search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைபிள் வாசகம்"

    • எல்லாவற்றிலும் இயேசு நமக்கு ஆறுதல் அளிக்க வல்லவராய் இருக்கிறார்.
    • இஸ்ரவேலின் மிகப்பெரிய ராஜாவான தாவீது ராஜா பிறந்தார்.

    அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி கீழ்ப்படிந்து அவரிடம் நாம் சரணடையும் போது நமக்கு ஆறுதல் தரும் தேவனாக அவர் இருக்கிறார்.

    சிலநேரங்களில் நாம் பயணிக்கும் சூழ்நிலைகளில் போராட்டம் இருக்கும், வேதனைகள், கண்ணீர், கஷ்டங்கள் இருக்கும். ஆனாலும் இயேசுவை நம்பி பயணத்தை தொடரும் பொழுது, நிச்சயமாக நாம் கண்ணீர் விடும் காரியங்களில், வேதனைப்படும் காரியங்களில், பயப்படும் காரியங்களில் எல்லாவற்றிலும் இயேசு நமக்கு ஆறுதல் அளிக்க வல்லவராய் இருக்கிறார்.

    வேதாகமத்தில் ரூத் என்ற குணசாலியான பெண்மணி பற்றி கூறப்பட்டுள்ளது. இவள் மோவாப் என்ற தேசத்தில் தன் கணவன் மற்றும் மாமியாருடன் நன்றாக வாழ்ந்து வருகிறாள். இவளுடைய கணவர் திடீரென மரித்துப்போனார். இவளுடைய மாமியார் பெயர் நகோமி ஆகும். இந்த நகோமிக்கும் கணவர் இல்லை.

    நகோமி தன்னுடைய மகன் இறந்ததும் தன் மருமகளை பார்த்து 'நீ உன் தாய் வீட்டுக்கு சென்று விடு, அங்கு கர்த்தர் உனக்குத் தரும் புருஷனுடன் சுகமாய் வாழ்ந்திரு' என்று சொல்லி மருமகளை வாழ்த்தி முத்தமிட்டாள்.

    அப்பொழுது ரூத் சத்தமிட்டு அழுது அவளைப்பார்த்து 'உன் கூடவே நானும் வருவேன்' என்றாள். `நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன், நீர் தங்குமிடத்திலே நானும் தங்குவேன், உம்முடைய தேவன் என்னுடைய தேவன், மரணமே அல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னை பிரிக்காது', என்று கூறி மாமியாருடன் செல்வதில் மன உறுதியாய் இருந்தாள்.

    பின்னர் இருவரும் இஸ்ரவேல் தேசத்தில் உள்ள நகோமியின் சொந்த ஊரான பெத்லகேமுக்கு வந்தார்கள். நகோமியைப் பார்த்த பெத்லேகம் ஊர் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் பேசினார்கள். நகோமி அவர்களிடம், `நான் நிறைவுள்ளவளாக இங்கிருந்து போனேன். கர்த்தர் என்னை வெறுமையாய் திரும்பி வரப்பண்ணினார். சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார். கர்த்தர் என்னை சிறுமைப்படுத்தினார்', என்று மிகுந்த வேதனையுடன் அவர்களிடம் தனக்கு நடந்ததை எல்லாம் கூறினாள்.

    அதன்பின்னர் ரூத் பிழைப்பிற்காக தோட்டத்தில் வேலை செய்வதற்கு சென்றாள். அவள் வேலை செய்யச் சென்ற வயல்வெளி போவாஸ் என்பவருடையது. இவர் நகோமியின் உறவுக்காரர். போவாஸ் ரூத்தைப் பார்த்து தன் தோட்ட மேலாளரிடம் 'இந்தபெண் எந்த இடத்தைச் சார்ந்தவள்' என்று கேட்டான்? அதற்கு அவன்' இவள் மோவாப் தேசத்தில் இருந்து நகோமி கூட வந்த மோவாபிய தேசத்துப்பெண்' என்று கூறி அவளுடைய எல்லா விவரத்தையும் தெரிவித்தான்.

    போவாஸ் ரூத்தைப் பார்த்து, `மகளே நீ வேறு வயலில் வேலைக்குப் போகாமலும், இந்த இடத்தை விட்டு போகாமலும், இங்கேயே என் ஊழியக்கார பெண்களோடு இருந்து வேலை செய். ஒருவரும் உனக்கு தீங்கிழைக்காதபடி வேலைக்காரருக்கு கட்டளையிட்டு இருக்கிறேன்' என்றார்.

    அப்பொழுது ரூத் தரையிலே முகம் குப்புற விழுந்து வணங்கி 'நான் அந்நிய தேசத்தவளாயிருக்க நீர் என்னை விசாரிக்கும்படி, எனக்கு எதனால் உம்முடைய கண்களில் தயை கிடைத்தது' என்றாள்.

    அதற்கு போவாஸ் `உன் புருஷன் மரணம் அடைந்தபின்பு நீ உன் மாமியாருக்காக செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் சொந்த தேசத்தையும் விட்டு முன்பின் அறியாத ஜனங்கள் இடத்தில் வந்தது எல்லாம் எனக்கு விவரமாய் தெரிவிக்கப்பட்டது. உன் செய்கைக்கு தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளை இடுவார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக' என்றார்.

    பின்னர், போவாஸ் தன்னுடைய வாழ்க்கைத்துணையாக இந்த குணசாலியான ரூத்தைத் தெரிந்து கொண்டார். இவர்களுடைய வம்சத்தில் தான் இஸ்ரவேலின் மிகப்பெரிய ராஜாவான தாவீது ராஜா பிறந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வம்சத்தில் தான் இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் பிறந்தார். என்ன ஒரு ஆனந்தம் பாருங்கள்.

    பிரியமானவர்களே, இந்த வேதாகம சம்பவத்தில் ஏராளமான காரியங்களை நாம் பார்க்கிறோம். மாமியாரிடம் உண்மையான அன்பு வைத்துள்ள மருமகள், மருமகளிடம் உண்மையான அன்பு வைத்துள்ள மாமியார். இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் நடந்துள்ள கசப்பான, கண்ணீர் சிந்தும் அனுபவங்கள். இவை எல்லாவற்றிலும் இருந்து கர்த்தர் இவர்களுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டி, மகிழ்ச்சியடைய பண்ணுகிறார்.

    இது போலத்தான் நம்முடைய வாழ்விலும் நமக்கு வருகின்ற வேதனைகள், கண்ணீர்கள், இழப்புகள் எல்லாவற்றிற்கும் பதிலாக நித்திய பேரின்ப மகிழ்ச்சி அளிக்க இயேசு வல்லவராய் இருக்கிறார். நம்முடைய துன்பத்துக்கும், அலைச்சல்களுக்கும், கண்ணீர்களுக்கும், சிறுமைப்பட்ட நாட்களுக்கும் சரியாய் நம்மை மகிழ்ச்சியாக இருக்கச்செய்வார், ஆமென்.

    ×