search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பலூரில் 144 தடை"

    பெரம்பலூர் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையேயான மோதலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #144Ban
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் வளாகத்தில் ராயப்பர், செல்லியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் போது சுவாமி வீதி உலா நடைபெறும். அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் தங்கள் பகுதியில் வீதி உலா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் விழாவின் போது இரு தரப்பினரிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இந்த ஆண்டு இன்று முதல் 3 நாட்கள் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் தரப்பில் இன்று ஒருநாள் மட்டும் விழா நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் 3 நாட்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணியினர் மற்றும் பக்தர்கள் சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி 3 நாட்கள் விழாவை நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகியதோடு, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து வி.களத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவிட்டார். வருகிற 4-ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதையடுத்து அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க அதிரடி படை போலீசாரும் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை உத்தரவு நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. #144Ban
    விநாயகர் ஊர்வலம் முடிவடைந்ததை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி தாலுகாவில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலையுடன் விலக்கிக்கொள்ளப்பட்டது. #VinayagarChaturthi
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வீரவிநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ள ஓம்காளி மைதானத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக பொதுமக்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    மேலூர் பகுதியில் ஊர்வலம் சென்றபோது அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த வழியாக ஊர்வலம் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்போடு செல்ல முயன்றபோது இரு தரப்பினர் இடையே மோதல் உண்டானது. பலர் காயம் அடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

    இதனால் செங்கோட்டை பகுதியில் பதட்டம் நிலவியது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் செங்கோட்டையில் முகாமிட்டு இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், நெல்லை மாநகர துணை கமி‌ஷனர் (சட்டம்ஒழுங்கு) சுகுணா சிங் ஆகியோரும் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.

    தொடர்ந்து மாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்து அமைப்பினர் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தி ஊர்வலத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனால் 2-வது நாளாக நேற்றும் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் 11 டாஸ்மாக் மதுக்கடைகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று மாலை செங்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதையொட்டி செங்கோட்டை நகர் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செங்கோட்டை வண்டி மறிச்சம்மன் கோவில் திடல் முன்பு உள்ள ஓம் காளி திடலுக்கு வேன், லோடு ஆட்டோ, ஆட்டோக்கள் மூலம் 7 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டன.

    ஊர்வலம் செல்வவிநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலகம், மேலூர் வழியாக பம்ப் ஹவுஸ் ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பதிலுக்கு அவர்களும் கற்களை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அங்கு நின்ற வஜ்ரா வாகனம் மீதும் கல்வீசப்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன. தகவல் அறிந்த தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் அங்கு விரைந்து வந்தார். அவரது காரும் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது. இதையடுத்து அவர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

    இதனிடையே ஊர்வலம் நடந்துகொண்டிருந்தபோது மேலூர் சேனைத்தலைவர் விநாயகர் கோவில் தெருவில் உள்ள சுப்பையா என்பவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த குண்டு வீட்டின் ஜன்னல் பகுதியில் விழுந்தது. இதனால் மரக்கதவு தீப்பிடித்து எரிந்தது. ஆட்டோவில் வந்த 3 பேர், வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது.

    அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதும் ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அந்த ஆட்டோவை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு மறியலில் ஈடுபட்டார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஊர்வலம் மேல பஜார் பகுதியில் வந்தபோது மீண்டும் கல்வீச்சு சம்பவம் நடந்தது. அப்‌பகுதியில் கலெக்டர் ஷில்பா நின்று கொண்டு, ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார். அவரது கார் மீதும் கற்கள் விழுந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அம்பை டி.எஸ்.பி. ஜாகீர் உசேன் காரும் கல்வீசி தாக்கப்பட்டது. மேலும் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் மீண்டும் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை கலைத்தனர்.

    பின்னர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஊர்வலத்தில் வந்த‌வர்களும், எதிர்தரப்பினரும் கலெக்டரிடம் மாறி மாறி புகார் செய்தனர். அதற்கு அவர் யார் மீது தவறு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு, காசி கடை தெரு, கீழ பஜார், போலீஸ் நிலையம் வழியாக இரவு 7.30 மணியளவில் செங்கோட்டை நகரின் எல்லையான குண்டாற்றை வந்தடைந்தது.

    அங்கு ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதியில் 3‍-வது நாளாக இன்றும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். போலீசார் ரோந்து சுற்றிவந்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடர்ந்து செங்கோட்டை பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. இன்று செங்கோட்டையில் கடைகள் திறக்கப்பட்டன. இயல்புநிலை திரும்பியது. ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. எனினும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனிடையே ஊர்வலம் முடிவடைந்ததை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி தாலுகாவில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலையுடன் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனிடையே ஊர்வலத்தில் கல்வீசியது, பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக செங்கோட்டை பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள். செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  #VinayagarChaturthi

    எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. #BharatBandh #SCSTAmendmentAct
    புதுடெல்லி:

    எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன்  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

    வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்து இருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு, அண்மையில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது.



    இந்த நிலையில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளன. உயர்ஜாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் டயர்களை சாலையில் கொளுத்திப்போட்டும், மரங்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பதற்றம் நிறைந்த 35 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பிற்பகல் 2 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    உத்தரபிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பீகாரின் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் டெர்மினல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. #BharatBandh #SCSTAmendmentAct

    வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் நாளை (புதன்கிழமை) வீரன் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்திடவும் நாளை காலை 5 மணி முதல் 12-ந் தேதி காலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, கட்டாலங்குளம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், கட்டாலங்குளம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்து விழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள், சுருள் கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆயுதங்கள் மற்றும் ஜோதி (விழா நிகழ்விடத்தில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு வெளியே) கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் விழாவில் கலந்துகொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    வீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழாவானது அமைதியான முறையில் நடக்க மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவு அமலில் இருக்கும் நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி அனுமதி பெற வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×