உயர்வுகள் அனைத்தையும் பெற்றவர் மு.க.ஸ்டாலின் என்பதற்கு கழகத்தின் மூத்த முன்னோடிகள் அனைவருமே சாட்சியங்களாக இருக்கிறோம்.

    இந்த உழைப்பைக் கூட நேரகாலம் பார்க்காமல் எல்லாப் பொழுதும் அவர் ஆற்றி வந்த காரணத்தால் தான் அவர் அடைந்த வெற்றிகள் அனைத்தும் யாராலும் தொட முடியாத வெற்றியாக அமைந்திருந்தன.

    தந்தை பெரியாரின் கொள்கை உறுதியையும், பேரறிஞர் அண்ணாவின் நடைமுறை அரவணைப்பையும், அண்ணன் தலைவர் கலைஞரின் சலியாத போராட்டக் குணத்தையும், இனமானப் பேராசிரியரின் பொறுமைக் குணத்தையும் ஒருங்கே பெற்று-அவர்கள் நால்வரையும் தன்னுள் அடக்கிச் செயல்படும் ஆற்றலாளரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை ஏற்றத்துடனும் எழுச்சியுடனும் கொண்டாட தி.மு.க. முடிவெடுத்துள்ளது.

    தலைமை கழகத்தின் சார்பில், மார்ச் 1-மாலை 5 மணி அளவில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், திராவிட நாயகன் தலைவர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்.

    இந்த விழாவுக்கு தலைமை வகிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகப் பொருளாளரும், கழக பாராளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்று பேசுகிறார்.

    இந்தியாவில் இருக்கும் முதலமைச்சர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக் கூடிய மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பேசுவதற்காக இந்தியாவே வருகிறது என்று சொல்லத்தக்க வகையில் அகில இந்தியத் தலைவர்கள் அணிவகுக்க இருக்கிறார்கள்.

    அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லாவும், சமாஜ்வாடி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ்வும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ்வும் வருகை தந்து நம் முதலமைச்சரை வாழ்த்த இருக்கிறார்கள். நமது தலைவர் ஏற்புரை ஆற்ற இருக்கிறார்.

    சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நன்றி கூறுகிறார். சென்னை மாவட்ட கழக செயலாளர்கள் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமைக் கழகத்தின் சார்பில் மேற்கொள்வார்கள்.

    நம்முடைய தலைவரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாற இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போகும் மகத்தான பல்வேறு செயல்களுக்கு தொடக்கமாகவும் அமையப் போகிறது. இந்தியாவின் புதிய விடியலுக்கான பிறந்தநாளாகவும் அமையப்போகிறது.

    எழுச்சிமிகு இயக்கத்தின் ஏற்றமிகு தலைவருக்கு 70-வது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல கழகத்தின் இந்நாள்-முன்னாள் அமைச்சர்கள், இந்நாள்-முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற இந்நாள்-முன்னாள் உறுப்பினர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×