search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு நிவாரணம்"

    கஜா புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு இரண்டாவது கட்டமாக 353 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GajaCyclone #GajaCycloneRelief
    புதுடெல்லி:

    கஜா புயல் நாகை அருகே வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தன. பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதையடுத்து, கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அதன்பின்னர், டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து முதல்கட்ட அறிக்கை அளித்தார்.
    கஜா புயல் நிவாரணமாக 15000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து அனுப்புமாறு கோரினார்.

    அதைத்தொடர்ந்து, சென்னை வந்த மத்திய குழுவினர் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வறிக்கை மத்திய அரசிடம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு இரண்டாவது கட்டமாக ரூ.353 கோடி நிதியை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நிவாரண தொகையை மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அளித்துள்ள இடைக்கால அறிக்கையின் படியும், மத்திய குழுவின் ஆய்வறிக்கையின் படியும் இந்த நிதியை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GajaCyclone #GajaCycloneRelief
    சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.

    அந்த மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.

    இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றபோது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 19 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

    சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டிய ராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன் குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

    இந்நிலையில், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #BhilaiSteelPlant  #BhilaiSteelPlantblast
    ×