search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்கழி மாத பிறப்பு"

    • அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
    • திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கார்த்திகை மாதம் முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மார்கழி மாத பிறப்பு மற்றும் விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது மற்றும் கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் ராஜகோபுரத்தின் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

     வட மற்றும் தென் ஒத்தவாடை தெரு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். சாமி தாிசனம் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பாவை விழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவில், அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில், இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்களில் மார்கழி மாத திருப்பாவை விழா நடந்தது.

    ஆரணி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை வளர்பிறை பஞ்சமி விழாவையொட்டி வராகி அம்மனுக்கு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேத்துப்பட்டு இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கடுங்குளிரிலும் அதிகாலையில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வணங்கினர். இஞ்சிமேடு பெரிய மலை திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. ஆவணியாபுரம் சிம்மமலையில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தேசூர் ஆதிகேசவபெருமாள் கோவில், சேத்துப்பட்டு வரத சஞ்சீவிராய பெருமாள் கோவில், பெரிய கொழப்பலூர் காரக தூஷணபெருமாள் கோவில், திருக்குராயீஸ்வரர், திருமால்பாடி ரங்கநாத பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு போளூர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. போளூர் மலை மீது அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில், வெண்மணியில் அமைந்துள்ள விநாயகர் கோவில், குன்னத்தூரில் அமைந்துள்ள பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×