search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ma Subramaniyan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு செல்வது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.
    • முன்பே பாதுகாப்பு கேட்டிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் விழிப்புணர்வு மராத்தான் போட்டி இன்று நடைபெற்றது. அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் சங்கரன்கோவில் முதல் குருக்கள்பட்டி வரை 11 கிலோ மீட்டர் மராத்தானில் பங்கேற்று ஓடினார்.

    இதைத்தொடர்ந்து சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சி பட்டிக்கு சென்றார். அங்கு புற்றுநோயால் 2 பேர் இறந்தனர். அதற்கு அங்குள்ள மண், சுகாதாரமற்ற முறையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், அங்குள்ள மண் மற்றும் தண்ணீரை மருத்துவ குழுவினருடன் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு சென்ற ஒரு தரப்பினர் தலைமை கழகத்திற்கு சென்று சூறையாடி தகராறில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு செல்வது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. முன்பே பாதுகாப்பு கேட்டிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்.

    வானகரம் செல்வதற்கு முன்பாக அவ்வை சண்முகம் சாலை தலைமை கழகத்திற்கு செல்வதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செங்கோட்டையை சேர்ந்த இசக்கியம்மாள் என்ற 6 வயது சிறுமி கடந்த ஆண்டு தவறுதலாக பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டதால் அவரது உடல் நிலை பாதிப்படைந்தது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அதன்பேரில் சிறுமியை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

    இன்று தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செங்கோட்டையில் உள்ள சிறுமி இசக்கியம்மாள் வீட்டிற்கு சென்று சிறுமியை மடியில் தூக்கி வைத்து அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்து கேட்டறிந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
    • டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக 31-வது கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் இதுவரை 12 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 87.7 சதவீதம் பேர்களும், 2-ம் தவணை தடுப்பூசி 55.9 சதவீதம் பேர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    15 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 89.4 சதவீதம் நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி 74.4 சதவீதம் நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    மேலும் 65 ஆயிரத்து 253 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 910 தடுப்பூசிகள், தமிழ்நாடு மாநில அளவில் 76 லட்சத்து 89 ஆயிரத்து 40 தடுப்பூசிகள் என போதிய கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

    முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனைகள் விரைவில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். அதேபோன்று புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் கட்டுவதற்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் விரைவில் வெளியிடப்பட்டு 5 மாதங்களுக்குள் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 2,500 முதல் 2,700 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த மாதங்களாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

    மருத்துவத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் மாத இறுதிக்குள் 1,021 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 4,308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மதுரை பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் பெரும்பாலான கண் பிரச்சினைகள் மற்றும் பார்வை இழப்புகளை தடுக்க முடியும்.
    • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 460 முகாம்கள் நடைபெற்றுள்ளன.

    சென்னை:

    கண்அறுவை சிகிச்சை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. கருத்தரங்கின் செயலரும், டாக்டர். அகர்வால் கண் மருத்துவ குழுமத் தலைவருமான அமர் அகர்வால் தலைமை வகித்தார்.

    பொருளாளரும், ராஜன் கண் மருத்துவமனை தலைவருமான மோகன்ராஜன், அறிவியல் குழுத் தலைவர் மஹிபால் எஸ்.சச்தேவ், அகில இந்திய கண் மருத்துவவியல் சங்கத்தின் அறிவியல் குழு தலைவர் லலித்வர்மா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவவியல் துறை டாக்டர் நர்மதா ஷர்மா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.

    கருத்தரங்கை தொடங்கி வைத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    இந்தியாவில் கண் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. பார்வை திறன் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிப்பது கவலைக்குரியது.

    ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் பெரும்பாலான கண் பிரச்சினைகள் மற்றும் பார்வை இழப்புகளை தடுக்க முடியும்.

    கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 460 முகாம்கள் நடைபெற்றுள்ளன.

    இனி நடைபெறும் முகாம்களில் ஏழைகள் பயன்பெறும் வகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும். கண்புரை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு, கண் மருத்துவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டாக்டர் அமர் அகர்வால் பேசும் போது, கண்புரை பாதிப்பில் சிக்கலான சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கு, வெவ்வேறு வழி முறைகளையும், அறுவை சிகிச்சை உத்திகளை அறிந்து கொள்ளவும் இந்த கருத்தரங்கு உதவும் என்றார்.

    அலைமோதிய மக்கள் கூட்டத்திற்கிடையில் உஸ்மான் ரோட்டில் இருந்து ரெயில் நிலையம் வரை இரண்டு முறை நடந்து சென்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும்படி வலியுறுத்தினார்கள்.
    சென்னை:

    பண்டிகை காலங்களில் கொரோனா பரவலுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. அதிகமான கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் முக கவசம் அணிந்து கவனமாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறையினர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறார்கள்.

    இருப்பினும் மக்கள் கவனக்குறைவாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் ரங்கநாதன் தெருவில் கடந்த சில தினங்களாக கூட்டம் அலைமோதியது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காற்றில் பறந்து விட்டன.

    இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங்பேடி, மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் நேற்று இரவில் திடீரென்று ரங்கநாதன் தெருவுக்கு சென்றார்கள்.

    அலை மோதிய மக்கள் கூட்டத்திற்கிடையில் உஸ்மான் ரோட்டில் இருந்து ரெயில் நிலையம் வரை இரண்டு முறை நடந்து சென்று ஒலிபெருக்கி மூலம் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும் படி வலியுறுத்தினார்கள்.

    பெரும்பாலானவர்கள் முக கவசத்தை முறையாக அணியாமல் தாடையில் போட்டு இருந்தார்கள். அவர்களை வாய் மற்றும் மூக்கு மூடி இருக்கும்படி முறையாக அணிய வைத்தார்கள்.

    மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு மாஸ்க்குகளையும் வழங்கினார்கள்.

    தெருவில் 50-க்கும் மேற்பட்ட தெருவோர தின்பண்ட கடைகள் இருந்தன. போண்டா, பஜ்ஜி, வடை, சென்னா, காலிபிளவர் பக்கோடா, பானிபூரி, பேல்பூரி என்று வகை வகையான தின்பண்டங்கள் விற்கப்பட்டன.

    மழை கொட்டியபோது சென்னாவுக்குள் மழை தண்ணீரும் கலந்து கொண்டிருந்தது. அந்த கடைகளில் எல்லாம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி கூடி நின்று சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

    ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இப்படி உணவு பொருட்களை வாங்கி சுவைத்து கொண்டிருந்தவர்களால் கொரோனா பரவலுக்கு வழி வகுத்து விடும் என்பதால் தெருவோர தின்பண்ட கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடும்படி உத்தரவிட்டார். நாளை மறுநாள் (4-ந்தேதி) வரை இந்த கடைகள் செயல்பட கூடாது என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து தெருவோர தின்பண்ட கடைகளும் மூடப்பட்டன.

    ×