search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar Chaturthi Rally"

    தென்காசியில் பா.ஜ.க. நிர்வாகியின் கடை உள்பட 2 கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தென்காசி:

    செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தென்காசி பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்கனவே தென்காசி தாலுகா பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    தென்காசி நகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றிவந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    இந்தநிலையில் நேற்றிரவு தென்காசியில் 2 கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசியை சேர்ந்தவர் ஜீவன்ராம். இவர் மேல ஆவணி மூலவீதியில் பேன்சி கடை வைத்துள்ளார். இரவு இந்த கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதனால் கடையில் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதே போல் வாய்க்கால் பாலத்தில் ராஜாசிங் என்பவரது மளிகை கடைக்கும் தீ வைக்கப்பட்டது. ராஜா சிங் பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து தென்காசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ வைத்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    விநாயகர் ஊர்வலம் முடிவடைந்ததை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி தாலுகாவில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலையுடன் விலக்கிக்கொள்ளப்பட்டது. #VinayagarChaturthi
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வீரவிநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ள ஓம்காளி மைதானத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக பொதுமக்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    மேலூர் பகுதியில் ஊர்வலம் சென்றபோது அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த வழியாக ஊர்வலம் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்போடு செல்ல முயன்றபோது இரு தரப்பினர் இடையே மோதல் உண்டானது. பலர் காயம் அடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

    இதனால் செங்கோட்டை பகுதியில் பதட்டம் நிலவியது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் செங்கோட்டையில் முகாமிட்டு இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், நெல்லை மாநகர துணை கமி‌ஷனர் (சட்டம்ஒழுங்கு) சுகுணா சிங் ஆகியோரும் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.

    தொடர்ந்து மாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்து அமைப்பினர் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தி ஊர்வலத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனால் 2-வது நாளாக நேற்றும் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் 11 டாஸ்மாக் மதுக்கடைகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று மாலை செங்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதையொட்டி செங்கோட்டை நகர் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செங்கோட்டை வண்டி மறிச்சம்மன் கோவில் திடல் முன்பு உள்ள ஓம் காளி திடலுக்கு வேன், லோடு ஆட்டோ, ஆட்டோக்கள் மூலம் 7 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டன.

    ஊர்வலம் செல்வவிநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலகம், மேலூர் வழியாக பம்ப் ஹவுஸ் ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பதிலுக்கு அவர்களும் கற்களை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அங்கு நின்ற வஜ்ரா வாகனம் மீதும் கல்வீசப்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன. தகவல் அறிந்த தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் அங்கு விரைந்து வந்தார். அவரது காரும் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது. இதையடுத்து அவர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

    இதனிடையே ஊர்வலம் நடந்துகொண்டிருந்தபோது மேலூர் சேனைத்தலைவர் விநாயகர் கோவில் தெருவில் உள்ள சுப்பையா என்பவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த குண்டு வீட்டின் ஜன்னல் பகுதியில் விழுந்தது. இதனால் மரக்கதவு தீப்பிடித்து எரிந்தது. ஆட்டோவில் வந்த 3 பேர், வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது.

    அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதும் ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அந்த ஆட்டோவை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு மறியலில் ஈடுபட்டார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஊர்வலம் மேல பஜார் பகுதியில் வந்தபோது மீண்டும் கல்வீச்சு சம்பவம் நடந்தது. அப்‌பகுதியில் கலெக்டர் ஷில்பா நின்று கொண்டு, ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார். அவரது கார் மீதும் கற்கள் விழுந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அம்பை டி.எஸ்.பி. ஜாகீர் உசேன் காரும் கல்வீசி தாக்கப்பட்டது. மேலும் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் மீண்டும் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை கலைத்தனர்.

    பின்னர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஊர்வலத்தில் வந்த‌வர்களும், எதிர்தரப்பினரும் கலெக்டரிடம் மாறி மாறி புகார் செய்தனர். அதற்கு அவர் யார் மீது தவறு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு, காசி கடை தெரு, கீழ பஜார், போலீஸ் நிலையம் வழியாக இரவு 7.30 மணியளவில் செங்கோட்டை நகரின் எல்லையான குண்டாற்றை வந்தடைந்தது.

    அங்கு ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதியில் 3‍-வது நாளாக இன்றும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். போலீசார் ரோந்து சுற்றிவந்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடர்ந்து செங்கோட்டை பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. இன்று செங்கோட்டையில் கடைகள் திறக்கப்பட்டன. இயல்புநிலை திரும்பியது. ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. எனினும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனிடையே ஊர்வலம் முடிவடைந்ததை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி தாலுகாவில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலையுடன் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனிடையே ஊர்வலத்தில் கல்வீசியது, பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக செங்கோட்டை பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள். செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  #VinayagarChaturthi

    ×