search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கநாதன் தெருவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    ரங்கநாதன் தெருவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    ரங்கநாதன் தெருவில் 50-க்கும் மேற்பட்ட தெருவோர தின்பண்ட கடைகள் 4-ந்தேதி வரை செயல்பட தடை

    அலைமோதிய மக்கள் கூட்டத்திற்கிடையில் உஸ்மான் ரோட்டில் இருந்து ரெயில் நிலையம் வரை இரண்டு முறை நடந்து சென்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும்படி வலியுறுத்தினார்கள்.
    சென்னை:

    பண்டிகை காலங்களில் கொரோனா பரவலுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. அதிகமான கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் முக கவசம் அணிந்து கவனமாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறையினர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறார்கள்.

    இருப்பினும் மக்கள் கவனக்குறைவாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் ரங்கநாதன் தெருவில் கடந்த சில தினங்களாக கூட்டம் அலைமோதியது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காற்றில் பறந்து விட்டன.

    இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை 
    அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    , சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங்பேடி, மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் நேற்று இரவில் திடீரென்று ரங்கநாதன் தெருவுக்கு சென்றார்கள்.

    அலை மோதிய மக்கள் கூட்டத்திற்கிடையில் உஸ்மான் ரோட்டில் இருந்து ரெயில் நிலையம் வரை இரண்டு முறை நடந்து சென்று ஒலிபெருக்கி மூலம் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும் படி வலியுறுத்தினார்கள்.

    பெரும்பாலானவர்கள் முக கவசத்தை முறையாக அணியாமல் தாடையில் போட்டு இருந்தார்கள். அவர்களை வாய் மற்றும் மூக்கு மூடி இருக்கும்படி முறையாக அணிய வைத்தார்கள்.

    மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு மாஸ்க்குகளையும் வழங்கினார்கள்.

    தெருவில் 50-க்கும் மேற்பட்ட தெருவோர தின்பண்ட கடைகள் இருந்தன. போண்டா, பஜ்ஜி, வடை, சென்னா, காலிபிளவர் பக்கோடா, பானிபூரி, பேல்பூரி என்று வகை வகையான தின்பண்டங்கள் விற்கப்பட்டன.

    மழை கொட்டியபோது சென்னாவுக்குள் மழை தண்ணீரும் கலந்து கொண்டிருந்தது. அந்த கடைகளில் எல்லாம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி கூடி நின்று சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

    ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இப்படி உணவு பொருட்களை வாங்கி சுவைத்து கொண்டிருந்தவர்களால் கொரோனா பரவலுக்கு வழி வகுத்து விடும் என்பதால் தெருவோர தின்பண்ட கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடும்படி உத்தரவிட்டார். நாளை மறுநாள் (4-ந்தேதி) வரை இந்த கடைகள் செயல்பட கூடாது என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து தெருவோர தின்பண்ட கடைகளும் மூடப்பட்டன.

    Next Story
    ×