search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை"

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ரூ.1,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக நடக்கிறது.

    மதுரை:

    மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையின்போது, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் 36 மாதங்களில் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்தது. இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தது.

    ஆனால், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை என்றும், கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்த மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மற்றொரு வழக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என முடிவு எடுக்க நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி ஆகியோர்முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசின் குடும்பநல அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ரூ.1,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் முடிவதற்கு 5 வருடம் 8 மாதம் ஆகும். (அதாவது 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2026-ம் ஆண்டு அக்டோபர் வரை). அதிக செலவு மற்றும் கூடுதல் காலத்துக்கான மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கப்பட்டு செலவினத்துறையின் பரிசீலனையில் உள்ளது.

    இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக நடக்கிறது. மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    பின்னர் அரசு தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், மேற்கண்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மனுதாரர் நேரில் ஆஜராகி, 2014-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 8 மாநிலங்களில் மத்திய அரசின் சொந்த நிதியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை கட்டியுள்ளனர். சமீபத்தில் கூட இமாசலப்பிரதேசத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தாமதம் ஏன்? என்பது தெரியவில்லை என்றார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடியும் என்று தெரிவிக்கிறீர்கள்? அது சாத்தியமா? அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டு உள்ளன? என்ற நிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் நேரில் ஆய்வு செய்ய முடிவு.
    • அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பாக செயல்படுத்துவோம்

    கடந்த 2019- ஆண்டு பிரதமர் மோடியால் மதுரை அருகே தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மதுரையில் உள்ள வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பது, குறித்த உத்தரவு தற்போதுதான் கிடைத்திருக்கிறது. முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறேன்.

    இதுவரை நடந்தது குறித்த முழு விவரங்களை சேகரிக்க வேண்டி இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். அதன்படி அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். எல்லா தரப்பினரையும் ஒருங்கிணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பாக செயல்படுத்த பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.
    • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியபடி 95 சதவீத பணி நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை நாங்கள் பார்க்கச் சென்றோம்.

    ஆண்டிபட்டி:

    தமிழகம் வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரையில் 750 படுக்கைகள், 250 ஐ.சி.யு படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

    இதற்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பதில் அளித்து வருகின்றனர்.

    இதனிடையே தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியபடி 95 சதவீத பணி நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை நாங்கள் பார்க்கச் சென்றோம். அப்போது அங்கு கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களை காணவில்லை. எனவே மாயமான கட்டிடங்களை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
    • டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக 31-வது கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் இதுவரை 12 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 87.7 சதவீதம் பேர்களும், 2-ம் தவணை தடுப்பூசி 55.9 சதவீதம் பேர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    15 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 89.4 சதவீதம் நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி 74.4 சதவீதம் நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    மேலும் 65 ஆயிரத்து 253 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 910 தடுப்பூசிகள், தமிழ்நாடு மாநில அளவில் 76 லட்சத்து 89 ஆயிரத்து 40 தடுப்பூசிகள் என போதிய கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

    முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனைகள் விரைவில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். அதேபோன்று புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் கட்டுவதற்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் விரைவில் வெளியிடப்பட்டு 5 மாதங்களுக்குள் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 2,500 முதல் 2,700 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த மாதங்களாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

    மருத்துவத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் மாத இறுதிக்குள் 1,021 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 4,308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மதுரை பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×